அடடா மழைடா.. மனம் குளிர்ந்த மதுரைவாசிகள்.. மஞ்சள் அலர்ட்.. உங்க ஊர் இருக்கா செக் பண்ணுங்க
இடி மின்னலோடு கொட்டித்தீர்த்த கனமழையால் மதுரையிலும் புறநகரிலும் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. இன்று தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
அக்னி நட்சத்திர காலத்தில் அனல் காற்றோடு வெயில் சுட்டெரித்து வருகிறது. அவ்வப்போது வெயிலுக்கு இதமாக மாலை நேரங்களில் குளிர் காற்று வீசி மழையும் பெய்து வருகிறது. கோடை வெயிலுக்கு இதமாக மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது.
நேற்றைய தினம் மதுரையில் கனமழை கொட்டித்தீர்த்தது. உசிலம்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் பிற்பகல் நேரத்தில் கரு மேகங்கள் வானில் திரண்டு மழையாக பொழிந்தது.
வெளுத்து வாங்கிய இந்த கனமழையால் மதுரை மாட்டுத்தாவணி, அண்ணாநகர், காமராஜர் சாலை, கீழவாசல், பெரியார் நிலையம், உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் ஆறு போல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த படி மெதுவாக ஊர்ந்து சென்றனர். இந்த கனமழையால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளைய தினம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், வரும் 13 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரத்திற்கு முன் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. 100 டிகிரி பாரன்ஹீட்டைக் கடந்து வெப்பம் பதிவானது. இந்த நிலையில் தற்போது உஷ்ணத்தை தணிக்கும் வகையில் கோடை மழை கொட்டி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
What's Your Reaction?