கவுதம் கார்த்திக் பிறந்தநாள்.. வெளியான புதிய அப்டேட்... இதிலாவது கம் பேக் கொடுப்பாரா?
இன்று (செப். 12) தனது பிறந்தநாளை முன்னிட்டு புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகர் கவுதம் கார்த்திக்.
மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனும் நடிகர் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கவுதம் கார்த்திக்கின் பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 12). 2013ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார் கவுதம் கார்த்திக். இதையடுத்து வை ராஜா வை, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், இருட்டு அறையில் முரட்டு குத்து, 1947, என்னமோ ஏதோ உள்ளிட்ட பலப் படங்களில் நடித்தார். ஆனால் என்னவோ? என்ன மாயமோ? தெரியவில்லை இவரது படங்கள் ஒன்று கூட ஹிட் லிஸ்டில் வந்ததே இல்லை. கார்த்திக்கின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவுக்குள் நுழைந்த கவுதம் கார்த்திக்கிடம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை சுக்கு நூறாக உடைத்தெறிந்தார் கவுதம்.
நடிப்பை அழகாக வெளிப்படுத்தினாலும் கதை தேர்வு சரியானதாக இருக்க வேண்டும் என சினிமா விமர்சகர்கள் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் இன்று (செப். 12) தனது பிறந்தநாளை கொண்டாடும் கவுதம் கார்த்திக் தனது ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை கூறியுள்ளார். அவருடைய புதிய படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே.பாபு. எம்.ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ஏ.பி.வி மாறன் மற்றும் இயக்குநர் கணேஷ் கே.பாபு இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜுமுருகன் வசனம் எழுதுகிறார். அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தினா ராகவன், இந்தப் படத்தின் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மேலும் படிக்க: 10 வருட போராட்டம்.. டிவி தொகுப்பாளினி டிடி வாழ்க்கையில் தொடரும் சோகம்.. என்னாச்சு?
இந்த புதிய படம் குறித்து பேசிய இயக்குநர் தினா ராகவன் கூறியதாவது, “தென்சென்னையில் உள்ள தரமணி போன்ற பகுதியில் நடக்கும் உள்ளூர் அரசியலை, எளிமையான சம்பவங்களாலும் உண்மைக்கு நெருக்கமாகவும் அரசியல் நையாண்டிகள் கலந்தும் சொல்ல முயற்சிக்கும் படமாக இதை உருவாக்க இருக்கிறோம். சாமானியனின் யதார்த்த வாழ்வியலோடு அரசியலை சற்று காமெடி கலந்து சொல்வது தான் இந்த படம். இந்த படத்தில் கவுதம் கார்த்திக்கின் கதாபாத்திரத்தை அரசியலில் இருக்கும் ஏரியா பையன் போன்று உருவாக்கி இருக்கிறோம். இதுவரை அவர் நடித்ததில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரமாக இது இருக்கும். அவரது கதாபாத்திரம் நம் வீட்டில் இருக்கும் ஒருவர் போன்ற உணர்வை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த படமாவது கவுதம் கார்த்திக்கின் சினிமா கரியர் உயர்வதற்குக் கைகொடுக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?