ஜெ. நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தடை! தீபா தொடர்ந்த வழக்கில் கர்நாடக நீதிமன்றம் அதிரடி!

மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசிடம் நகைகளை ஒப்படைக்க உத்தரவிட்ட நிலையில் இடைக்கால தடை.

Mar 5, 2024 - 16:11
Mar 5, 2024 - 16:14
ஜெ. நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தடை! தீபா தொடர்ந்த வழக்கில் கர்நாடக நீதிமன்றம் அதிரடி!

ஜெயலலிதாவின் நகைகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் சொத்து எங்களுக்கானது என தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

1991-1996 ஆம் ஆண்டு கால கட்டத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துக் குவித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதில், 28 கிலோ தங்கம், 800 கிலோ வெள்ளி, வைரம், மரகதம் உட்பட விலை உயர்ந்த கற்கள், புடவைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து வழக்கு விசாரணை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. இந்நிலையில், ஜெயலலிதாவின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட்டு, அந்த பணத்தை நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த கோரி நரசிம்மமூர்த்தி என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழ்நாடு அரசிடம் மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் ஒப்படைக்குமாறு கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா, தீபக் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கு இன்று (மார்ச் 5) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் வாரிசுதாரர்களுக்கு செல்ல வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா நகைகளை தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும், மனு தொடர்பாக கர்நாடக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow