ஐபோன் உற்பத்தி: சீனாவிலிருந்து இந்தியாவிற்கு ஜம்ப் ஆக துடிக்கும் ஆப்பிள்.. ஏன்?
அமெரிக்காவில் விற்கப்படும் அனைத்து ஐபோன்களின் அசெம்பிளியையும் 2026-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கு மாற்ற ஆப்பிள் திட்டமிட்டுள்ளது என்று பைனான்சியல் டைம்ஸ் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பானது சீனாவுடனான வர்த்தகப் போரை உருவாக்கியுள்ள நிலையில் ஆப்பிள் நிறுவனம் இதனை சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்களை இந்தியாவில் அசெம்பிளி செய்யும் திட்டத்தை ஆப்பிள் அதற்காக வகுக்கத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் தற்போது இறக்குமதி செய்யப்படும் மொத்த ஐபோன்களில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. சீனாவிலுள்ள ஜெங்ஜோ (Zhengzhou) நகரம் உலகின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி தளமாக திகழ்கிறது. 90-க்கும் மேற்பட்ட ஐபோன் அசெம்பிளி லைன்களைக் கொண்டுள்ளது ஜெங்ஜோ நகரம். ஒரு நாளைக்கு 5,00,000 ஐபோன்கள் (ஒரு நிமிடத்திற்கு சுமார் 350 ஐபோன்கள்) ஜெங்ஜோ நகரத்திலுள்ள நிறுவனங்களின் கட்டமைப்பை கொண்டு உற்பத்தி செய்ய முடியும் என்று நியூயார்க் டைம்ஸ் 2016-ல் செய்தி வெளியிட்டது.
சீனாவிற்குள் நுழைந்தது எப்போது?
2000- ஆம் ஆண்டு சீனாவிற்குள் காலடி வைக்கத் தொடங்கியது ஆப்பிள் நிறுவனம். தைவானிய மின்னணு உற்பத்தியாளரான ஃபாக்ஸ்கானுடன் கூட்டு சேர்ந்து உற்பத்தி செலவுகளைக் குறைக்க ஆப்பிள் முயற்சித்தது. சீனாவில் நுழைந்த போது ஐபாட் (iPod) தயாரிப்பில் ஆர்வம் காட்டியது ஆப்பிள் நிறுவனம். ஐபோன் உற்பத்தி 2007 ஆம் ஆண்டு தான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
3 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சொத்து மதிப்புள்ள நிறுவனமான ஆப்பிள், சீனாவிற்கு அடுத்தப்படியாக இந்தியாவில் தான் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா குழுமத்துடன் இணைந்து தங்களது தயாரிப்புகளை அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்யத் தொடங்கியது. தற்போது இந்தியாவில் மூன்று ஐபோன் அசெம்பிளி ஆலைகள் உள்ளன. அதில் இரண்டு தமிழ்நாட்டிலும், ஒன்று கர்நாடகவிலும் உள்ளன.
சீனாவில் என்ன பிரச்சினை?
சீனாவிற்கு விதிக்கப்படும் பரஸ்பர வரி விதிப்பு தாண்டி, சமீப காலமாக போன் அசெம்பிளி செய்யும் பணிக்கு போதிய ஆட்கள் சீனாவில் கிடைப்பதில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தொழில்நுட்பம், கல்வி என பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் குறைந்த ஊதியத்திற்கு ஆட்கள் கிடைப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வருகிற 2026-ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்தமாக தனது ஐபோன் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்ற திட்டமிட்டு வருகிறது ஆப்பிள் நிறுவனம். இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்க உற்பத்தி செலவானது சீனாவை விட 5-8 சதவீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளராக மாறியுள்ளதும், ஆப்பிள் நிறுவனத்திற்கு, இந்தியாவிற்குள் முழுமையாக மாறலாமே என்கிற நம்பிக்கையை கொடுத்துள்ளதாக டெக் வல்லுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
Read more: வாட்ஸ் அப் செயலியில் வந்தாச்சு 'Advanced Chat Privacy' .. இதனால் என்ன யூஸ்?
What's Your Reaction?






