தமிழகத்தை குறிவைக்கும் புயல்? சென்னை, கடலூருக்கு காத்திருக்கும் கனமழை!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்தடுத்த நாட்களில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதால், சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Nov 14, 2026 - 07:34
தமிழகத்தை குறிவைக்கும் புயல்? சென்னை, கடலூருக்கு காத்திருக்கும் கனமழை!
rain alert

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தப் புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தின் வட கடலோரப் பகுதிகளை நோக்கி வரக்கூடும் எனத் தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்னை, கடலூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

மத்திய அந்தமான் கடல் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகவும், நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.

தொடர்ந்து நகரும் இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை மறுநாள் மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் எங்கெல்லாம் மழை?

இந்த வானிலை மாற்றம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்யக்கூடும்.

நாளையும், நாளை மறுநாளும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்கக்கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட வாய்ப்புள்ளதால், தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு வரும் 17ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, கடலூரை நோக்கி வருகிறதா புயல்?

இந்தப் புயலின் நகர்வு மற்றும் கரையைக் கடக்கும் இடம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியதாவது:

நாளை மறுநாள் புயல் உருவாகும் என்றும், தொடர்ந்து 17ஆம் தேதி தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரேபிய, பசிபிக் உயர் அழுத்தப் பகுதிகள் மற்றும் மேற்கத்திய தாழ்வு நிலை உள்ளிட்ட வானிலை காரணிகளால் புயல் ஒரே இடத்தில் பல மணி நேரம் நீடித்த பின்னர் மெதுவாக நகரக்கூடும்.

மேலும், 19ஆம் தேதி இரவு முதல் 20ஆம் தேதி காலை வரை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. சென்னை - கடலூர் பகுதியை மையமாகக் கொண்டோ, புதுச்சேரி வழியாகவோ அல்லது ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகிலோ கரையைக் கடக்குமா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், “முரசு, அர்னாப் புயல்களைப் போல இந்தப் புயல் தமிழகத்தை ஏமாற்றாது. வட தமிழகத்துக்கு நல்ல மழையைக் கொடுத்துவிட்டுத்தான் செல்லும். சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள்மாவட்டங்களில் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்தப் புயலால் காற்று பாதிப்பு இருக்காது. கடல் சார்ந்த அலைவுகள் சாதகமாக இருப்பதால் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை ஏமாற்றாத புயல்?

இந்தப் புயல் வட தமிழகப் பகுதிகளுக்கு நல்ல மழையைக் கொடுக்கும் என்ற தனியார் வானிலை ஆய்வாளரின் கணிப்பு மக்களிடையே கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக சென்னை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட வட கடலோரப் பகுதிகளில் மழையின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகளில்தான் தெரியவரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow