சட்டென மாறிய கிளைமேட்... ஆம்பூர், வாணியம்பாடியில் வெயிலுக்கு லீவு...
ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் 100 டிகிரிக்கும் மேல் வாட்டி வதைத்து வந்தது. அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறமால் தவித்து வந்தனர். தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து மக்களுக்கு சற்று விடுதலை கிடைத்துள்ளது.
ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இன்று (மே 8) ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.