மக்களவைத் தேர்தல்.. மொத்தமாக சரிந்த 3ஆம் கட்ட வாக்குப்பதிவு.. அதிர்ச்சியில் தேர்தல் ஆணையம்
மக்களவைத் தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப்பதிவில் 64.40 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவை காட்டிலும் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு சரிவடைந்துள்ளது தேர்தல் ஆணையத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் ஆட்சியைத் தக்க வைக்க பாஜகவும், ஆட்சியைக் கைப்பற்ற I.N.D.I.A கூட்டணி கட்சிகளும் தங்களது மொத்த பலத்தையும் காட்டி வருகின்றன.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நேற்று (மே 7) 3ஆம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வந்து ஜனநாயகக் கடமையாற்றினர்.
இந்த நிலையில் 11 மாநிலங்களில் பதிவான வாக்கு சதவீத விவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக அஸ்ஸாமில் 81.61% வாக்குகளும் குறைந்தபட்சமாக உத்தரபிரதேசத்தில் 57.34% வாக்குகளும் பதிவாகின…
மாநிலங்கள் வாரியாக வாக்குப்பதிவு சதவீதம் :
அஸ்ஸாம் : 4 தொகுதிகள் – 81.61%
மேற்கு வங்கம் – 4 தொகுதிகள் – 75.79%
கோவா – 2 தொகுதிகள் – 75.20%
சத்தீஸ்கர் – 7 தொகுதிகள் – 71.06%
கர்நாடகா – 14 தொகுதிகள் – 70.41%
தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ – 69.87%
மகாராஷ்டிரா – 11 தொகுதிகள் – 61.44%
குஜராத் – 25 தொகுதிகள் - 58.98%
பீகார் – 5 தொகுதிகள் – 58.18%
உத்தரபிரதேசம் – 10 தொகுதிகள் – 57.34%
முதற்கட்டமாக 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 66.14% வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்ட தேர்தலில் 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் 66.71% வாக்குகள் பதிவாகின. இவற்றை ஒப்பிடும் போது மூன்றாம் கட்ட தேர்தலில் 64.40% சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
தேர்தல் ஆணையம் 100% வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டாததே வாக்குப்பதிவு சரிந்ததற்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
What's Your Reaction?