ஆவியூர் கல்குவாரி விபத்தின் பின்னணி.. 2,150 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல்..

May 3, 2024 - 20:05
ஆவியூர் கல்குவாரி விபத்தின் பின்னணி.. 2,150 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல்..

விருதுநகர் அருகே கல்குவாரியில் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து உயிர்ப்போடு இருக்கும் 2,150 கிலோ வெடி மருந்துகளை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் - கீழஉப்பிலிக் குண்டு சாலையில் உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் (மே 1) பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பாறைகளை உடைக்க பயன்படும் வெடி மருந்துகளை, குவாரி அருகே உள்ள குடோனில் இறக்கியபோது எதிர்பாராத விதமாக வெடிமருந்துகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் சிதறி கிடக்கும் வெடி மருந்து பொருட்களை சேகரிக்கும் பணி 3-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது, வெடிமருந்து கிடங்கில் 1,500 கிலோ வெடிபொருட்கள் மட்டுமே சேமித்து வைக்க அனுமதி உள்ள நிலையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன்னிற்கும் அதிகமாக இருப்பு வைக்கப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து முதற்கட்டமாக 2,150 கிலோ வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டு 2 சரக்கு வாகனங்களில் காரியாபட்டி வட்டாட்சியர் மாரீஸ்வரன் மற்றும் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் காயத்ரி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பந்தல்குடியில் உள்ள தனியார் வெடிமருந்து சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

மேலும், சிதறிக் கிடக்கும் வெடிமருந்து பொருட்களை முழுமையாக கைப்பற்றி அதை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்ற பின்னரே கல்குவாரியில் செலுத்தப்பட்டுள்ள வெடி மருந்துகளை வெடிக்க திட்டமிட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow