மாடல் அழகியும் பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் மரணமடைந்தார் என்ற செய்தி நேற்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
பூனம் பாண்டேவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மேலாளர் இந்த செய்தியினை பதிவிட்டு வருத்தத்தினை பகிர்ந்திருந்தார்.
இதனால் இந்த செய்தி பூனம் பாண்டேவின் ரசிகர்களுக்கும் மேலும், சினிமா வட்டத்திலும் பெரும் அதிர்ச்சியை அளித்திருந்தது. அதோடு, பூனம் பாண்டேவின் இந்த நோய் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாததும், மேலும், அவரது மரணத்தை எந்த ஒரு ஊடகமோ அல்லது காவல்துறையோ உறுதிப்படுத்தாததும் ஒரு வித சர்ச்சையை ஏற்படுத்தும் விஷயமாகவே அமைந்திருந்தது.
இதுகுறித்து சில முன்னணி ஊடகங்கள் விவாதித்திருந்தன. ஏதேனும் கவன ஈர்ப்பு யுக்தியாகவோ அல்லது பரபரப்பான விளம்பரத்துக்காகவோ செய்யப்பட்ட ஒரு பொய் பரப்புரை எனவும் விமர்சிக்கப்பட்டது.
இன்னிலையில் தனது மரணம் குறித்த சர்ச்சைக்கு அந்த நடிகையே பதிலளித்து ஒரு பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், பூனம் பாண்டே தான் மரணித்ததாகச் சொல்லப்படும் செய்தி தானே உருவாக்கிய பொய் பரப்புரை எனவும், மேலும் இவ்வாறு செய்ததால் பிறரைக் கஷ்டப்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியிருந்தார்.
அதோடு இவ்வாறு செய்ததற்கான காரணம்: கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து அதிகம் விழிப்புணர்வு மக்களிடத்தில் இல்லாததாலும், இதுகுறித்து கட்டாயம் பேசவேண்டிய அவசியத்தில் நாம் உள்ளோம் எனவும், எனவே தனது மரணம் குறித்த இந்த பொய் செய்தி மூலமாக இதுகுறித்து அதிகம் பேசப்பட்டதை நினைத்து தனது நோக்கம் சிறிதேனும் பலனடைந்தாக தெரிவித்தார்.
ஒரு விழிப்புணர்வு செய்தியை எடுத்துக்கூறத் தனது மரணச் செய்தியையே ஒரு துடுப்புச்சீட்டாக பயன்படுத்திய இந்த நடிகையின் செயலுக்கு வலுக்கும் எதிர்ப்புகள் ஒருபுறம் இருக்க இப்படி ஒரு முயற்சியைக் கையாண்டு ஒரு மகத்தான விழிப்புணர்வைக் கூறியிருப்பதற்கு ஒருபுறம் ஆதரவான விமர்சனங்களும் வந்த வண்ணம் இருக்கிறது.
இதையும் படிக்க | டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் - திமுக அறிவிப்பு!