மேற்கு வங்கத்திலும் வெற்றிக் கொடி? தேர்தலில் போட்டியா? விஜய்யின் மாஸ்டர் பிளான் என்ன? 

தமிழ்நாட்டைத் தாண்டி மேற்கு வங்கத்திலும் தடம் பதித்த தவெக... அலுவலகம் திறக்கப்பட்ட விவகாரத்தில் கட்சித் தலைமை சொன்ன பதில் என்ன தெரியுமா?

Sep 30, 2026 - 12:00
Sep 30, 2026 - 10:49
மேற்கு வங்கத்திலும் வெற்றிக் கொடி? தேர்தலில் போட்டியா? விஜய்யின் மாஸ்டர் பிளான் என்ன? 

தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு, தமிழ்நாட்டைத் தாண்டியும் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மேற்கு வங்க மாநிலத்தில் தவெகவின் முதல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். ஆனால், இந்த அலுவலகத்துக்கும் கட்சித் தலைமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தவெக தலைமை விளக்கம் அளித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள ஃபகுபூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக அலுவலகம் திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் சுமார் 40 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். மாநில ஒருங்கிணைப்பாளர்களாகத் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட சஞ்சய் டி மற்றும் சைதாலி ராய் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

இந்த அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் டி, மேற்கு வங்கத்தில் தவெகவுக்கு ஏற்கெனவே சுமார் 5,000 உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், துர்கா பூஜைக்கு முன்பாக கொல்கத்தாவில் அடுத்த அலுவலகத்தைத் திறக்கவும், தொடர்ந்து முர்ஷிதாபாத், மால்டா உள்ளிட்ட மாவட்டங்களிலும் கட்சியின் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் இருந்து வந்த அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே அலுவலகம் திறக்கப்பட்டதாக சைதாலி ராய் கூறியதாகவும் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் ஆரம்பத்தில் அரசியல் நடவடிக்கைகளைவிட சமூக சேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தவெக தலைமை சொல்வது என்ன?

மேற்கு வங்கத்தில் தவெக அலுவலகம் திறக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்திடம் விசாரிக்கப்பட்டது. அப்போது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ அலுவலகங்கள் திறக்கப்படவில்லை என்று நிர்வாகிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், மேற்கு வங்கம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தவெக பெயரில் அலுவலகங்கள் திறக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவற்றுக்குக் கட்சித் தலைமையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய தவெக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் சன்கவி டயன்னா துஹின்சாமுவேல், மேற்கு வங்கத்தில் திறக்கப்பட்டதாகக் கூறப்படும் அலுவலகத்துக்கும் கட்சியின் தலைமைக்கும் எந்தவிதமான அதிகாரப்பூர்வத் தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது அரசியல் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட உள்ளூர் ஆதரவாளர்கள் தன்னிச்சையாக இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும், தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதிலும் மட்டுமே கட்சி கவனம் செலுத்தி வருவதாகவும், மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்தும் திட்டம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் தொடங்கிய ஆதரவு!

தவெக பெயரில் பிற மாநிலங்களில் அலுவலகங்கள் உருவாகி வருவதற்கு சமூக வலைதளங்களில் பரவும் பதிவுகளும் முக்கியக் காரணமாக இருக்கலாம் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் விஜய்யையும் அவரது அரசையும் பாராட்டும் இந்தி மொழி வீடியோக்கள், ரீல்ஸ்கள் பரவத் தொடங்கின. அவற்றில் சில வீடியோக்களில் தவறான தகவல்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாநிலங்களில் தவெகவின் அதிகாரப்பூர்வப் பக்கங்கள் போல சமூக வலைதளக் கணக்குகள் தொடங்கப்பட்டு, கட்சி தொடர்பான செய்திகள் பகிரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பக்கங்களுக்கும் கட்சிக்கும் அதிகாரப்பூர்வத் தொடர்பு இல்லை என்பதே தலைமையின் நிலைப்பாடாக உள்ளது.

சமூக வலைதளங்களில் உருவான இந்த ஆதரவு, தற்போது நேரடியாக அலுவலகங்கள் திறக்கும் முயற்சியாக மாறியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

மேற்கு வங்கத்தில் தேர்தலில் போட்டியிடுமா தவெக?

மேற்கு வங்கத்தில் தவெக ஆதரவாளர்கள் கட்சியை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அங்கு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், இதுகுறித்த இறுதி முடிவை கட்சியின் தலைமைதான் எடுக்கும் என உள்ளூர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். விஜய் மேற்கு வங்கத்துக்கு வருகை தரும் தேதி குறித்தும் இதுவரை முடிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், தமிழ்நாட்டைத் தாண்டியும் விஜய்க்கு ஆதரவாளர்கள் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தவெக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனினும், பிற மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்துவதற்கான அதிகாரப்பூர்வத் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புகளை ஏற்றுள்ள தவெக, பிற மாநிலங்களில் உருவாகும் ஆதரவை எவ்வாறு கையாளப்போகிறது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ரசிகர்களின் ஆர்வம் கட்சியின் அதிகாரப்பூர்வ விரிவாக்கமாக மாறுமா அல்லது தமிழக அரசியலுடன் மட்டும் தவெக தனது செயல்பாடுகளைத் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow