இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு திரைப்பயணம் மற்றும் வணங்கான் இசை வெளியீட்டு விழா.. தயாரிப்பாளர் அறிவிப்பு..!
‘வணங்கான்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுடன், இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கால திரைப்பயண விழாவும், நடைபெற உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
இயக்குநர் பாலா திரைத்துறையில் 25 ஆண்டு கலைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் வரும் டிசம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு பரிமாணங்களை கொண்ட பாலா. இவர் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். தன்னுடை திரைப்படங்களின் மூலம் வாழ்வியலோடு கலந்த திரைப்படங்களை ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்திருக்கிறார். இயக்குனர் பாலுமகேந்திராவின் சிஷ்யன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் பாலா தன்னுடைய திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இன்று உச்ச நடிகர்களாக விளங்கும் பல நடிகர்கள் இவரது திரைப்படங்களில் நடித்தப்பிறகே மற்ற இயக்குநர்களால் அடையாளம் காணப்பட்டனர். தனக்கென தனிப்பாதையை வகுத்து அதற்கேற்றார் போல், கிராமிய கதைக்களம், வரலாற்று கதைக்களம் என்று திரைப்படங்களை இயக்கி வருகிறார். தற்போது ஜல்லிக்கட்டை அடிப்படையாகக் கொண்டு வணங்கான் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
வணங்கான் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலையுலகம் உறவுகளாலும் உணர்ச்சிகளாலும் நிரம்பிய உலகம் மட்டுமல்ல, மகத்தான திறமையாளர்களை உறவுகளாக இணைத்துக் கொண்டு இயங்கும் ஒரு குடும்பம்.
அனைவரின் சுக துக்கங்களிலும், பாராட்டுதலிலும், தோள் கொடுத்தலிலும், துணை இருத்தலிலும் இச்சிறு உலகம் தன்னைத்தானே செழுமைப்படுத்திக் கொள்கிறது.
அன்பினால் ஆகாதது உலகத்தில் என்ன இருக்கிறது? பேரன்பு மட்டுமே உலகத்தை இயக்கும் விசை. சினிமா ஒரு பேரன்பு கொண்ட பெரும் ஆலமரம். அம்மரத்தின் விழுதுகளில் ஒரு விழுது தான் இயக்குநர் பாலா.
பலமான அந்த விழுது அம்மரத்தை உறுதியாகத் தாங்கியிருக்கிறது தனது பங்களிப்பின் மூலம். அப்படியான பங்களிப்பின் மூலம் நிறைய நாயகர்களை, கலைஞர்களை தனது இருபத்தைந்து ஆண்டு காலத்தில் உருவாக்கி உள்ளார் இயக்குநர் பாலா.
அதுவரை திறமை இருந்தும் முகவரி கிடைக்காமல் தவித்தவர்களைத் தேடி எடுத்து தன் படங்களையே அவர்களது முகவரியாக ஆக்கியவர் அவர்.
அவர் தன் கலை உளியால் துளித்துளியாக செதுக்கிய சிற்பங்கள் தான் தமிழ்த் திரை உலகம் என்கிற ராஜகோபுரத்தில் மின்னிக் கொண்டிருக்கின்றன.
பாலா என்ற தனிமனிதர் ரத்தமும் சதையுமாக உருவாக்கிய சிறிய படப்பட்டியலில் அவர் சாதித்திருப்பது நீண்ட வரிசை. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துப் போனவர்களில் அவரும் ஒருவர்.
எல்லோரும் ஒரு பாணியில் கடந்து பாதை அமைத்துக் கொண்டிருக்கும்போது, தனக்கென ஒரு பாணியை அழுத்தமாக அமைத்துக் கொண்டவர்.
மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள், உடலால்... உடல் புலன்களால் பாதிக்கப்பட்ட எளிய மனிதர்கள், புறக்கணிக்கப்பட்ட வாழ்வில் அன்பைத் தேடி அலைபவர்கள் என அதுவரை பேசப்படாத, பாலா உருவாக்கிய செல்லுலாய்டு மனிதர்கள் காலம் காலமாய் தமிழ்த் திரையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
அவர்களின் கடின வாழ்வைத் தன் அகத்தின் மூலம் பார்த்து பதிவு செய்த பாலாவின் திரை மொழி மிக அசாத்தியமானது.
நாம் வாழும் காலத்தில் கலை ஆன்மா கொண்ட ஒரு மகத்தான மனிதனைக் கொண்டாடவும்... பெருமைகொள்ளச் செய்யவும் ஓடும் ஓட்டத்தில் நமக்கு நேரம் வாய்க்காமல் போயிருக்கிறது.
இன்னமும் அதைக் காலம் தாழ்த்திக் கொண்டே போகக் கூடாது. அவரது இருபத்தைந்தாம் ஆண்டை விமர்சையாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்.
இயக்குநர் பாலா இயக்கி, அருண்விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் "வணங்கான்" படத்தின் ஆடியோ வெளியீட்டையும், இயக்குநர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணத்தையும் இணைத்து இரட்டை விழாவாக டிசம்பர் 18 ஆம் தேதி அன்று மாலை 5 மணியளவில் சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடத்த உள்ளோம்.
இது பாலா என்கிற ஒரு தனிப்பட்ட இயக்குநருக்கான விழா மட்டுமல்ல. கால் நூற்றாண்டாக தமிழ்த் திரையை கலையம்சம் பொருந்திய தனது திரைக்காவியங்களால் நிறைத்த ஒரு மாமனிதனுக்கு நாம் செய்கிற மரியாதை.
திரையுலகின் ஆகச்சிறந்த ஆளுமைகளும் வாழ்த்த, இன்னும் பல ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் இயக்குநர் பாலா ஆரோக்கிய நடைபோட, நீங்களும் உடனிருந்து வாழ்த்த அழைக்கிறோம்.
தமிழ்த் திரையுலகின் அனைத்து நண்பர்களையும் ஒரே குடும்பமாய் நின்று வாழ்த்த வருகை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த விழாவில், இயக்குநர் பாலா திரையுலகில் அறிமுகம் செய்துவைத்த நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், பாலாவின் நண்பர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?