காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியம் என்று சினிமா போஸ்டரில் விளம்பர வாசகம் அச்சிட்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அப்படியான காவியப் படத்தைப் பேசுவோமா?
ஐம்பதுகளில் இருந்தே காதல் படங்களுக்கு தனி மரியாதை உண்டு. ஒரு படத்தை வெறுமனே காதல் படம் என்று சொல்லிவிட முடியாது. அதை வெறும் படம் என்றும் சொல்லிவிடமுடியாது. மூன்று மணி நேர பொழுதுபோக்குப் படம் என்று சாதாரண பட்டியலில் சேர்ப்பது மாபெரும் தவறு. அந்தப் படத்தை காவியம் என்று இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் தென்னிந்திய ரசிகர்கள். ஆந்திராவிலும் தமிழிலும் மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது இந்தப் படம். அதுதான் ‘தேவதாஸ்’.
‘என்னப்பா... அந்தப் பையன் ஒரு பொண்ணை லவ் பண்ணிக்கிட்டிருந்தானே, இப்ப என்னாச்சு?’ என்று கேட்டால், அந்தக் கேள்விக்கு, ‘அதை ஏம்பா கேக்கறே. காதல் புட்டுக்கிச்சு. அந்தப் பொண்ணுக்கு வேற இடத்துல கல்யாணம் பண்ணிவைச்சிட்டாங்க. பாவம் இந்தப் பையன். தேவதாஸ் மாதிரி தாடியை வளர்த்துக்கிட்டு திரியுறான்’’ என்று பதில் வரும்.இன்றைக்கு ‘பிரேக் அப்’ ஆகிருச்சு என்று சொல்லி, டிரீட்டெல்லாம் வைக்கிற ஜென் ஸீக்கள் காலமாகிவிட்டது. ஆனால் ‘தேவதாஸ்’ என்ற அந்தப் படத்தின் தாக்கம், இன்றைக்கும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
காதலில் தோல்வியுற்றால், இளைஞன் தாடி வைத்து திரிவான் என்று காதலுக்கும் காதல் தோல்விக்கும் தாடியை அடையாளமாகக் காட்டிய ‘தேவதாஸ்’, திரையுலகின் காதல் காவியம். ‘காதலர்கள் சேரணுமே சேரணுமே... என்கிற தவிப்பு, படம் பார்க்கிற ரசிகர்களுக்கு வரவேண்டும். ’அய்யோ... லவ் ஜோடி சேரலியே...’ என்று படம் பார்க்கிறவர்கள், கண்ணீர்விடவேண்டும். காதலர்கள் சிரித்தால் சிரிக்கவேண்டும். அழுதால் கண்ணீர் விடவேண்டும்.
அப்படி நமக்குள் ஏதேனும் நிகழ்த்திவிட்டால், அந்தப் படம் வெற்றி’ என்று சினிமா வட்டாரத்தில் சொல்லுவார்கள். ‘தேவதாஸ்’ படம் அப்படியொரு சிரிப்பையும் அழுகையையும் ரசிகர்களுக்குக் கடத்தியது. இந்தப் படத்தை, அந்தக் காலத்தில், ஒரேயொரு முறை மட்டும் பார்த்தவர்கள் மிகமிகக்குறைவு.திரும்பத்திரும்பப் பார்த்தார்கள் ரசிகர்கள்.
ஒரு கதை எப்படிப் பண்ணவேண்டும், அந்தக் கதைக்கான திரைக்கதையை எப்படி வடிவமைக்க வேண்டும், கதையின் மாந்தர்கள் உணர்வுபூர்வமான இடங்களில் எந்த வார்த்தைகளைக் கொண்டு பேசவேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த அடையாளம்தான் ‘தேவதாஸ்’. 1953ம் ஆண்டு வெளியானது ‘தேவதாஸ்’ திரைப்படம். நம் நாகார்ஜூனாவின் அப்பா நாகேஸ்வரராவ், நடிகையர் திலகம் சாவித்திரி இணைந்து, அட்டகாசமான நடிப்பை வழங்கினார்கள்.
அதை நடிப்பு என்றே நம்பவில்லை ரசிகர்கள். நிஜமாகவே ஒரு காதல் ஜோடியின் பெருஞ்சோகம் என்றே கவலைப்பட்டு, கதறியழுதார்கள். இதிலொரு ஆச்சரிய அதிர்ச்சி... காதலிக்காத ரசிகர்கள் கூட , ‘தேவதாஸ்’ பார்த்துவிட்டு, காதல் சோகத்தில் மூழ்கிப் போனார்கள். ’ஏண்டா சோகமா இருக்கே? எதுனா பிரச்னையா?’ என்று கேட்டால், ‘நேத்து 23வது தடவையா தேவதாஸ் பாத்தேன்.
மனசே நொறுங்கிப்போச்சு மாப்ளே’ என்று சொன்னவர்கள், நம் தாத்தாக்களும் அப்பாக்களும்! தேவதாஸும் பார்வதியும் காதலிக்கத் தொடங்குவார்கள். காதலிப்பார்கள். காதலிக்கும்போது அவர்களுக்குள் நிகழ்கிற எதிர்கால ஆசைகளைச் சொல்லிக்கொள்வார்கள்.
கனவுகளைக் கட்டமைப்பார்கள். எப்படியான வாழ்க்கையை வாழப்போகிறோம் என்றெல்லாம் நம்பிக்கை ஒளிர, மிளிர காதலகி கசிந்துருகிக் கொண்டிருப்பார்கள். ஆனால் விதி பிரித்துக் கலைத்துப் போடும். வயது முதிர்ந்த ஒருவருக்கு பார்வதியைத் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். அப்போது, அந்தத் தருணத்தில்தான் காதலன் தேவதாஸ், காதலால் நொறுங்கிப் போவான்.
நடைப்பிணமாவான். காதலியைக் கரம் பிடிக்காத சோகம்தானே..! அதுமட்டுமா? காதலியின் வாழ்வு இப்படி நாசமாகிவிட்டதே என்ற துயரத்தில் துவண்டு, கலங்கிக் கண்ணீர்விட்டு, நைந்துவிடுவான். உருக்குலைந்து விடுவான். படம் பார்க்கிறவர்கள் எல்லோருமே குலைந்து, குமுறி, கதறினார்கள்.தேவதாஸுக்காகவும் பார்வதியின் பரிதாப வாழ்க்கைக்காகவும் அழுதுகொண்டே படம் பார்த்தார்கள்.
‘இது வெறும் படம்தானே...’ என்கிற நினைப்பே இல்லாமல், இரண்டறக்கலந்து படம் பார்த்தார்கள். இளையராஜா, எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன், ஜி.ராமநாதன் போல் அன்றைய இசையுலகின் சூப்பர் ஸ்டார்... சி.ஆர்.சுப்பராமன். இவரின் இசையில், எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. வெற்றி மட்டுமா? பாடல்கள் ஏற்படுத்திய தாக்கம், காதலின் வலியையும் பிரிதலையும் இன்னும் இன்னுமாக நமக்குள் புகட்டின. துவம்சம் செய்தன. கண்டசாலாவின் குரல், துக்கத்தை, துயரத்தை, சோகத்தை இன்னும் இன்னுமாக வீரியமாக்கி, சம்மட்டியால் இதயத்தை அடிக்கிற குரல்!
‘ஓ ஓ தேவதாஸ்... ஓ ஓ பார்வதி’ என்ற பாடல் இன்றைக்கும் பிரபலம். உடுமலை நாராயணகவி எழுதிய பாடல் இது. பாலசரஸ்வதி எனும் பாடகியும் ராணி என்கிற பாடகியும் படத்தின் பாடல்களைப் பாடியிருந்தார்கள். ‘துணிந்தபின் மனமே துயரங்கொள்ளாதே’ என்ற பாடலை தொந்நூறுகளில் கூட பல சினிமாக்களில் டீக்கடைகளில் ஒலிபரப்புவது போல் காட்டினார்கள்.
’அன்பே பாவமா’ என்றொரு பாடல், எப்போது கேட்டாலும். நம்மை அழவைத்துவிடும். கே.டி.சந்தானம் பல பாடல்களை எழுதியிருந்தார். ‘எல்லாம் மாயை’ என்ற பாடல் நம்மை தேம்பித்தேம்பி அழவைத்துவிடும். அவர் எழுதிய ‘கனவிதுதான்’ பாடலைக் கேட்டால், அன்றிரவு தூக்கம் போச்சு நமக்கு. ‘உலகே மாயம்... வாழ்வே மாயம்’ என்ற பாடலை உடுமலையார் எழுத, கண்டசாலா பாடினார். மூன்றரை நிமிடப் பாட்டுதான். ஆனால் ஐந்தாறு தலைமுறைகள் கடந்தும் மன அலமாரிக்குள்ளிருந்து பல சோகங்களை வெளியேற்றிவிடுகிற பாடல் இது. நம் மனசை நிமிண்டிக்கொண்டே இருக்கும் பாட்டு! .
சி.ஆர்.சுப்பராமன் இசையில், வேதாந்தம் ராகவையா இயக்கிய இந்த ‘தேவதாஸ்’ படம், எல்லா மொழிகளிலும் ஹிட்டடித்தது. நாகேஸ்வரராவ், இந்தப் படத்துக்குப் பிறகுதான் பல உயரங்களை ஒரே மூச்சில் அடைந்தார். இந்தப் படத்துக்குப் பிறகுதான் சாவித்திரியின் அற்புத நடிப்பைக் கண்டு தமிழகமும் ஆந்திரமும் மிரண்டுபோனது. போட்டிபோட்டுக்கொண்டு சாவித்திரியை, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் பலரும் ஒப்பந்தம் செய்தார்கள்.
தமிழிலும் தெலுங்கிலும் மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்து நடிகையாக வலம் வந்து வெற்றியைப் பெறுவதற்கு, சாவித்திரிக்கு துணையாக, காதல் தோல்வியின் ‘ஐகான்’ திரைப்படமாக ‘தேவதாஸ்’ இருந்தது. . விரக்தியில் கலங்கும் நாகேஸ்வரராவையும் அவருக்கு அருகில் சோகமே உருவெனப் பார்க்கிற நாயையும் மறக்கவே முடியாது!
அநேகமாக, இந்திய அளவில், ஒரு படம் அதிக அளவில், பல மொழிகளில் ரீமேக் செய்யப்படதென்றால், ‘தேவதாஸ்’ படமாகத்தான் இருக்கும். பல மொழிகளில் வெளியானது. பல முறை ரீமேக் செய்யப்பட்டது. சொல்லப்போனால், ஒவ்வொரு தலைமுறைக்கும் புதுப்புது நடிகர்கள் வந்தபோது, காலகட்டங்களை உணர்ந்து கதையை லேசாக மாற்றினார்கள். ஆனால் ‘தேவதாஸ் - பார்வதி’க்கு பங்கம் வராமல் பார்த்துக்கொண்டார்கள்.
1953ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி வெளியானது ‘தேவதாஸ்’. கிட்டத்தட்ட, 73 வருடங்களாகிவிட்டன. தோற்றுப் போன காதல்தான் சரித்திரத்தில் இடம்பெறும் என்பார்கள். தோற்றுப் போன காதலைச் சொல்லி மிகப்பிரமாண்டமான வெற்றி பெற்ற ‘தேவதாஸ்’ படமும் சரித்திரத்தில் இடம்பெற்றது. சொல்லபோனால், தனித்துவ சரித்திரமாகவே ஆகிவிட்டான் ‘தேவதாஸ்!’
எண்பதுகளின் இறுதியில், திருச்சி மே.க.கோட்டை சண்முகா தியேட்டரில் நான் வேலை பார்த்தபோது, புத்தம்புதிய காப்பி என்று தேவதாஸ் திரையிடப்பட்டது. தினசரி மூன்று காட்சிகள். பனிரெண்டு நாட்களுக்கு மேல் ஓடியது. ஈவினிங் ஷோவுக்கும் நைட் ஷோவுக்கும் ஐம்பதைக் கடந்த நண்பர்கள் கூட்டம், நாற்பதை நெருங்கிய நட்பு வட்டம் என குழுவாக வந்து படம் பார்த்ததையும் ஒரு ஷோ விடாமல் நான் அந்த 12 நாட்களும் விடாமல் பார்த்ததையும் மறக்கவே முடியாது.
அங்கே, தியேட்டரில் நிறைய தேவதாஸ்களும் பார்வதிகளும் நரைத்த தலைமுடியுடன் வந்து, ஒருபாட்டம் அழுதுதீர்த்துவிட்டுப் போனார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது!
- வி.ராம்ஜி