ஜோசப் விஜய் என்னும் நான்.. கர்த்தருடன் திடீர் கூட்டணி: தவெக தேர்தல் வியூகம்

தவெக தலைவர் விஜய்யினை திடீரென்று ஜே.வி என அழைப்பதன் பின்னணி என்ன? விஜய்காக கிறிஸ்துவ அமைப்புகள் ஒன்றிணைக்கிறதா? என்பதை அலசுகிறது இந்த கட்டுரை.

ஜோசப் விஜய் என்னும் நான்.. கர்த்தருடன் திடீர் கூட்டணி: தவெக தேர்தல் வியூகம்
tvk leader vijay new political strategy is targeting the christian vote bank

சமீபத்தில் நடைபெற்ற த.வெ.க. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் மாண்புமிகு ஜே.வி' என விஜய்யை குறிப்பிட்டார். அதாவது, விஜய்யின் இயற்பெயரான ஜோசப் விஜய்யின் சுருக்கம்தான் இந்த ஜே.வி. ‘நான் அய்யனாரு பக்தன்டா..!' என படங்களில் ஆடிப் பாடும், கட்சி லெட்டர்பேட் போட்டோக்களில் கூட நெற்றியில் குங்குமத்துடன் தோன்றும் விஜய், மெல்ல மெல்ல தனது கிறிஸ்துவ அடையாளத்தை கையில் எடுப்பது ஏன், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? 'மாஸ்டர்' விஜய்யின் மாஸ்டர் பிளான் என்ன?

5 கிறிஸ்துவப் பிரிவுகள் ஒன்றிணையுமா?

இதுகுறித்து தமிழகத்தில் நீண்டகாலமாக சர்வீஸில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி நம்மிடம் விளக்கியது இதுதான் "விஜய்யை இப்பவரைக்கும் திமுக உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் சீரியஸா எடுத்துக்கலைன்னுதான் சொல்லணும். ஆனா, கடந்த ஜூன் மாசத்துல இருந்து விஜய்யின் அரசியல் மெல்ல மெல்ல கியர் அப் ஆகுது பாருங்க. திருப்புவனம் அஜித்குமார் விவகாரத்தில் நேரில் போய் நின்றது. சென்னையில் கண்டன ஆர்பாட்டம் நடத்துனதுன்னு. விஜய் மெல்ல, சமூக பிரச்னைகளில் நேரடியாவே தலையிட ஆரம்பிச்சிருக்கார்.  இதன் பின், தொடர் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள்னு விஜய்யின் அரசியல் ரொம்பவே பரபரப்பாகும்.

இதுக்கெல்லாம் பின்னாடி வெளிநாடுகளைச் சேர்ந்த சில பவர் சென்டர்கள் பேக்அப் ஆக இருக்காங்க. ராகுல் காந்தி கிறிஸ்துவர். அவரை இந்தியாவின் பிரதமராக்க வெளிநாட்டு சக்திகள் செயல்படுது. நிதியும் வாரி வழங்குது! அப்டின்னு பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டுது. இப்போ விஜய் பின்னாடியும் இந்த மாதிரி ஒரு டீம்தான் செயல்படப் போகுது. ஆனால், ராகுல் அளவுக்கு பெரிய கேன்வாஸ் இவருக்காக உருவாகவில்லை. அதனால் விஜய்யை பலப்படுத்த என்ன தேவைப்படுமோ, அதை செய்வதற்கு உள்நாட்டில் சில சக்திகளும் வெளிநாட்டிலிருந்து சில அமைப்புகளும் கைகோர்க்குது.

ஆர்.சி. சி.எஸ்.ஐ.. பெந்தெகொஸ்தேன்னு இந்தியாவில் சுமார் ஐந்து கிறிஸ்துவப் பிரிவுகள் இருக்கு பெந்தெகொஸ்தே வழிபாட்டாளர்கள் சினிமா போன்ற கேளிக்கைகளை எதிர்ப்பவர்கள். ஆர்.சி போன்றவர்கள் ஜனரஞ்சகமான வாழ்வியலை உடையவர்கள். இவர்கள் அனைவரும் அரிதான சில விஷயங்களில் மட்டுமே ஒரே நிலைப்பாட்டை எடுப்பார்கள். அப்படி இந்தமுறை விஜய்க்கு ஆதரவாக ஒட்டுமொத்த கிறிஸ்துவர்களின் நிலைப்பாட்டை உருவாக்க ஒரு பெரிய டீம் வேலை செய்யத் துவங்கியுள்ளது.

தேவாலயங்களில் மறைமுக பிரச்சாரம்:

இப்போதைக்கு தீவிர பெந்தெகொஸ்தே பிரிவினரைத் தவிர மற்ற பிரிவுகளின் பிரதிநிதிகள் அனைவரும் ஒரு டீமாக ஒருங்கிணைந்துள்ளார்கள். 'தமிழகத்தை ஒரு கிறிஸ்துவர் ஆள வேண்டும் எனும் கனவு விஜய் மூலமாக நிறைவேறுவது ஆண்டவரின் சித்தமாக உள்ளது. தேவனின் கருவிதான் விஜய். தேவ உத்தரவை நாம் ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம்’ என்கிற அஜெண்டாவுடன் அதற்கான வேலைகளைத் துவங்கியுள்ளனர். நம் பிரச்னைகளை சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பேசி தீர்த்துவைக்க சரியான எண்ணிக்கையில் பிரதிநிதிகள் இல்லை, நமக்கு அரசியல் அதிகாரமும் இல்லை' என்பது கிறிஸ்துவ சபைகளின் நீண்ட நாள் ஏக்கம்.

இந்த குறையைத்தான் இந்த முறை விஜய் மூலமாக தீர்த்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். தங்கள் தரப்பிலிருந்து அதிக எம்.எல்.ஏக்கள், அதிக எம்.பிக்கள், அதிக அமைச்சர்கள் வரவேண்டும் என ஏங்குபவர்களுக்கு விஜய் மூலமாக முதலமைச்சர் வேட்பாளரே கிடைக்கிறார் எனும்போது அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.

இப்போதே சில தேவாலயங்களில், ஞாயிறு உள்ளிட்ட முக்கிய தினங்களில் நடக்கும் சிறப்பு பிரார்த்தனைகளுக்குப் பிறகு மறைமுகமாக இதுக்குறித்த பிரசாரங்கள் தொடங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி அத்தனை திருச்சபையினரையும் ஒன்றிணைத்து ஒட்டுமொத்த கிறிஸ்தவ வாக்கு வங்கியையும் விஜய் பக்கம் வர வைப்பதற்கான பணிகள் துவங்கிவிட்டன. 

இந்த மெகா பிராஜெக்ட்டை நிறைவேற்றுவதற்கான தேவையான நிதியை உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் திரட்ட ஆரம்பித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால்தான், இதுவரை இல்லாத வகையில் தவெக மேடைகளில் அவரை, ஜோசப் விஜய் எனும் பொருளில் சுருக்கமாக ஜே.வி என அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்றார்.

தளபதி பொதுவானவர்: புஸ்ஸி ஆனந்த்

தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் இதுபற்றி கேட்டபோது, “விஜய்யிடம் தெளிவான அரசியல் பார்வை இல்லை. பிரதமரின் கங்கை கொண்ட சோழபுரம் விசிட்டை மையமாக வைத்து அவர் தெரிவித்த கருத்துகள் அத்தனையும் அபத்தம். ஜோசப் விஜய்' எனும் பதத்தை வைத்து கிறிஸ்துவ வாக்கு வங்கியை தவெக ஈர்க்கிறதா என்கிறீர்கள்? ஆனால், விஜய்யின் பெற்றோரை ஈஷாவின் சிவராத்திரி நிகழ்வில் பக்தி மயமாக பார்த்த நியாபகம் இல்லையா?" என்று சிரித்தார்.

இதுபற்றி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் கேட்டபோது "தளபதி அத்தனை மனிதர்களுக்குமான பொதுவான தலைவர். அவர் மாண்புமிகு என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை" என்பதை மட்டும் சொல்லி முடித்துக்கொண்டார்.

விஜய்க்கு ஆதரவாக கிறிஸ்துவ சமுதாயம் ஒன்று கூடுகிறதா, அவர்களை ஒருங்கிணைக்கும் வேலைகளை திருச்சபைகள் செய்கின்றனவா? என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டபோது, “விஜய்யை எல்லா கிறிஸ்துவ சமூகத்தினரும் அப்படி எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட கிறிஸ்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அப்படி விஜய்யை எதிர்பார்க்கலாம், ஆதரிப்பார்கள் என்றுகூட சொல்லலாம்" என்றார்.

(கட்டுரையாளர்: எஸ்.ஷக்தி/ குமுதம் ரிப்போர்ட்டர்/ 05.08.2025)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow