தடுப்பூசி போடப்போன பாட்டிக்கு தலையில் ரத்த காயம்.. மதுரை சுகாதார நிலையத்தில் பரபரப்பு

May 3, 2024 - 20:14
தடுப்பூசி போடப்போன பாட்டிக்கு தலையில் ரத்த காயம்.. மதுரை சுகாதார நிலையத்தில் பரபரப்பு

மதுரையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் வேல்முருகன் – விமலா தம்பதி. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. 

இந்த நிலையில் விமலாவின் தாயார் போதுமணி, மதுரை நரிமேடு பகுதியில் ஆரம்ப பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் சுகாதார நிலையத்தில் பேத்திகளுக்கு தடுப்பூசி போட அழைத்துச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக சுகாதார நிலையத்தின் மேற்கூரை பூச்சு இடிந்து  மூதாட்டி போதுமணியின் தலையில் விழுந்தது. இதில் அவர் படுகாயமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் காயமின்றி தப்பினர். 

தடுப்பூசி போட சென்றபோது ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கூரை பூச்சு இடிந்து மூதாட்டியின் மீது விழுந்தது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  குழந்தைகள் மீது விழுந்திருந்தால் நிலைமை என்ன ஆகும்? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. 

இந்த சம்பவம் காட்டுத் தீயாக பரவிய நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரி, கட்டடத்தை உடனடியாக பூட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக  தல்லாகுளம் காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டடம் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு கட்டடத்தை சீரமைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow