நடிகையிடம் மீண்டும் சைபர் கிரைம் மோசடி முயற்சி... வைரலாகும் வீடியோ பதிவு!

பகுதி நேர வேலை என கூறி பணம் பறிக்கும் கும்பல் குறித்த நடிகை ஷாலு ஷாமுவின் வீடியோ காணொளி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Aug 29, 2024 - 10:44
நடிகையிடம்  மீண்டும் சைபர் கிரைம் மோசடி முயற்சி... வைரலாகும் வீடியோ பதிவு!
நடிகையிடம் மீண்டும் சைபர் கிரைம் மோசடி முயற்சி

அண்மைக் காலமாகவே சைபர் கிரைம் மோசடி என்பது விதவிதமாக பொதுமக்களுக்கு அரங்கேறி வருகிறது. இதுகுறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் பணத்தை தொடர்ந்து பொதுமக்கள் இழந்துதான் வருகின்றனர். இதனை தடுக்க தன் பங்கிற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சில நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த சைபர் கிரைம் மோசடி முயற்சி குறித்து வீடியோ பதிவாக சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஷாலு ஷாமு ஏற்கனவே தன்னிடம் கிரெடிட் கார்டு மோசடி முயற்சி நிகழ்த்தப்பட்டது குறித்து வீடியோ பதிவை வெளியிட்டார். அவரது இந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதைத் தொடர்ந்து மற்றொரு நடிகையான சனம் ஷெட்டியும் தன்னிடம் டெலிகாம் ஊழியர் எனப் பேசி பண மோசடி செய்த விவகாரம் தொடர்பாக விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஷாலு ஷாமுவிடம் மற்றொரு வகையான சைபர் கிரைம் மோசடி முயற்சி அரங்கேறியுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து அழைப்பதாக கூறி whatsapp மூலமாக நடிகை ஷாலு ஷாமுவிடம் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு உள்ளார். அதில் அவர் தங்கள் நிறுவனம் இந்தியாவில் உள்ள ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட்கள் ஆகியவற்றின் தொழில் வளர்ச்சிக்காக செயல்படுகிறது எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், கூகுள் மேப்பில் நாங்கள் குறிப்பிட்ட ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்களுக்கு லைக் மற்றும் கமெண்ட்கள் போட்டு ஸ்க்ரீன் ஷாட் அனுப்பினால் கூகுள் பே அல்லது பேடிஎம் மூலமாக ஒவ்வொரு ரிவியூவிற்க்கும் ரூ. 150 அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அந்த அடிப்படையில் உதாரணத்திற்கு ஒரு ஹோட்டல் ரிவ்யூ செய்யுமாறு அனுப்பியதாகவும் 150 ரூபாய் பணம் அனுப்பியது போன்று ஸ்கிரீன் ஷாட் அனுப்பியதாகவும் தெரியவந்துள்ளது. இதேபோன்று பகுதி நேரத்தில் வேலை செய்தால் ரூ. 5000 முதல் ரூ. 10 ஆயிரம் வரை தினமும் சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி அனுப்பி ஆசை வார்த்தை கூறியதாக ஷாலு ஷாமு தெரிவித்துள்ளார்.

இந்த சைபர் கிரைம் மோசடி கும்பல் வாட்ஸ் அப் கால் அழைத்ததில் இருந்து, வாட்ஸ் அப்பில் எந்தெந்த மாதிரி எல்லாம் பேசி ஆசை வலையில் பொதுமக்களை விழ வைக்கிறார்கள் என்பதை வீடியோ பதிவாக நடிகை ஷாலு ஷாமு வெளியிட்டுள்ளார். இதுபோன்று சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் ஏமாறாதீர்கள் எனவும் இந்த எச்சரிக்கை பதிவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow