விஜய் பிரதமர் வேட்பாளரா? அதிமுகவை சீண்டாதது ஏன்? அருண்ராஜ் Exclusive!
த.வெ.கவின் அமைச்சர் அருண்ராஜ், விஜய்யின் பிரதமர் வேட்பாளர் சர்ச்சை, அதிமுகவை விமர்சிக்காதது உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்ததை விரிவாக பார்போம்.
சட்டமன்ற கூட்டத்தொடர் அனல் பறக்கும் நிலையில் ஆளும்தரப்பும், எதிர்க்கட்சிகளும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்வதற்கு நாள்தோறும் தீவிரமாக தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பரபரப்பான சூழலுக்கு இடையே, த.வெ.க.வின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மருத்துவர் அருண்ராஜை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
த.வெ.க. ஆட்சி ஆறு மாதங்கள்கூட தாங்காது என்கின்றனவே எதிர்க்கட்சிகள்?
"மக்கள் கனவில் நினைத்துக்கொண்டிருந்த ஆட்சி, மக்களின் பேராதரவால் இன்று இதை நடந்துகொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதிமுகவுக்கும், திமுகவுக்கும் பெரிய வித்தியாசமே இல்லை. அதனால், அவர்களில் ஒருதரப்புதான் ஆட்சிக்கு வரும் என்று நம்பினார்கள். ஆனால், த.வெ.க. ஆட்சிக்கு வந்தது. அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி. அவர்களுக்கு ஆட்சியை இழந்ததுகூட பிரச்னை கிடையாது. மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது என்கிற பயம் வந்துவிட்டது. அதனால்தான் அப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு, அதற்கான முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள்"
த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக செயல்படுத்த முடியும் என நம்புகிறீர்களா, அந்தளவுக்கு நிதி இருக்கிறதா?
"ஒரு சாலையை ரூ.100 கோடிக்கு போடமுடியும் என்றால், இதற்கு முன்பிருந்தவர்கள் ரூ.130 கோடி என அதிகப்படுத்தி காட்டி சுருட்டிக்கொண்டிருந்தார்கள். இப்படி பல வழிகளில் வீக்கேஜ் இருந்தது எங்கள் ஆட்சியில் இப்படியான லீக்கேஜ் இல்லாமல் நிதி ஆதாரம் பெருகும். அதனால் வாக்குறுதிகளை நிச்சயமாக செயல்படுத்த முடியும்."
பிரதமர் வேட்பாளர் விஜய் என்கிறார்களே, அப்படியென்றால் காங்கிரஸ் நிலை?
"தவெக, காங்கிரஸ் இடையே சுமூகமான உறவு இருக்கிறது ராகுல் காந்தியும், முதல்வர் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள். அதனால் கூட்டணிக்கு பிரச்னை ஏற்படுத்தக்ககூடிய எந்த செயல்பாடும் நடக்காது. சிலபேர் அன்பின் மிகுதியால் அப்படி சொல்கிறார்கனே ஒழிய எங்கள் கூட்டணிக்குள் வேறெந்த பிரச்னையும் இல்லை.
ஆனால், பா.ஜ.க.வின் எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்ற அக்கட்சியின் அஜெண்டாவைத்தான் த.பெ.சு. செய்வதாக விமர்சனம் எழுகிறதே?
"அது அபாண்டம் முன்பு, பாஜகவின் பி டீம் என்றார்கள். தேர்தலில் தனித்து நின்றால் திமுகவுக்கு சாதகமாகும் என்றார்கள். அதைப்போலத்தான் இதையும் நான் பார்க்கிறேன். யார் உண்மையாக பா.ஜ.க.வை எதிர்க்கப்போகிறார்கள் என்பதை பார்ப்பீர்கள். சொல் அல்ல, செயல்தான் முக்கியம் தேசிய அளவிலேயே பா.ஜ.க.வின் இறங்குமுகம் ஆரம்பித்துவிட்டது. கண்டிப்பாக மதவாத சக்திகளுக்கு எதிராகத்தான் நாங்கள் இருப்போம்"
எதிர்க்கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து சீண்டுவது ஏன்?
"எல்லா வாதத்துக்குமான தொடக்கம் அவர்களிடமிருந்துதான் ஆரம்பமாகும் அவர்களின் ஆட்சி சாதனைகளைப் பற்றி சொல்லும்போது எந்த பிரச்னையும் இருக்காது. எங்கள் ஆட்சியை வேண்டுமென்றே குறை சொல்லும்போதும் உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லும்போதும்தான் நாங்கள் எதிர்வினை ஆற்றவேண்டிய நிலை வருகிறது'
தி.மு.க. மீதான வேகம், அ.தி.மு.க. மீதோ பா.ஜ.க. மீதோ இல்லையே?
'தவெக, திமுக இடையேதான் தேர்தலின்போது போட்டி நடந்தது. அதிமுக இன்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அங்கிருந்து பலரும் த.வெ.க. வந்துவிட்டார்கள். ஏற்கெனவே வீழ்ந்த ஒரு கட்சியை எதற்கு விமர்சிக்க வேண்டும்? மோடிதான் பிரதமர் என்பதால் நிர்வாகரீதியாக ஒத்துழைப்பு கொடுக்கிறோம். மத்திய அரசின் ஒத்துழைப்பையும் விரும்புகிறோம். அதேசமயம் மாநில உரிமை. கொள்கைசார்ந்த விஷயங்களை ஒருபோதும் விட்டுத்தரவே மாட்டோம். கொள்கை, அரசியல் ரீதியாக எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்."
சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் உதயநிதியின் செயல்பாடுகள் எப்படி?
"ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி பங்கு மிகவும் அவசியம். எங்கெல்லாம் தவறு நடக்கிறது, எங்கு மக்கள் பிரச்னை இருக்கிறது என்பதை எடுத்து சொல்லவேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஆனால், எங்கள் அரசு சரியாக நடப்பதால், உதயநிதிக்கு அந்த வேலைகூட இப்போது இருக்காது."
மருந்து பற்றாக்குறை, செவிலியர் பணி நிரந்தர கோரிக்கை என உங்கள் துறையில் இருந்த பிரச்னைகளை தீர்க்க நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?
2,500 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திருக்கிறோம். 100 துணை சுகாதார நிலையங்களை கட்டுவதற்கு பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறோம். 2014க்கு பிறகு ஏழு புதிய செவிலியர் கல்லூரிகளை உருவாக்கப்போகிறோம். ஏற்கெனவே இருக்கும் செவிலியர் கல்லூரிகளிலும் கூடுதல் இடங்களை உருவாக்கியுள்ளோம் எவ்வளவு நிதி நெருக்கடி இருந்தாலும் மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி, மேம்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்"
நீட் எதிர்ப்பில் நீவிரமாக இருப்பதாக சொல்லும் அரசு, நீட்டை எதிர்த்து போராடிய மாணவர்களிடம் கெடுபிடி காட்டியது ஏன்?
போராட்டம் நடத்தியவர்களிடம் உங்கள் கோரிக்கையும் எங்கள் நோக்கமும் வெவ்வேறு அல்ல. போராட்டத்தை வாபஸ் பெறுங்கள் என தொடர்ச்சியாக பேசிக்கொண்டுதான் இருந்தோம். அதற்கேற்ப நீட்டுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானமும் இயற்றியிருக்கிறோம். தொடர்ந்து மாணவர்கள் பக்கமும் தமிழ்நாடு மக்களின் உணர்வுகள் பக்கமும்தான் நாங்கள் நிற்கிறோம்.
அவதூறு பேச்சு என உதயநிதி மீது பாய்ந்த நடவடிக்கை, ஏன் பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் மீது இல்லை?
"திமுக முன்பு ஆண்ட கட்சி இப்போது இரண்டாவது பெரிய கட்சி. உதயநிதியோ இன்றைய எதிர்கட்சித் தலைவர். பாஜகவை ஒரு கட்சியாகவே நாங்கள் கருதவில்லை. பாஜக தமிழகத்தில் வேரூன்றக் கூடாது என நினைக்கிறோம் நாங்கள் ஆக்ஷன் எடுப்பது மூலமாக அவர்களுக்கு சிறு பப்ளிசிட்டியும் கிடைத்துவிடக்கூடாது என்ற வியூகம்தான் அது!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் தமிழ் படிப்பதற்கே தடுமாறுகிறார்களே?
இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதை கடந்த ஆட்சியாளர்களின் பெரிய தோல்வியாக நான் பார்க்கிறேன். இந்தி எதிர்ப்போடு அவர்களின் தமிழ் வளர்ப்பு முடிந்துவிட்டது. தமிழை வளர்க்க அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை."
What's Your Reaction?