இடைத்தேர்தலில் களமிறங்கும் தனுஷ்..? அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவு?

அரசியல் கட்சி தொடங்கி, வரும் தேர்தலில் அதிமுக–பாஜக கூட்டணியுடன் இணைந்து களமிறங்க தனுஷ் திட்டமிட்டு வருவதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sep 9, 2026 - 16:45
Sep 9, 2026 - 17:03
இடைத்தேர்தலில் களமிறங்கும் தனுஷ்..? அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவு?

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், திரையுலகைச் சேர்ந்த மேலும் சில பிரபலங்களுக்கும் அரசியல் ஆசை துளிர்விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் நடிகர் தனுஷின் பெயரும் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தனுஷ், கடந்த சில மாதங்களாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஷூட்டிங் இல்லாத ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதுடன், விருந்தும் அளித்து அனுப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தங்களது பகுதிகளில் பொதுமக்களிடம் நல்ல பெயரைப் பெற வேண்டும் என்றும், மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தனுஷ் அறிவுரை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான தனுஷ் ரசிகர் மன்றங்கள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றை மண்டல வாரியாக ஒருங்கிணைத்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தனுஷ் ரசிகர் மன்றத்திற்கான கொடி அறிமுக நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தனுஷின் அரசியல் ஆர்வத்தின் வெளிப்பாடுகளாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், விரைவில் தனுஷ் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற தனுஷ் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தனது நெருங்கிய வட்டாரங்களுடன் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

விஜய் ரசிகர்கள் ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கியதைப் போல, தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் தேர்தல் களத்தில் இறங்குவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

எனவே, தற்போது தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுர இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், இதில் தனுஷ் ரசிகர் மன்றத்தினர் இறங்கி வேலை செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow