Rajinikanth: “தமிழர்கள் அந்த மாதிரி தான் இருப்பாங்க” அப்படி என்ன சொன்னார் ரஜினி... வைரலாகும் வீடியோ!

தமிழர்கள் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Jun 12, 2024 - 18:08
Rajinikanth: “தமிழர்கள் அந்த மாதிரி தான் இருப்பாங்க” அப்படி என்ன சொன்னார் ரஜினி... வைரலாகும் வீடியோ!

சென்னை: கடந்த சில தினங்களாகவே செம்ம பிஸியான மோடில் காணப்படுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு துபாய், அபுதாபி நாடுகளுக்கு சென்றிருந்த ரஜினி, அதனைத் தொடர்ந்து இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றார். அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி பதவியேற்பு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இந்நிலையில், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறக்கட்டளையின் பொன்விழாவில், காணொலி வழியாக கலந்துகொண்டார் ரஜினிகாந்த்.

அப்போது அவர் தமிழர்கள் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இந்தியாவில் அரசியல் தலைநகர் டெல்லி என்றால், பொருளாதர தலைநகர் மும்பை என சொல்லலாம். மும்பையில் தொழிலதிபர்கள் அம்பானி, டாடா குழுமத்தினர் பலரும் நண்பர்களாக உள்ளனர். அவர்களது வீடுகளில் சென்று உணவு சாப்பிட்டுள்ளேன். அதேபோல், டெல்லியில் முன்னாள் பிரதமர்கள், இப்போது மோடி உட்பட பல அரசியல் தலைவர்களுடன் நட்பாக உள்ளேன். அவர்களையும் பலமுறை நேரில் சந்தித்து உரையாடிது உண்டு.

இந்த இரண்டு இடங்களிலும் அவர்களின் பெர்சனல் மேனேஜர்கள், பெர்சனல் அட்வைசர்கள் பெரும்பாலும் 70 சதவீதம் தமிழர்கள் தான். இதுபற்றி அவர்களிடமே கேட்டதாகவும், அதற்கு தமிழர்கள் நல்ல உழைப்பாளிகள், நன்றியுள்ளவங்க, நாணயமா இருப்பாங்க, அதுதான் தமிழர்களின் குணம். அதெல்லாம் இருப்பதால தான் தமிழர்கள் எங்க போனாலும் ஜெயிப்பதாக ரஜினி பேசியுள்ளார். மேலும், 2047ல் இந்தியா வல்லரசாக மாறும் எனவும், 10, 15 வருடங்களில் இந்தியா பொருளாதார ரீதியாக பெரிய மாற்றம் பெரும் என்றும் கூறினார். அதேபோல், அமெரிக்காவிலேயே இருந்துவிடாமல் உங்கள் குழந்தைகளுக்கு திருமணம் முடிந்ததும் சொந்த ஊருக்கு வந்து செட்டில் ஆகிடுங்க என ஜாலியாக அட்வைஸ் செய்தார்.

இதற்கு உதாரணமாக ரஜினி சொன்ன பழமொழியும் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது பிச்சை எடுத்தாலும் சொந்த ஊர்ல எடுக்கக் கூடாது, வெளியூர் போய்டணும். அதேமாதிரி செத்தாலும் வெளியூர்ல சாக கூடாது, உள்ளூர்ல தான் சாகணும் என அவரது ஸ்டைலில் பஞ்ச் அடித்தார். அதேபோல், சொந்த ஊர் வந்து உங்களது பழைய நினைவுகளை தேடுங்கள், நீங்க சைட் அடித்த பொண்ணுங்கள பார்த்து... சாரி.. அந்த கெழவிகள பார்த்து என்ஜாய் பண்ணுங்க என ஜாலியாக பங்கம் செய்தார். அதேபோல் 50 ஆண்டுகளாக நான் சினிமாவில் நடித்து வருவதற்கு உங்களின் ஆசீர்வாதமும் ஆதரவும் தான் காரணம் எனக் கூறிய ரஜினி, தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல், ஈகோ இல்லாமல், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து வாழ்ந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றார்.

அதன்பின்னர் இளையராஜா குறித்து பேசிய ரஜினி, கமல்ஹாசனுக்கு தான் அவர் நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்ததாக ஜாலியாக அவரை கலாய்த்தார். எனக்கு ஆரம்பத்தில் நல்ல பாடல்கள் கொடுத்திருந்தாலும், கமல் தான் இளையராஜாவை அப்படியே மயக்கிவிட்டார் என்பதாகவும் பேசினார். கமல்ஹாசன் வித்தியாசமான படங்கள் எடுத்ததால் அவருக்கு இளையராஜாவால் சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுக்க முடிந்ததும் உண்மை எனக் கூறினார் ரஜினிகாந்த். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow