"எம்.எல்.ஏக்களுக்கு கார்... அரசுக்கு கடன் சுமையை அதிகப்படுத்தும்" - ராம ரவிக்குமார் பளிச்!

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு கார்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தேவையற்ற கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துமா என்ற கேள்வியை இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் எழுப்பியுள்ளார்.

Aug 20, 2026 - 12:15
"எம்.எல்.ஏக்களுக்கு கார்... அரசுக்கு கடன் சுமையை அதிகப்படுத்தும்" - ராம ரவிக்குமார் பளிச்!
Rama Ravikumar - Hindu Tamilar Katchi

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்களை நெருங்கி வரும் நிலையில், மாநிலத்தின் நிதிநிலை, கடன் சுமை மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு கார்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தேவையற்ற கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துமா என்ற கேள்வியை இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள திட்டத்தின்படி, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதிப் பணிக்காக புதிய கார்கள் வழங்கப்பட உள்ளதாகவும், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் வாகனம், ஓட்டுநர் மற்றும் கார் தொடர்பான செலவுகளுக்காக மாதம் ரூ.75,000, அலுவலக உதவியாளருக்காக ரூ.25,000 வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொகுதிகளுக்குச் சென்று மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண சட்டமன்ற உறுப்பினர்களுக்கு போக்குவரத்து வசதி தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்காக ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் புதிய அரசு கார் வழங்குவது மட்டுமே தீர்வா என்ற கேள்வி எழுகிறது.

இதுகுறித்து, இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் கூறியதாவது:

“எம்.எல்.ஏ.க்கள் தொகுதிக்குச் சென்று மக்களின் குறைகளை கேட்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்காக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் புதிய அரசு கார் வழங்குவது மட்டுமே தீர்வா?”

மேலும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தன்னிடம் ஏற்கனவே இரண்டு கார்கள் இருப்பதாகவும், இருந்தாலும் முதலமைச்சர் வழங்கும் காரில் பயணிப்பேன் என்றும் கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர்,

“ஏற்கனவே இரண்டு சொந்த கார்கள் வைத்திருக்கும் ஒருவருக்கு மீண்டும் அரசு கார் எதற்காக? அரசு கார் உண்மையில் தொகுதிப் பணிக்கான அத்தியாவசிய வசதி என்றால், ஏற்கனவே சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் அந்த வசதியைத் துறந்து மக்கள் பணத்தை அரசுக்கு மிச்சப்படுத்த முன்வர வேண்டும்” என்றார்.

ரூ.1 லட்சம் மாதச் செலவு... 234 எம்.எல்.ஏ.க்களுக்கு எவ்வளவு?

தமிழக சட்டமன்றத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் மாதம் ரூ.75,000 வாகனம் மற்றும் ஓட்டுநர் தொடர்பான செலவுக்கும், ரூ.25,000 அலுவலக உதவியாளர் செலவுக்கும் வழங்கப்பட்டால், ஒரு எம்.எல்.ஏ.வுக்கான மாதச் செலவு ரூ.1 லட்சமாகும்.

234 எம்.எல்.ஏ.க்களுக்கும் இந்தத் தொகை வழங்கப்பட்டால் மாதத்திற்கு ரூ.2.34 கோடியும், ஆண்டுக்கு ரூ.28.08 கோடியும் செலவாகும் என கணக்கிடப்படுகிறது. இதில் கார் கொள்முதல், காப்பீடு, பராமரிப்பு, எரிபொருள் உள்ளிட்ட கூடுதல் செலவுகள் சேர்க்கப்படவில்லை.

இதுகுறித்து ராம ரவிக்குமார் கூறுகையில்,

“ரூ.28 கோடி என்பது மட்டும் பெரிய தொகை அல்ல என்று சிலர் கூறலாம். ஆனால் இது ஒரே ஒரு திட்டத்தின் கணக்கு. இதுபோன்ற பல நிர்வாகச் சலுகைகள், வாகனங்கள், அலுவலகச் செலவுகள், பயணச் செலவுகள், பராமரிப்பு செலவுகள் என தொடர்ந்து சேரும்போது மக்கள் பணத்தின் மீது ஏற்படும் மொத்த சுமை மிகப்பெரியதாக மாறும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் கடன் நிலை என்ன?

தமிழகத்தின் நிலுவைக் கடன் ரூ.10 லட்சம் கோடி அளவை நெருங்கியுள்ள நிலையில், மேலும் கடன் பெற வேண்டிய சூழல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் மக்கள் நலத்திட்டங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், விவசாயம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கிராமப்புற அடிப்படை வசதிகளுக்கு அதிக நிதி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

“கடன் என்பது இலவசப் பணம் அல்ல. இன்று அரசு வாங்கும் கடனை நாளை தமிழக மக்கள்தான் வரி மூலமாகவும், அரசின் வருவாய் மூலமாகவும் திருப்பிச் செலுத்த வேண்டும். ஒரு அரசின் நிதி நிர்வாகத்தில் முதலில் அத்தியாவசியம்; பின்னர் வசதி என்பதுதான் அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும்” என ராம ரவிக்குமார் கூறினார்.

“கடன் வாங்கி சலுகை வழங்குவது நல்ல நிர்வாகமா?”

மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் பல இடங்களில் தீர்க்கப்பட வேண்டிய நிலையில், மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் புதிய வாகன வசதிக்கு அரசு முன்னுரிமை கொடுப்பது சரியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“மக்களுக்கு இலவச குடிநீர், அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகள், விவசாயிகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, கிராமப்புற சாலைகள் ஆகியவற்றுக்கு நிதி தேவைப்படும் நேரத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய கார்கள் வழங்குவது தமிழகத்தின் தற்போதைய முன்னுரிமையா? கடன் வாங்கி சலுகை வழங்குவது நல்ல நிர்வாகமா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சிகளும் பதில் சொல்ல வேண்டும்:

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் மற்றும் மாதாந்திர செலவுத் தொகை வழங்கப்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் ஏன் வலுவான எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என்றும் ராம ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

“அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கும் இந்த வசதி கிடைக்க இருப்பதால் அரசியல் கட்சிகள் ஒரே கருத்தில் உள்ளனவா? மக்கள் பணம் செலவாகும்போது ஆளுங்கட்சி–எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் மக்கள் நலனையே முன்னிறுத்த வேண்டாமா?” என்றார்.

“அரசு கார் வேண்டாம்” என்று எத்தனை எம்.எல்.ஏ.க்கள் சொல்வார்கள்?

ஏற்கனவே சொந்தமாக கார் வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு வழங்கும் காரை நிராகரிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“என்னிடம் சொந்த கார் உள்ளது; எனவே அரசு கார் வேண்டாம்; மக்கள் பணத்தில் இருந்து இந்தச் சலுகையும் வேண்டாம் என்று அறிவிக்க எத்தனை எம்.எல்.ஏ.க்கள் தயாராக இருக்கிறார்கள்?” என ராம ரவிக்குமார் கேள்வி எழுப்பினார்.

மேலும், காமராஜர், கக்கன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா போன்ற முன்னாள் அரசியல் தலைவர்கள் எளிமையுடனும் நேர்மையுடனும் பொதுவாழ்க்கையில் இருந்ததை சுட்டிக்காட்டிய அவர்,

“காமராஜர், கக்கன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா போன்றவர்கள் அரசியலில் நேர்மை மற்றும் அறத்தின் வடிவாக வாழ்ந்தவர்கள். உதட்டளவில் அவர்களைப் பற்றி பேசாமல், அவர்கள் வாழ்ந்த அரசியல் வழியில் இன்று எத்தனை பேர் வாழத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி” என்று தெரிவித்தார்.

அரசிடம் 10 முக்கிய கேள்விகள்:

அரசு கார் திட்டம் தொடர்பாக தமிழக அரசு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் ராம ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

1. அரசு கார் வழங்கப்பட உள்ள மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை எவ்வளவு?

2. ஒரு காரின் அதிகபட்ச கொள்முதல் விலை எவ்வளவு?

3. அனைத்து கார்களையும் வாங்குவதற்கான ஒருமுறை மொத்த செலவு எவ்வளவு?

4. மாதம் ரூ.75,000 வாகனம் மற்றும் ஓட்டுநர் செலவால் ஆண்டுக்கு ஏற்படும் மொத்த செலவு எவ்வளவு?

5. ரூ.25,000 உதவியாளர் செலவால் ஆண்டுக்கு ஏற்படும் மொத்த செலவு எவ்வளவு?

6. ஏற்கனவே சொந்த கார் வைத்திருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு கார் வழங்கப்படுமா?

7. அரசு கார் வேண்டாம் என தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு வாகனச் செலவுத் தொகையும் வழங்கப்படுமா?

8. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தால் ஏற்படும் மொத்த நிதிச்சுமை எவ்வளவு?

9. இதற்கான நிதி எந்தத் துறையின் பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கப்படும்?

10. தமிழகத்தின் தற்போதைய கடன் மற்றும் வட்டி சுமையை கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தின் அவசியத்தை அரசு எவ்வாறு நியாயப்படுத்துகிறது?

மக்கள் பணம்... மக்கள் நலனுக்கே!

மக்கள் பிரதிநிதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு எதிர்ப்பு இல்லை என்றாலும், ஏற்கனவே சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கும் அரசு கார் வழங்குவது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

“மக்கள் பணம் என்பது ஆட்சியாளர்களின் சொந்தப் பணம் அல்ல. அது தமிழக மக்களின் வரிப்பணம். அந்தப் பணம் முதலில் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அரசு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை மேம்படுத்தவும், விவசாயிகளுக்கும் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கவும் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

இறுதியாக,

“கடன் வாங்கி கார் வாங்குவது வளர்ச்சி அல்ல; கடன் சுமையை அதிகரிக்காமல் மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதுதான் நல்லாட்சி. கடனில் தத்தளிக்கும் தமிழகத்திற்கு ஆடம்பரச் சலுகைகள் வேண்டாம்; பொறுப்பான நிதி நிர்வாகமே வேண்டும்” என ராம ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow