RATHAVETTAI EPISODE 4 : டெல்டாவின் ஃபைல்களில் முக்கூட்டு முருகனின் ரத்த சரித்திரம்!

டெல்டாவின் கிரைம் வரலாற்றில் தனக்கென ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய முக்கூட்டு முருகனின் வல்லம்படுகை வெட்டு பின்னணி, மணல்மேடு சங்கர் காலத்து அதிர்ச்சி சம்பவங்கள் மற்றும் மறைக்கப்பட்ட க்ரைம் ஃபைல்கள் பற்றிய சிறப்பு பார்வை.

Sep 23, 2026 - 20:00
Sep 23, 2026 - 18:09
RATHAVETTAI EPISODE 4 : டெல்டாவின் ஃபைல்களில் முக்கூட்டு முருகனின் ரத்த சரித்திரம்!
RATHAVETTAI EPISODE 4 : முக்கூட்டு முருகன் க்ரைம் ஃபைல் !

வில்லாதி வில்லன் மணல்மேடு சங்கரின் வெறித்தனத்தை கடந்த எபிஸோடில் வாசித்த பலருக்கு இன்னமும் பதற்றம் தணியவில்லை. ஆனால் அப்பேர்ப்பட்ட சங்கரே, ஒருத்தனை கொல்லும்போது சற்றே மனம் மாறிப் பின்வாங்க, 'ஏ சங்கரு! நீ இவனை மன்னிச்சா, இவன் நம்மள நிச்சயம் முடிச்சுடுவான்' என்று எச்சரித்து ஏவிய ஷார்ப் புள்ளியைப் பற்றி பேசாமல் போனால் டெல்டாவின் டெரர் வரலாறு நம்மை மன்னிக்காது.

யார் அந்தப் புள்ளி? எனும் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லும் முன் அவரைப் பற்றி இன்னொரு ஷாக் ஸ்கூப்பையும் பார்த்துவிடலாம்.

கொலையான ஒரு பிணத்தை நோக்கிய நொடியிலேயே போலீஸ் மூளையில் பல பல்புகள் எரியும். சம்பவத்தை செய்தது கூலிப்படையா, அதிலும் குறிப்பிட்ட கிரிமினல் செய்த சம்பவமா என்பதையெல்லாம் பட் பட்டென கண்டுபிடித்துவிடுவார்கள். எப்படி என்றால், அருவா ஒண்ணுதான் ஆனா அதை பிடிக்கிற, பீஸ் உடம்புல இறக்குற ஸ்டைலெல்லாம் கிரிமினலுக்கு கிரிமினல் மாறுபடும். இது போலீஸுக்கு தெரியும்' என்கின்றனர் அறிந்தவர்கள்.

அந்தவகையில் டெல்டா மக்களையும், போலீஸையும் ஒரு காலத்தில் தெறிக்கவிட்ட வெட்டுதான் 'வல்லம்படுகை வெட்டு. அதாவது அருவாளால் உடம்பை பாலம் பாலமாக பிளந்து கூறுபோடுவதுதான் இந்த ஸ்டைல் ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போய் ஆயிரம் தையல் போட்டாலும் வேலைக்காகாது. சிம்பிளாக சொல்வதென்றால் கொலையின் போதே முக்கால்வாசி போஸ்ட்மார்ட்டம் முடிந்துவிடும். வெறித்தனமான இந்த 'வல்லம்படுகை வெட்டை' கண்டுபிடித்த கருணையாளர்தான் முக்கூட்டு முருகன்.

முட்டை ரவி, குரங்கு செந்தில், மணல்மேடு சங்கர், குற சிவா, குற நடராசன் போன்ற அக்மார்க் கொலைகாரர்களின் ஆட்டம் கொலை மற்றும் என்கவுன்ட்டர்களில் முடிந்த பின் டெல்டாவில் 'இனி அமைதிதான்' என்று கனவுக் கொடி ஏறியது. ஆனால் அதை பீஸ் பீஸாக கிழித்தெறிந்த கைதான் முக்கூட்டு முருகன்.

சென்னையில் செட்டிலாகிவிட்ட டெல்டாவின் பழைய டி எஸ்பி ஒருவரை தேடிப்பிடித்து முருகன் பற்றிய தகவல்களைக் கேட்டோம். சர்க்கரை தூக்கலாக ஒரு காஃபி சொல்லிவிட்டு நம்மிடம் திரும்பியவர். தமிழ்நாட்டுல ரவுடியிஸம், கொடூர கொலைகாரர்கள் எங்கே இருப்பாங்க?ன்னு கேட்டால் உடனே எல்லார் கைகளும் தென் தமிழக மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தேனி, ராம்நாட்ன்னுதான் காட்டும். ஆனால் டெல்டாவிலும் அதுக்கு நிகரான அல்லது அதைவிட மசாலா தூக்கலான கொலைகள் நடப்பதுதான் யதார்த்தம் மதுர ரவுடிகளை விடவும் நாகை, திருவாரூர் பிரதேச ரவுடிகள் தங்களுக்குன்னு தனி வெட்டு ஸ்டைல் வேணும், பெயரோடு அடைமொழி வேணும், முக்கியமான புள்ளிகள் கொலை வழக்குல நம்ம பேரும் இருக்கணும்னு சினிமாத்தனமா அலைவாங்க அதில் முக்கியமான ஆளுதான் முக்கூட்டு முருகன் கடலூர் மாவட்டம் வல்லம்படுகை பகுதிக்காரன் இவன்.

சில ரவுடிகள் தங்களோட ஊர் பெயரையோ, சாதிப் பெயரையோ சேர்த்து ஒரு பிராண்டு உருவாக்கிக்குவாங்க. இந்த முருகனை ஒரு கொலை வழக்குல விசாரிக்கிறப்ப 'அதென்னடா முக்கூட்டுன்னு கேட்டப்ப 'மூணு ஏரியாக்கள் சேர்ற ஒரு இடத்துலதான் அண்ணன் முன்னாடி திரிஞ் சாரு சம்பவம் பண்ண ஆள் போட்டோ கொடுத்து. ரேட் பேச வர்றவங்க அவரை அங்கேதான் சந்திப்பாங்க சாரின்னு சொன்னான் அவனோட ஜூனியர் கிரிமினல் துவக்கத்துல முருகன் சின்னச்சின்ன சம்பவங்களைத்தான் பண்ணினான். பெரிய பணக்காரர்களிடம் உருட்டல், மிரட்டல் மூலமா பணம் பறிக்கும் கட்டப்பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஒரு கருவியா இருந்திருக்கான். மிரட்டப் போன இடத்துல 2114 விழுந்தப்ப திருப்பி அடிச்சவன் வெட்டிடுவேன்னு மிரட்டுனப்ப திருப்பி வெட்டவே செஞ்சிருக்கான். இப்படித்தான் கொலைகாரனா உருவெடுத்தான். அதுவும் அருவா மாதிரி ஆயுதத்தை முருகன் பிடிக்கிற பிடியும், அதை ஆளுங்க மேலே இறக்குற விதமும் வலுவா இருக்கும். அதனாலேயே அவனுக்கு டிமாண்ட் அதிகமாக ஆரம்பிச்சுது.

1987 வாக்குல வல்லம்படுகை கிராமத்தில் தேர்தல் அரசியலை மையமா வெச்சு தியாகராஜன், கோவிந்தராஜ்னு ரெண்டு நபர்களுக்கு இடையில் பகை உருவாச்சு. இது தீயாக பற்றி எரிஞ்சு பல புதிய ரௌடிகள் உருவாகவும், பலரது தலைகள் உருளவும் காரணமா அமைஞ்சது. இந்த டீமை வெட்டுனா, அந்த டீம் குத்தும்னு பதிலுக்குப் பதில் பல கொலைகள் நடந்துச்சு. இதன் தொடர்ச்சியாக ஒரு தீபாவளியன்னைக்கு கொள்ளிடம் ஆற்றுல எண்ணெய் தேய்ச்சு குளிச்சிட்டிருந்த ராமச்சந்திரன் அப்படிங்கிற கோஷ்டி தலைவனை எதிர்கோஷ்டியானது தண்ணீரில் அமுக்கிப்பிடிச்சு, தலையை துண்டாக்கினாங்க. அந்த தலையை நடுரோட்ல உருட்டிவிட்டு ஃபுட்பால் ஆடினாங்க. பிறகு அதை ஒரு கோயில் சூலாயுதத்தில் குத்திவெச்சுட்டு நிதானமா கெளம்புனாங்க. இதெல்லாம் 'இங்கே ராஜா தாதாக்கள் நாங்கதான்டான்னு எஸ்டாபிளிஷ் பண்ண நடந்த சம்பவம். ராமச்சந்திரன் குரூரமா பலியான பிறகு அவர் கோஷ்டிக்கு தலைவனாக மாறிய இருவரில் ஒருத்தன்தான் இந்த முக்கூட்டு முருகன்.

தனக்கு ஆஃபர் அதிகமாகுதுங்கிறது தெரிஞ்சதும் தன்னை பெரிய தாதாவா நினைக்கத் துவங்குனான். 
முருசனுக்கு வேற எவனும் சொல்லிக் கொடுத்தானோ, இல்லை தானாவே அமைச்சுக்கிட்டானோன்னு தெரியலை அந்த வல்லம்படுகை வெட்டு ஸ்டைலை கொண்டு வந்தான். அதாவது, கொலை பண்ண வேண்டிய ஆளை வெட்டி சாய்ச்சுட்டு, காலாலல் அந்த உடம்பை திருப்பிப் போட்டு, நின்னு நிதானமா முதுகுல அருவாவ இறக்கி பாலம் பாலமா பொளந்தெடுப்பான். இதுதான் முக்கூட்டு முருகனின் குரூர கொலை ஸ்டைல். இதுக்கு 'வல்லம்படுகை வெட்டுன்னு அவனே பேரு வெச்சு, பிராண்டும் உருவாக்கினான்.

சத்தியமா சொல்றேன், துவக்க நிலையில அந்த டைப் கொலைகளைப் பார்த்து தலை சுத்தி, வாமிட் வர்ற அளவுக்கு ஆகியிருக்குது எங்களுக்கெல்லாம் எப்படி இப்படி போட்டுப் பொளக்க முடியும்?னு டிபார்ட்மெண்ட்ல பேசிக்குவோம் பொதுவா சொந்த பகைக்காக பழிக்குப் பழிவாங்க கொல்லும்போது இவ்வளவு வீரியமா வெட்டு விழும் ஆனால் கூலிக்கு பண்றப்பவும் குதறி எடுக்குறதெல்லாம் குரூர உச்சம்

இந்த வல்லம்படுகை வெட்டுக்காக அவன் பயன்படுத்துற ஆயுதமே கொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சு. அதாவது வெட்டுக்கத்தியும், அரிவாளும் சேர்ந்தமாதிரியான ஒரு ஹைபிரிட் டிஸைனான ஆயுதத்தை அவன் சம்பந்தப்பட்ட கொலை வழக்குகள்ல கைப்பற்றி இருக்கிறோம். ஆனால் அதுதான் பயன்படுத்துன ஆயுதம்னு மூச்சு விடமாட்டான் முருகன்.
 
முருகனோட வல்லம்படுகை வெட்டு கைங்கர்யத்துல சிதைஞ்சு செத்தவங்கள்ல முக்கியமா வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த டீக்கடைக்காரர் அய்யாசாமியின் கொலையை சொல்லலாம். இத்தனைக்கும் அந்த ஆளுக்கு எந்த க்ரைம் ஹிஸ்டரியும் கிடையாது. வெகு சாதாரண மனுஷன் அவர் டீக்கடையில பக்கோடா பொட்டலம் விலை அதிகமாயிருக்குதுன்னு ஒருத்தன் பிரச்னை பண்ண ஆரம்பிச்சு அது அப்படியே நீண்ட நிலையில் ஒரு நாள் அதிகாலையில டீக்கடை வாசல்லேயே அவரை பொளந்தெடுத்து கொன்னானுங்க, செத்துக் கிடந்த அய்யாசாமியின் முதுகுல இருந்த வெட்டுக்களைப் பார்த்துட்டு இது வல்லம்படுகை வெட்டாச்சே.. முக்கூட்டு வேலையாச்சேன்னு எங்க போலீஸ் கண்டுபிடிச்சுது. ஆனால், அப்புறம்தான் புரிஞ்சுது இதன் பின்னணி வில்லங்கங்கள்.

அதாவது, வைரவநாதன் அப்படிங்கிற சாராய வியாபாரியின் தலைமை கையாளாக செயல்பட்டு, அவருக்காக லோக்கல் பெரும்புள்ளி ஒருவரை மிரட்டி பணம் வாங்கிட்டு வர்ற வேலையை பார்த்திருக்கான் முருகன். கொலை வழக்கில் ஜெயிலுக்குள் இருந்தாலும் தனது பராக்கிரமத்தை வெளி உலகுக்கு நிரூபிக்க நினைச்ச வைரவநாதனின் உத்தரவுப்படி டீக்கடைக்காரரை கொன்று பொளந்துட்டான்.

அதேபோல, குரூரமாக கொல்லப்பட்ட தன் தலைவன் ராமச்சந்திரனின் ஆத்மா சாந்தியடைவதற்காக, அவரைக் கொன்ற திருவள்ளுவனின் தம்பி தமிழ்க்கடல் என்பவனைக் கொன்றான் முருகன். அடுத்து, திருவள்ளுவன் மற்றும் பவர் சங்கரை ஜெயிலில் இருந்து போலீஸார் விசாரணைக்கு அழைச்சு வந்தப்பவே ரெண்டு பேரையம் போட்டுக் தள்ளினான்.

முக்கூட்டு முருகனுக்கு பணத்தேவை உருவாகுறப்பவெல்லாம் நிதி கொடுத்து உதவுனது புலவர் ஆறுமுகம் அப்படிங்கிற கேரக்டர். அதுக்காக அவரை வீட்டு வாசலிலேயே கொன்றது எதிர் டீம் இதுக்காக குபேர் என்பவனை தலையை தனியே துண்டாக்கி கொன்னான் முருகன். இதையெல்லாம் தாண்டி, மணல்மேடு சங்கருடன் கைகோர்த்து பிரபல தாதா ஆத்தூர் கண்ணையனின் மருமகனான ஆதியை போட்டுத் தள்ளினான்.

முருகனின் க்ரைம் ஹிஸ்டரி இந்த லெவலுக்கு பவர்ஃபுல்லா இருந்தாலுமே கூட அவனோட பர்ஸனல் வைஃபை பார்த்தாலும் ஆச்சரியமா இருக்கும். லவ் மேரேஜ் பண்ணுன பிறகு குடும்பத்துக்காக திருந்தி, நல்லபடியா வாழ ஆசைப்படத்தான் செஞ்சான். ஆனால் அவனால் தெறிச்ச ரத்தம் அவனை பழிவாங்க துரத்திட்டே இருந்துச்சு அதேவேளையில் அவனது கிரிமினல் வழக்குகளுக்காக எங்கள் துறையும் அவனை விடாமல் விரட்டிட்டேதான் இருந்துச்சு.

2009ல் கடலூர் மாவட்ட எஸ்.பி.யாக வந்தமர்ந்த அஸ்வின் கோட்னீஸ், பிரபல ரவுடிகளின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டினார். துடிப்பான இளம் போலீஸ் டீமை வெச்சு 'ரவுடிகள் ஒழிப்புப் படைன்னு ஒன்றை உருவாக்கினார்.

இப்பவும் அதிரடியான காக்கியாக இருக்கிற அம்பேத்கரெல்லாம் அப்பவே அந்த டீமின் ஹெட் அக்கம் பக்க மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து, மாவட்டம் விட்டு மாவட்டம் பறந்து போய் ரவுடிகளை அள்ளிட்டு வந்து ஜெயில்வ அட்மிஷன் போட்டுச்சு அந்த டீம் இவங்க கையில சிக்கின முக்கிய முகங்கள்ல ஒண்ணு முக்கூட்டு முருகன். விசாரணையில சவைச்சு எடுத்தாங்க இன்னும் ஓப்பனா சொல்றதுன்னா மணல்மேடு சங்கர் வகையறாவுக்குப் பிறகு என்கவுன்ட்டர் லிஸ்ட்ல முக்கூட்டு முருகனும் இருந்தான். இது அவனுக்கும் தெரியும். ஆனால் விசாரணை, அரசியல் தலையீடு அதிகாரிகள் மாற்றம்னு சில காரணங்களால் போலீஸின் புல்லட் அவன் மேலே பாயாமல் தப்பினான்.

அதுக்குப் பிறகு காலைகளை குறைத்திருந்தாலும் கூட கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல்னு வழக்குகளுக்கு இலக்காகிட்டுதான் இருந்தான். இப்பவும் பழைய குரூர வழக்குகளுக்காக சிதம்பரம் அண்ணாமலைநகர் உள்ளிட்ட ஸ்டேஷன்களுக்கு போன் போட்டு ஏட்டய்ய அடுத்த விசாரணைக்கு எப்ப வரட்டும்?ன்னு கேட்டுட்டுதான் இருக்கான்" என்றபடி மூன்றாவது டீயை குடித்து முடித்தார்.

(ரத்தம் தெறிக்கும்) - எஸ். ஷக்தி .

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow