“எங்களுக்கு கார் வேண்டாம்”... அதற்கு பதில் சௌமியா அன்புமணி கேட்டது என்ன?
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவித்திருந்த நிலையில், பாமக எம்எல்ஏக்கள் அரசு வழங்கும் கார் எங்களுக்கு வேண்டாம் என்று அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய், எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்றும், வாகன பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.75 ஆயிரமும், அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட செலவுகளுக்காக கூடுதலாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இதன் மூலம் ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் மாதந்தோறும் ரூ.1 லட்சம் வரை கூடுதல் செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
அரசு ஏற்கனவே நிதிச்சுமையில் இருப்பதாக கூறப்படும் நிலையில், எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது தேவையற்ற கூடுதல் செலவை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே, அரசு வழங்கும் காரை தங்களது எம்எல்ஏக்கள் பயன்படுத்த வேண்டாம் என திமுக தரப்பில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில் பாமகவும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணியிடம், நிதிச்சுமையில் தமிழ்நாடு இருக்கும் நிலையில் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் அறிவிப்பை பாமக உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்களா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சவுமியா அன்புமணி, பாமகவை பொறுத்தவரை அனைத்து எம்எல்ஏக்களிடமும் ஏற்கனவே வாகனங்கள் இருப்பதாகவும், எனவே அரசு வழங்கும் வாகனம் தங்களுக்கு வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசு கார் வழங்குவதற்காக ஒதுக்கப்படும் நிதியை தங்களது தொகுதிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, எம்எல்ஏக்களுக்கான வாகனத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் தங்களது தொகுதிகளில் நெல் கொள்முதல் குடோன் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என சவுமியா அன்புமணி கூறினார்.
பாமக சார்பில் தற்போது தமிழக சட்டப்பேரவையில் நான்கு எம்எல்ஏக்கள் உள்ளனர். தர்மபுரி தொகுதி எம்எல்ஏவாக சவுமியா அன்புமணியும், செஞ்சி தொகுதி எம்எல்ஏவாக கணேஷ் குமாரும், விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக சிவக்குமாரும், ஜெயங்கொண்டம் தொகுதி எம்எல்ஏவாக வைத்திலிங்கமும் உள்ளனர்.
சவுமியா அன்புமணி பாமக சட்டமன்றக் குழுத் தலைவராக செயல்பட்டு வருவதால், அவரது அறிவிப்பைத் தொடர்ந்து பாமகவைச் சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் காரை ஏற்கமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் திட்டத்திற்கு மாற்றாக, விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் நெல் கொள்முதல் குடோன்களை அமைக்க வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கை தற்போது கவனம் பெற்றுள்ளது. அரசு இந்த கோரிக்கையை ஏற்குமா என்பது அடுத்தகட்டத்தில் தெரியவரும்.
What's Your Reaction?