தலைவர் படத்தை வச்சே SCAM - ஆ ! தர்மன் - ல் நடிக்க ஆசைகாட்டி பணமோசடி செய்த கும்பல் !

ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு மற்றும் லட்சக் கணக்கில் சம்பளம் தருவதாக ஆசை காட்டி பணம் வசூலித்ததாக எழுந்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sep 23, 2026 - 12:43
தலைவர் படத்தை வச்சே SCAM - ஆ ! தர்மன் - ல் நடிக்க ஆசைகாட்டி பணமோசடி செய்த கும்பல் !
Dharman Movie Casting Scam Complaint !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படம் தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. இப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி சிலர் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிக்க வாய்ப்பு தருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் :

‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அந்த படத்தில் நடிக்க புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பு இருப்பதாக சிலர் சமூக வலைதளங்களில் விளம்பரங்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

‘ஆகாஷ் காஸ்டியூம்ஸ்’ என்ற பெயரில் வெளியானதாக கூறப்படும் அந்த விளம்பரத்தில், தாய்லாந்தில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும், அதற்காக நடிகர் அடையாள அட்டை பெற ரூ.12,500 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.18 லட்சம் சம்பளம் கிடைக்கும் என ஆசை காட்டியதாக புகார் :

மேலும், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புடன் ரூ.18 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என கூறி பலரிடம் இருந்து பணம் பெற முயற்சி செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தை நம்பி சிலர் பணம் செலுத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு :

இந்த புகார் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மூலம் தேனாம்பேட்டை போலீசாருக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் விளம்பரம் உண்மையில் யாரால் வெளியிடப்பட்டது, அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.

எத்தனை பேரிடம் பணம் பெறப்பட்டது? 

இந்த மோசடி முயற்சியில் இதுவரை எத்தனை பேர் சிக்கியுள்ளனர், யாரெல்லாம் பணம் செலுத்தியுள்ளனர் என்பது குறித்த தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

விசாரணை முடிவில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow