“ஒன்று முதல் ஐந்து ஸ்வீட் பாக்ஸா?” – ஆர்டர் போட்ட தலைமை... அரண்டுப் போன அறிவாலய மாஜிக்கள்..!
அறிவாலயம் பக்கம் மாஜி அமைச்சர்களின் புலம்பல் சத்தம் அதிகமாகக் கேட்பதாக வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போது கவனத்தை பெற்று வருகிறது.
இடைத்தேர்தல் செலவுக்காக மாஜி அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒன்று முதல் ஐந்து ‘ஸ்வீட் பாக்ஸ்’ வரை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று அறிவாலயத் தலைமை தரப்பில் ஸ்டிரிக்ட்டாக சொல்லப்பட்டிருக்கிறதாம். இதுதான் சில முன்னாள் அமைச்சர்களின் காதுகளைச் சூடாக்கியிருக்கிறதாம்.
‘பவரில் இருந்தபோதே சென்ட்ரலைஸ்... சென்ட்ரலைஸ் என்று சொல்லி தலைமையே அதிகமாக எடுத்துக்கொண்டது. கடைசியில் எங்களுக்கு சிந்தியது மட்டும்தானே மிச்சம்! என்று சிலர் ஆதங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிலும், கட்சிக்குள் சில முன்னாள் அமைச்சர்கள்தான் முன்பு அதிகமாகப் ‘பசையைப் பார்த்தவர்கள்’ என்று பேசப்படும் நிலையில், அவர்களிடம் அதிக தொகையை வசூலிக்காமல், எல்லோரிடமும் ஒரே மாதிரி கணக்கு கேட்பது எப்படி நியாயமாகும் என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியிருக்கிறார்களாம்.
இதுதொடர்பாக, மலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் சிலர் தங்களுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்ததாகவும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
‘யார் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதற்கும் ஒரு கணக்கு வேண்டாமா? எல்லோரிடமும் சராசரியாக கேட்டால் எப்படி?’ என்ற புலம்பல்தான் இப்போது அறிவாலய வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காம். ஆனால், இடைத்தேர்தல் என்றாலே செலவுகள் எகிறும் என்பதால், கட்சித் தலைமையும் தேர்தல் பணிகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதில் தீவிரமாக இருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ஸ்வீட் பாக்ஸ் எண்ணிக்கை ஒன்று... புலம்பல் எண்ணிக்கை அதைவிட அதிகமா? என்கிறார்கள் அறிவாலயத்தைச் சுற்றி உலா வரும் ‘அரசியல் சுவாமிகள்.
What's Your Reaction?



