Indian 2: இந்தியன் 2-வில் AR ரஹ்மான் வேண்டாம்... இதுதான் காரணம்... ஷங்கர் ஓபன்!
இந்தியன் 2 படத்திற்கு ஏஆர் ரஹ்மான் ஏன் இசையமைக்கவில்லை என இயக்குநர் ஷங்கர் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. கமலுடன் இயக்குநர் ஷங்கர், அனிருத், சித்தார்த் ஆகியோரும் இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் பாடல்களில் அனிருத்தின் இசை தரமாக இல்லை என ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர். 1996ல் வெளியான இந்தியன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இப்போது வரையும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இதனால், இந்தியன் படத்தின் பாடல்களையும், தீம் மியூசிக்கையும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து, அனிருத்தை கலாய்த்து வந்தனர். இந்தியன் 2ம் பாகத்துக்கும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தால், இந்தப் படமே வேற லெவலில் வந்திருக்கும் எனவும் கமெண்ட்ஸில் ஷங்கரை பங்கம் செய்து வந்தனர். அதேபோல், மலேஷியாவில் நடைபெற்ற இந்தியன் 2 ப்ரோமோஷனில், ஏன் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவில்லை, அனிருத்தின் மியூசிக் உங்களுக்கு பிடித்துள்ளதா என ரசிகை ஒருவர் கமலிடமே கேள்வி எழுப்பினார். இதற்கு கொஞ்சம் காட்டமாக பதில் சொன்ன கமல், இதெல்லாம் இயக்குநர் ஷங்கரிடம் கேட்க வேண்டிய கேள்வி என மெர்சல் காட்டினார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற இந்தியன் 2 ப்ரோமோஷனில், இதே கேள்வியை இயக்குநர் ஷங்கரிடம் கேட்கப்பட்டது. அதாவது இந்தியன் 2 படத்திற்கு ஏன் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவில்லை, அனிருத்தின் இசை விமர்சனத்திற்குள்ளாகியுள்ளதே என கேள்விகள் எழுந்தன. அதற்கு பதிலளித்த இயக்குநர் ஷங்கர், ரஜினியின் 2.O படம் முடியும் போது இந்தியன் 2 கதையை ஓகே செய்துவிட்டோம். அப்போது 2.O கிராபிக்ஸ் ஒர்க் முடிய ஒரு வருடம் ஆகும் என்பதால், ஏஆர் ரஹ்மானும் அதுவரை பிஸியான மோடில் இருந்தார். அந்த நேரம் பார்த்து அவரிடம் இந்தியன் 2 படத்துக்கு பாடல்கள் கேட்டால், 2.O பின்னணி இசை வேலைகள் தாமதமாகிவிடும். அதனால் தான் இந்தியன் 2 படத்திற்கு அனிருத்தை கமிட் செய்தேன், அப்போது அவரது இசை எனக்கு பிடித்திருந்தது என்றார்.
அதுமட்டும் இல்லாமல் நான் எல்லோரது இசையையும் கேட்பேன் எனவும், யுவன், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன் ஆகியோருடன் வேலை பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறேன் எனக் கூறினார். இதனால் இந்தியன் 2 படத்துக்கு ஏஆர் ரஹ்மான் ஏன் இசையமைக்கவில்லை என்ற ரசிகர்களின் குழப்பத்திற்கு விடை கொடுத்துள்ளது. முக்கியமாக உலக நாயகன் கமல்ஹாசனும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இந்தியன் தாத்தாவுக்கு எத்தனை வயசு என்ற பஞ்சாயத்தை விட, ஏஆர் ரஹ்மான் ஏன் இசையமைக்கவில்லை என்பது தான் பெரிய வாய்க்கால் தகராறாக இருந்தது. அதற்கும் இப்போது முடிவு வந்துள்ளதால், ஏஆர் ரஹ்மான் ரசிகர்களும் கூல் ஆகியுள்ளனர்.
What's Your Reaction?