“வாழையடி வாழையாய் உன் தலைமுறையே சிறக்கும்” - மாரிசெல்வராஜை வாழ்த்திய பிரபலங்கள்
அண்மையில் வெளியான மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படத்தின் ட்ரெயிலரை பார்த்துவிட்டு சினிமா பிரபலங்கள் வாழ்த்தியுள்ளனர்.
பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தொடர்ந்து கர்ணன், மாமன்னன் என தரமான படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இவரது அடுத்த படமான வாழை வரும் வெள்ளிக் கிழமை வெளியாகிறது. கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா ரஞ்சித், நெல்சன், ரவிக்குமார், நித்திலன் சாமிநாதன், மிஷ்கின், தியாகராஜா குமாரராஜா, நடிகர்கள் சூரி, கவின், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிவகார்த்திகேயன், சிம்பு இருவரும் காணொளி வாயிலாக வாழை படத்திற்கு வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது பேசிய சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் ரொம்ப முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். தன்னோட வாழ்க்கைல நடந்த மிகப் பெரிய சோகத்தை இந்தப் படத்துல பதிவு செஞ்சிருக்கார். ஒரு வாழ்வியலை பதிவு செய்யும் போது அந்த சினிமாவே ரொம்ப அழகாகிடும். இந்தப் படம் மொத்தமும் மனதுக்கு நெருக்கமாக அப்படியொரு அனுபவத்தைத் தருகிறது. நடிகர்களும், டெக்னிக்கல் டீமும் வாழை படத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். கண்டிப்பாக இந்தப் படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல், சிம்புவும் வாழை படத்தை ரொம்பவே பாராட்டியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கியதில் கர்ணன், மாமன்னன் படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். மாரி செல்வராஜ்ஜும் நானும் சினிமா குறித்து நிறைய பேசியுள்ளோம். வாழை மாரி செல்வராஜ்ஜின் ரியல் லைஃப் ஸ்டோரியாக உருவாகியுள்ளது, சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றார். உண்மைச் சம்பவங்களை அப்படியே ரியலிஸ்ட்டிக்காக வாழை படத்தில் காட்டியுள்ளதாக மாரி செல்வராஜ்ஜை பாராட்டினார்.
இவர்களைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன், “மாரி செல்வராஜ் உன் வாழ்க்கையின் நல்ல பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு உன் படைப்புகளை பார்க்கத் தொடங்கினேன். பிரமிப்பாக இருந்தது. இப்போது வாழை திரைப்படத்தில் உன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையும் பார்த்தபிறகு, உன்மீதான மரியாதை ஆயிரம் மடங்காய் அதிகரித்திருக்கிறது. இனி, உன் படைப்புகள் மீதான மரியாதையும் அவ்வாறே கூடும். வாழையடி வாழையாய் உன் தலைமுறையே சிறக்கும். சிறப்புக் காட்சிக்கு அழைத்தாய், திரை பார்த்து மெய் சிலிர்த்தேன், மீண்டும் பார்க்கும் ஆவலோடு ஆகஸ்டு 23-க்காக காத்திருக்கிறேன். மனதைக் கவரும் வாழை திரைப்படத்தை தயாரித்ததற்காக திரைப்படக் குழுவுக்கு எனது பாராட்டுகள்” என தனது X தளத்தில் பதிவிட்டு பாராட்டியுள்ளார். \
மேலும் படிக்க: இந்தியன் 2 : ஒரு வீடு செட் மட்டுமே ரூ. 8 கோடி... கமல் ரசிகர்கள் கொந்தளிப்பு!
இவரைத் தொடர்ந்து விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம், “வாழை திரைப்படத்தைக் கடந்த ஆண்டே பார்த்துவிட்டேன். அது மாரி செல்வராஜ் அனுபவித்த வாழ்க்கை. இந்த மாதிரியான படங்களையெடுக்க அசாத்திய மனநிலை வேண்டும். மீண்டும் மீண்டும் இந்தக் காட்சிகளைத் திரும்பிப் பார்க்கும்போது பழைய நினைவுகள் இயக்குநருக்கு வலித்திருக்கும். இருந்தாலும், அவர் மக்களின் கதைகள் எல்லாரிடமும் சென்றடைய வேண்டும் என கடுமையாக உழைக்கிறார். கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் என் அப்பாவுக்குப் பின் மாரி சாரிடம்தான் பார்க்கிறேன். இவர் எனக்கு அப்பா, அண்ணா, குரு மாதிரி. எங்கோ வாழைத் தோட்டத்தில் வேலை செய்த சிறுவன் சென்னை வந்து தன் உழைப்பால் சினிமாவில் வென்றிருக்கிறார். அவரிடம் நான் நிறைய கற்று வருகிறேன்” என புகழ்ந்துள்ளார்.
What's Your Reaction?