தமிழகத்தை நோக்கி வரும் மழை ஆபத்து? வங்கக் கடலில் இன்று புதிய மாற்றம்!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் இன்று (அக். 23) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு வலுப்பெற்று புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக் கடலில் புதிய வானிலை மாற்றம்!
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழகம், கேரளப் பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இதற்கிடையே, தாய்லாந்து மற்றும் மியான்மர் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வடக்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது.
இந்தச் சுழற்சி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதால், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வலுப்பெற்றால் இது புயலாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது.
புயலாக மாறினால் ‘முரசு’ எனப் பெயர்!
புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறும் பட்சத்தில், அதற்கு ‘முரசு’ எனப் பெயரிடப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய கணிப்பின்படி, இந்தப் புயல் தமிழகத்தை நேரடியாகப் பாதிக்காது எனக் கூறப்படுகிறது. எனினும், தமிழகத்தில் நிலவும் பருவமழைச் சூழல் காரணமாக பல இடங்களில் மழை தொடர வாய்ப்புள்ளது.
இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
அக். 23-ம் தேதி கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் கனமழை பெய்யலாம்.
அக். 24: மலைப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
நாளை திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய இடங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
திருப்பூர், ஈரோடு, திருச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக். 25, 26: மழை தொடருமா?
அக். 25-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
அதே நாளில் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அக். 26-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று வானிலை எப்படி?
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 31–32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25–26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நவம்பரிலும் மழை வெளுக்குமா?
நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகமாகப் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் பருவமழை ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அரபிக்கடலில் ஏற்கெனவே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சோமாலியக் கடற்கரைப் பகுதிகளை நோக்கிச் சென்றுள்ளது.
அடுத்த சில நாட்கள் தமிழகத்திற்கு மழை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
What's Your Reaction?

