ஜென் ஸீ vs மூத்த தலைமுறை...உறவுச் சிக்கல்களின் பின்னணி!
ஆல்பா கிட்ஸ்களுக்கும் மூத்த தலைமுறைக்கும் இடையிலான உறவுச் சிக்கலைப் பற்றி ஆசிரியர் சொல்வதை தொடர்ந்து பார்ப்போம்.
Part 4 : ஆல்ஃபா கிட்ஸ்களும் ஆசிரியர்களும்
-(மித்ரன்)
நாம் வாய் மொழியாக போடும் உத்தரவுகளைவிட நமது தனிப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குகள் ஜென் அல்பா குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன. கடந்த காலங்களில் இருந்த வாத்தியார்கள் போல பாடம் நடத்துவதோடும், அறிவுரைகள் சொல்வதோடும் அவர்களின் கடமை முடிவதில்லை.
ஒரு மாணவருக்கு அறிவுரை சொல்வதற்கு முன், தாங்கள் அதைக் கடைப்பிடிக்கிறோமா என்பதை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. தனது ஆசிரியர் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என இருக்காமல், தங்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன், அவரது மனநிலையை மோப்பம் பிடித்து விடும் கூர்மையான அறிவு இக்கால குழந்தைகளிடம் இருக்கிறது. பல்வேறு நெருக்கடிகள் காரணமாக மனதில் சங்கடத்துடனும், அரை குறை ஈடுபாட்டுடனும் சில நாட்கள் வகுப்பிற்கு வருவோம்
அப்படி மன சஞ்சலத்துடன் ஆசிரியர் வந்தால், அதை எவ்வளவு முயன்றாலும் மறைக்க முடியாது குழந்தைகள் உடனே கண்டு பிடித்து விடுகிறார்கள். ஆசிரியர் 10% சங்கடத்தில் இருந்தால் மாணவர்கள் அதை உணர்ந்து 100% சங்கடப்படுகிறார்கள். ஆனால் மனதில் உள்ள கவலையை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு உள்ளே நுழைந்தால், அற்புதமான மாற்றங்களை ஆல்ஃபா குழந்தைகளிடம் காண முடியும்
”குழந்தைகளே எனக்கு உடல்நிலை சரியில்லை. ஆனால் உங்களுடன் இருக்க ஆசையாக இருக்கிறது. உடல்நிலை சரியில்லாவிட்டாலும் வழக்கம் போல் பாடம் நடத்த முடியும்” என்று மெல்லிய குரலில் சொன்னால் போதும்.
”என்னால சத்தம் போட முடியாது ஆனா நீங்க கிளாசில் ஒழுங்கா இருந்து ஒத்துழைக்க முடியுமா?” என லேசாக ஐஸ்கிரீம் தடவிய வார்த்தைகளை சொன்னால் போதும். அன்று முழுவதும் அந்த ஆசியருக்கு குழந்தைகள் எந்த தொந்தரவும் தராமல் சொன்னதை தட்டாமல் கேட்டு நம்மை திக்கு முக்காடச் செய்வார்கள்
மற்ற நாட்களில் தன் உடம்பின் எல்லா தெம்பையும் காட்டி துறு துறுவென சப்தம் போடும் குழந்தைகள், அன்று முழுவதும் ஃபிளைட் மோடில் அசத்துவார்கள். தெரியாமல் சத்தம் போடும் சக மாணவரை, “டீச்சருக்கு உடம்பு சரியில்லை” என்று அடக்குவார்கள்
அதுமட்டும் இல்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் விரோதம் பாராமல் பொறுப்பாக வகுப்பில் வேலைகளைச் செய்வார்கள். ஆசிரியரே மாணவர்களின் செல்லப் பிள்ளை என்று சொல்லும் அளவு சீராட்டுகிறார்கள் ஆல்ஃபா கிட்ஸ்
இதனால் நான் ஆசிரியருக்கு சம்பிரதாயமாக செய்யப்படும் ராணுவ பாணி மரியாதைகளை எதிர்பார்ப்பதில்லை என்கிறார் ஜிட்டு கிருஷ்ண மூர்த்தியின் உபாசகரான அந்த இளம் ஆசிரியர்.
What's Your Reaction?

