கோவாவில் பதுங்கியிருந்த ஜானி மாஸ்டர்.. தேடிப் பிடித்த போலீஸ்

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து கோவாவில் பதுங்கியிருந்த ஜானி மாஸ்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Sep 19, 2024 - 13:53
கோவாவில் பதுங்கியிருந்த ஜானி மாஸ்டர்.. தேடிப் பிடித்த போலீஸ்


சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல பாடல்களுக்கு கோரியோகிராபி செய்து பிரபலமானவர் ஜானி மாஸ்டர். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த அலா வைகுண்டபுரமுலோ படத்தில் இடம்பெற்ற புட்டா பொம்மா பாடல் தான் ஜானி மாஸ்டருக்கு செம்ம ரீச் கொடுத்தது. இதனைத்தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலுக்கும் மெர்சலாக கோரியோகிராபி செய்திருந்தார். தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா’ பாடலுக்காக தேசிய விருது வென்று மாஸ் காட்டிய ஜானி மாஸ்டர், பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் கமிட்டாகியிருந்தார். ஆனால், தற்போது இளம்பெண் ஒருவர் கொடுத்துள்ள பாலியல் புகாரால் தலைமறைவாக, அவர் மீது போக்சோ வழக்கு பாயும் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

நடன கலைஞரான இளம்பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் என்றழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது சைதராபாத் போலீசில் சில தினங்களுக்கு முன்னர் புகார் அளித்தார். அதன்படி, ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் பாலியல் புகார் அளித்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை புயலை கிளப்பியுள்ள நிலையில், டோலிவுட்டிலும் இது விஸ்வரூபம் எடுத்தது.

ஜானி மாஸ்டர் மீதான புகாரை அடுத்து, அவரை தனது ஜன சேனா கட்சியில் இருந்து நீக்கினார் நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண். “ஜன சேனா கட்சி பணிகளில் இருந்து ஜானி மாஸ்டர் ஒதுங்கி இருக்க வேண்டும். அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது” எனவும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் தெலங்கானா ஃபிலிம் சேம்பரில் புகார் அளித்தார். இதனையடுத்து தெலங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் ஒரு கமிட்டி அமைத்து இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தெலங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்து ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 40 வயதான ஜானி மாஸ்டர் மீது, 21 வயது பெண் டான்ஸர் பாலியல் புகார் அளித்துள்ளார். சென்னை, மும்பை, ஹைதராபாத் என வெளிப்புற படப்பிடிப்புக்காக சென்றபோது, 6 மாதங்களாக இந்த பாலியல் தொல்லை நடைபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியான தகவலின்படி, ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. புகார் தெரிவித்துள்ள பெண்ணை ஜானி மாஸ்டர் பாலியல் வன்கொடுமை செய்த போது, அவர் 18 வயது பூர்த்தி அடையாத சிறுமி என சொல்லப்பட்டது. இதுகுறித்து உரிய ஆய்வு செய்து, விசாரணைக்குப் பின்னர் ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவாகும் என போலீஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா ஃபிலிம் சேம்பரில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து தெலங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் ஒரு கமிட்டி அமைத்து இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்த விசாரணையின் முடிவில் தெலங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்து நடன இயக்குநர் ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பாலியல் புகார் எழுந்ததை அடுத்து தலைமறைவான ஜானி மாஸ்டரை காவல்துறையினர் தேடி வந்தனர்.போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கோவாவில் பதுங்கியிருந்த ஜானி மாஸ்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow