விசாரணையின்றி நேரடியாக சிறை.. மருத்துவக் கழிவு கொட்டுதல் விவகாரம் முற்றுப் பெறுமா?
உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி நேரடியாக சிறை தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமுன்வடிவை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார் அமைச்சர் ரகுபதி.

கடந்த பிப்ரவரி மாதம் திருநெல்வேலியின் புறநகர் பகுதிகளான முக்கூடல் மற்றும் சுத்தமல்லி பகுதிகளில் கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அண்டை மாநிலங்களில் இருந்து நமது மாநிலத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் கொட்டுவது தொடர்பாக புகார்கள் அடிக்கடி பெறப்பட்டு வருகின்றன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டினால் சிறை தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தத்திற்கான சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.
சட்டமுன்வடிவின் முக்கிய அம்சங்கள்:
உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்று குவிப்பது பொது சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்ட குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோருக்கு மட்டுமே தடுப்புக்காவல் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் தடுப்புக் காவல் விதிக்கப்படும்.
இந்த சட்டமுன்வடிவின் படி இனி தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்று குவித்தாலோ, அண்டை மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டினாலோ உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாக கருதி தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள். தடுப்புக்காவல் என்பது நீதிமன்றத்தால் விசாரணை அல்லது தண்டனையின்றி தனி நபரை காவலில் வைப்பதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: கடன் வழங்கி மிரட்டுபவர்களுக்கு செக்.. சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் உதயநிதி
What's Your Reaction?






