தோல்வி பயத்தில் அமேதியில் இருந்து ராகுல் ஓட்டம் பிடித்து விட்டார் - பிரதமர் விளாசல்
மக்களவைத் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் அமேதி தொகுதியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி ஓட்டம் பிடித்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
11 மணி நேர காங்கிரஸ் உயர்மட்டக் கூட்டத்திற்குப்பின் வேட்புமனுத்தாக்கலின் கடைசி நாளான இன்று, ரேபரேலியில் ராகுல்காந்தியும் அமேதியில் கிஷோர் லால் சர்மாவும் போட்டியிடுவர் என காங்கிரஸ் அறிவித்தது. தொடர்ந்து சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் பர்தமானில் நடந்த பாஜக பேரணிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, ராகுல்காந்தி அஞ்சவோ ஓடவோ தேவையில்லை எனக்கூறினார். பயத்தால் தாயும் மகனும் தங்கள் தொகுதிகளில் இருந்து ஓட்டம் பிடிப்பதாகவும் சோனியாகாந்தி அப்படி ஓட்டம் பிடித்தே ராஜஸ்தானுக்குச் சென்று மாநிலங்களவையில் நுழைந்ததாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார். ஏற்கனவே வயநாட்டில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் இருந்த ராகுல், தனது விசுவாசிகளின் முழு ஆதரவையும் மீறி அமேதியை விட்டுக்கொடுத்து ரேபரேலியில் போட்டியிடுவதாகவும் பிரதமர் கூறினார். ராகுல்காந்தியின் இந்த நடவடிக்கை இரு தொகுதிகளிலும் தோல்வியை தழுவுவதற்கான அச்சம் எனவும் அவர் கூறினார்.
ஒருபுறம் ராபர்ட் வர்தா அமேதிக்கு சீட் கேட்டுக் கொண்டிருந்த போது, கட்சி மேலிடம் பிரியங்கா காந்திக்கு அதனை வழங்க ஆசைப்பட்டதாகவும், தற்போது பிரியங்காவுக்கும் டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது காங்கிரசுக்குள் ஏதோ ஒன்று நடப்பதை காட்டுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். அது என்ன என்பதை அவர்களே நாட்டுக்கு சொல்ல வேண்டும் எனவும் பிரதமர் கூறினார்.
What's Your Reaction?