CJP-ன் அடுத்த டார்கெட்... PM CARES-ஐ குடைய தொடங்கிய கரப்பான்பூச்சிகள்...!

நீட் முறைகேட்டை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான PM CARES Fund குறித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி குடைய தொடங்கியுள்ளது, ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Aug 20, 2026 - 14:00
Aug 20, 2026 - 12:43
CJP-ன் அடுத்த டார்கெட்... PM CARES-ஐ குடைய தொடங்கிய கரப்பான்பூச்சிகள்...!

கிராமப்புற பள்ளிகளின் அடிப்படை வசதிகளை சுட்டிக்காட்டும் வகையில் CJP சார்பில் ‘School Thik Karo’ என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பேசிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, நாட்டின் பல கிராமப்புற பள்ளிகளில் மாணவர்களுக்கு முறையான சாலை, அமர்வதற்கான பெஞ்சுகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை எனக் குற்றம்சாட்டினார்.

2025 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி PM CARES Fund-ல் ரூ.8,452 கோடி இருப்பதாக சமீபத்திய தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.7,846 கோடி நிலையான வைப்பு கணக்குகளிலும், ரூ.605 கோடி சேமிப்பு வங்கிக் கணக்குகளிலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதனை சுட்டிக்காட்டிய தீப்கே, பள்ளிகளுக்கு நிதி இல்லை என அதிகாரிகள் கூறும் நிலையில், PM CARES Fund-ல் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இருப்பதாக விமர்சித்தார். ஒரு நவீன வசதிகளுடன் கூடிய பள்ளியை அமைக்க சுமார் ரூ.8 கோடி செலவாகும் எனக் கணக்கிட்டால், ரூ.8,500 கோடியில் 1,000-க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப மாதிரி பள்ளிகளை அமைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவின் கிராமப்புற பள்ளிகளை சமீபத்தில் பார்வையிட்டபோது, அங்குள்ள நிலை மிகவும் மோசமாக இருப்பதை கண்டதாகவும், அடிப்படை வசதிகள் இல்லாததற்கு நிதி பற்றாக்குறையே காரணம் என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் தீப்கே கூறினார்.

மேலும், PM CARES நிதியை ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு பயன்படுத்த பிரதமர் மோடியிடம் மக்கள் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, 2024-25 நிதியாண்டில் PM CARES Fund-ல் இருந்து ரூ.87.85 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கான PM CARES for Children Scheme-க்காக ரூ.87.8 லட்சம் செலவிடப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது.

தீப்கே எழுப்பியுள்ள கேள்வி ஒருபுறம் இருக்க, PM CARES Fund தொடர்பான வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளும் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிதியில் எவ்வளவு பணம் உள்ளது, யார் யார் நன்கொடை அளித்துள்ளனர் என்பது போன்ற விவரங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை பெறுவது குறித்தும் சர்ச்சைகள் நீடித்து வருகின்றன.

அதேபோல், நாடாளுமன்றத்தில் PM CARES Fund தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள், அதன் நிர்வாகம் மற்றும் கணக்கு தணிக்கை தொடர்பான விவகாரங்களிலும் தொடர்ந்து விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) இந்த நிதியை தணிக்கை செய்ய முடியுமா? என்ற கேள்வியும் பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்டு வருகிறது.

இதனால், “அரசின் கட்டுப்பாட்டில் இல்லாதது போலவும், பொதுமக்களின் நிதி இல்லாதது போலவும் PM CARES Fund ஏன் இவ்வளவு ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது? அதில் இருக்கும் நிதியை மக்கள் நலனுக்காக, குறிப்பாக அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தக்கூடாதா?” என்ற கேள்விகள் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், PM CARES Fund-ல் இருக்கும் நிதியை அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற CJP-ன் கோரிக்கை, அந்த நிதியின் வெளிப்படைத்தன்மை மற்றும் பயன்பாடு குறித்த பழைய கேள்விகளை மீண்டும் கிளப்பியுள்ளதுடன், மத்திய அரசுக்கும் புதிய அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow