பா.ம.க பாசம்..பின்வாசல் பேரம்: க்ளைமாக்ஸில் திமுக- திருமா டிராமா!
வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமகவினை இணைக்கவும், விசிகவை தக்க வைக்கவும் ஒரே நேரத்தில் அரசியல் காய்கள் நகர்த்தப்பட்டு வருகிறது. அதுக்குறித்து அலசுகிறது இந்த கட்டுரை.

மாற்றம் என்பது மானுடத்தத்துவம்; மாறாது என்ற சொல்லைத் தவிர மற்றவை அனைத்தும் மாறிவிடும்’ - கார்ல் மார்க்ஸின் இந்த தத்துவம் தமிழக அரசியல் கள நிலவரத்துக்கு நன்றாகவே பொருந்திப் போகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அணியில் இருந்த பா.ம.கவை வளைக்க ஆளும் தி.மு.க பாசம் காட்டி பின்வாசல் வழியே பேரம் பேசுவதாக கசியும் தகவல்கள் தமிழக அரசியலை மட்டுமின்றி, தி.மு.க கூட்டணியில்இருக்கும் திருமாவையும் அதிர வைத்திருக்கிறது!இதுகுறித்து அரசியல் விமர்சகர் ஒருவரிடம் பேசினோம்.
காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் அசுர பலத்தில் உள்ள தி.மு.க கூட்டணி 2019 நாடாளுமன்றத் தேர்தல் முதல் தொடர்ந்து வெற்றியை மட்டுமே ருசித்து வருகிறது. பா.ம.க இருக்கும் கூட்டணியில் வி.சி.க இடம் பெறாது. இது எழுதப்படாத விதியாக இருகட்சிகளும் பின்பற்றி வருகின்றன. அந்த வகையில் தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க வந்தால், அந்தக்கூட்டணியில் வி.சி.க இடம் பெறாது என்பதில் திருமா திடமாக இருக்கிறார். வடமாவட்டங்களில் பெருவாரியான வன்னியர்களின் வாக்கு வங்கியாக பாமக இருக்கிறது. இதனால், வி.சி.கவை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிடலாம் என்ற சலனம் தி.மு.கவுக்கு இருப்பதாக தெரிகிறது.
ராமதாஸ் யோசனை!
2026 தேர்தலின்போது பா.ஜ.க கூட்டணியில் இருக்கக்கூடாது என்ற மனநிலைக்கு சில மாதங்களுக்கு முன்பாகவே பா.ம.க வந்துவிட்டது. தான் செல்லும் புதிய கூட்டணியில் வி.சி.கவும் இருக்கும் நிலை வரலாம் என்பதால் தான் வி.சி.கவை ஆதரவு டோனில் அணுகி , இணக்கமான சூழலை ஏற்படுத்தி வந்தது. இப்படியான சூழலில், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உறுதியாகவே, மற்றொரு ஆப்ஷனாக தி.மு.க தலைமையுடன் பா.ம.க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
குடும்ப பிரச்சினை, தொடர் தோல்வி, அங்கீகாரம் மற்றும் சின்னம் பறிப்போனது உள்ளிட்டவற்றால் பா.ம.க தடுமாறி வருகிறது. எனவே, 2026 தேர்தலில் பா.ம.க-வின் வெற்றி சதவிகிதம் அதிகரிப்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. அதனால் குறைந்த சீட்டுகளை பெற்றாலும், அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கு தி.மு.க கூட்டணியே சரியென பா.ம.க நினைக்கிறது. அதேசமயம் , 2026 தேர்தல் பலமுனை போட்டியாக இருக்கும் என்பதால், பா.ம.க-வை கூட்டணிக்குள் கொண்டு வந்து கூட்டணியை பலப்படுத்த தி.மு.கவும் விரும்புகிறது. இதற்கிடையே, ‘பா.ம.க, பா.ஜ.க இருக்குமிடத்தில் இருக்க மாட்டோம்’ என திருமா உறுதியாக இருப்பதால், பா.ம.கவை கூட்டணிக்குள் கொண்டுவருவது பற்றி திருமாவிடம் அறிவாலயம் தரப்பில் சமாதானம் பேசப்பட்டிருக்கிறது.
பேச்சுவார்த்தைக் குழு அமைப்பு
தமிழகத்தில் எதிரணியின் கூட்டணியை பலப்படுத்தி பா.ஜ.க. வளர்வதற்கு நாம் அனுமதித்துவிடக் கூடாது. மறுபுறம் விஜய் வேறு வாக்குகளை பிரிக்க வந்துவிட்டார். அதனால் நம் கூட்டணியை இன்னும் பலப்படுத்த வேண்டும். அதற்கு பா.ம.கவை உள்ளே கொண்டுவர ஒத்துழைக்க வேண்டும்’ என்று ராமதாஸிடம் பேசும் பொறுப்பை அமைச்சர் துரைமுருகனிடமும், அன்புமணியை சமாதானப்படுத்தி சம்மதம் வாங்கும் பொறுப்பை எம்.பி ஜெகத்ரட்சகனிடமும் தி.மு.க. கொடுத்துள்ளது.
தி.மு.க-வின் அழைப்பை பா .ம .கவும் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது. மே 11-ம் தேதி சித்திரை முழுநிலவு திருவிழா நடைபெறவுள்ளது. அதில்தான் பா.ம.கவின் முழுகவனமும் இருக்கிறது. இதற்குப் பின்னால் கூட்டணி தொடர்பாக பேசலாம் என தைலாபுரத்தில் இருந்து அறிவாலயத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இரு கட்சிகளுக்கும் இடையே நல்லுறவு நிலவி வருவதன் காரணமாகத்தான் தமிழக சட்டசபையில் ஜி.கே.மணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முதல்வர் கொண்டுவரும் தீர்மானம், விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு,கவன ஈர்ப்பு தீர்மானம் என அனைத்திலும் பா.ம.கவிற்கு அதிக வாய்ப்புகளை சபாநாயகர் அப்பாவு வழங்கி வருகிறார். 20 நாட்களுக்கும் மேலாக நடந்துவரும் சட்டசபை கூட்டத்தொடரில் பா.ம.க ஒரு முறை மட்டுமே வெளிநடப்பு செய்திருக்கிறது. இவை எல்லாம் தி.மு.க -பா.ம.க இடையே புது நட்பு ஏற்பட்டு இருப்பதையே காட்டுகிறது.
திருமா ஆதங்கம்
என்னதான் வி.சி.க., தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் பெரும்பாலான தேர்தல் பிரசாரங்களில் பட்டியலின பகுதிகள்தவிர்த்து மற்ற இடங்களில் வி.சி.க கொடி, பெயரை தி.மு.க பயன்படுத்துவது கிடையாது. ஏனென்றால், வி.சி.கவால் மாற்று சமூக வாக்குகள் கிடைக்காது என்பதால் இதை அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க கடைப்பிடித்து வருகிறது. ஏற்கெனவே தொகுதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, கொடிக் கம்பம் நடுவதற்கு தடை என பல விஷயங்களில் வி.சி.க.,தி.மு.கவுடன் மனக்கசப்பு கொண்டிருக்கும் நிலையில், பா.ம.கவை கூட்டணிக்கு அழைத்து வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருவது திருமாவளவனை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதன் காரணமாகத்தான் ஏப்ரல் 20-ம் தேதி ஃபேஸ்புக் லைவ் மூலமாக கட்சி நிர்வாகிகளிடம் திருமாவளவன் பேசியபோது, ‘ஏதோ நாம் தி.மு.கவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோம் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதல் பேரம் பலிக்கும் இடத்தில் உறவை வைத்துக்கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது எல்லாம் பெரிய ராஜதந்திரம் இல்லை. அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல். நாம் அதை பொருட்படுத்தவில்லை, ஈடுபாடு காட்டவில்லை’ என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதுமட்டுமின்றி, ‘அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ எனவும் திருமா வேண்டுகோள் விடுத்திருந்தார். அதாவது, தி.மு.க கூட்டணியில் இல்லையென்றால், அதிமுக கூட்டணியில் இணைந்துவிடலாம் என்ற யோசனை அவருக்கு இருந்தது. ஆனால், தற்போது அதிமுக-பாஜகவுடன் கூட்டணி அமைந்திருப்பது அதற்கு தடையாக இருக்கிறது. அதுவே அவரது மேற்கண்ட ஸ்டேட்மெண்ட்டுக்கு காரணம்.
யாருடன் கூட்டணி?
இதற்கிடையே ஏப்ரல் 22-ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு கூட்டம் நடைப்பெற்றது. அதில், 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து நிர்வாகி -களுடன் திருமா ஆலோசித்தார். இதில் சில நிர்வாகிகள், ‘வி.சி.கவிற்கு மாநில கட் சி அங்கீகாரம் கிடைத்துள்ளது .அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால், தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற வேண்டும். 20 தொகுதிகள் குறையாமல் போட்டியிட வேண்டும். அப்படி கிடைக்கவில்லை என்றால் மாற்றாக, ‘கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்று கூறிவரும் த.வெ.க இருக்கிறது. அதை பயன்படுத்திக்கொள்ளலாம்’ என பேசினர். அதற்கு திருமா, ‘யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என அவர்களை அமைதிப்படுத்தி இருக்கிறார்.
Read also: சொந்த மண்ணுக்கு என்ன செய்தார் அண்ணாமலை? தொட்டம்பட்டி விசிட்
கூட்டணி சரிப்பட்டு வருமா?
தொண்டர்கள், நிர்வாகிகளே விஜய்யை மனதில் வைத்துப் பேசும்போது, திருமாவுக்கும் அப்படியொரு எண்ண ஓட்ட ம் இல்லை என்பது என்ன நிச்சயம்? இருந்தாலும் பா.ம.கவையும் வி.சி.கவையும் கூட்டணிக்குள் கொண்டுவந்து இருதரப்புக்கும் இடையே இருக்கும் மனத்தாங்கலையும் வெறுப்புணர்வையும் போக்க தி.மு.க தலைமை திட்டமிடுகிறது.
இந்தக் கூட்டணி சரிப்பட்டு வருமா என்ற கேள்வி பலருக்கும் வரலாம். ஏற்கெனவே கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ராமதாஸையும் திருமாவளவனையும் ஒரே மேடையில் ஏற்றியது நினைவிருக்கலாம். அத்தகையதொரு அரிய நிகழ்வை ஸ்டாலின் நிகழ்த்திப் பார்க்க ஆசைப்படுகிறார். ஆனால் அதற்கான நேரம் இன்னும் கூடிவரவில்லை. அதனால்தான், ‘பா.ம.க, தி.மு.க கூட்டணிக்குள் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று வெளிப்படையாக பேசிவருகிறார். அதற்கான காலம் கனிந்தால் எல்லாம் சாத்தியமே என்று முடித்தார்.
இதுகுறித்து பா.ம.க பொருளாளர் திலகபாமாவிடம் பேசினோம். ”வதந்திக்கெல்லாம் பா.ம.க பொருளாளராக என்னால் பதில் சொல்ல முடியாது. நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன. அதைப்பற்றி கேளுங்கள், பதில் சொல்கிறேன். தேர்தல் நெருக்கத்தில் இதைப்பற்றி பேசலாம்” என்றார். வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசுவிடம் பேசியபோது, ”நாம் தி.மு.க. கூட்டணியில்தான் தொடர்கிறோம் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திருமா பேசினார் . கூட்டணி தொடர்பாக எந்த இன்ஸ்ட்ரக்ஷனும் கொடுக்கவில்லை. வாரம் வாரம் எங்கள் தலைவர் ஃபேஸ்புக் வாயிலாக எங்களிடம் பேசுவார். அப்படி பேசும்போது,வி.சி.கவுக்கு எதிராக செயல்படும் இணைய கூலிகள் வி.சி.க-வை தி.மு.கவின் கொத்தடிமை என்றெல்லாம் பேசுகிறார்கள்.
எங்களுக்கு வேறு ஆப்ஷனே இல்லாத மாதிரி முத்திரை குத்த முயற்சி பண்ணுகிறார்கள். எங்களுக்கு எவ்வளவோ ஆப்ஷன் இருந்தும் தி.மு.க. கூட்டணியில் இருப்பதற்கு காரணம், பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும், இது சமூகநீதிக்கான கூட்டணி என்பதால்தான் என்று சொன்னார். இது திரித்து புரிந்துக் கொள்ளப்படுகிறது என்றுதான் நாங்கள் சொல்கிறோம். அதேபோல ‘பா.ம.க, தி.மு.கவின் கூட்டணிக்கு வருகிறது அதனால்தான் திருமா வீடியோவில் பேசினார்’ என சொல்வது அவரவர்களுக்கு ஏற்றவாறு புரிந்துகொள்வதுதான்.
பா.ம.க. கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை என முதலமைச்சரே சொல்லிவிட்டார். நாங்கள் தி.மு.க கூட்டணியில்தான் இருப்போம் என எங்கள் தலைவரும் சொல்லிவிட்டார். அப்படியிருக்க, இந்த கேள்வியை எழுப்புவது கூட்டணியை பலவீனப்படுத்த முயற்சி செய்பவர்களின் சதிவேலையாகத்தான் பார்க்கிறோம்” என்றார்.
-- (பாபு/மா.செந்தில்நாதன் - குமுதம் ரிப்போர்ட்டர் - 29.04.2025)
What's Your Reaction?






