நல்ல கதைகள் தான் என்னைத் தேடி வருகிறது- நானி ஓபன் டாக்!
தனது வித்தியாசமான கதைத் தேர்வுகளுக்காக பெயர் பெற்ற நடிகர், 'நேச்சுரல் ஸ்டார்' நானி. இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் நானி நடித்துள்ள 'ஹிட்: தி தேர்ட் கேஸ்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் குமுதம் இதழுக்கு அவர் வழங்கிய நேர்க்காணல் விவரம்..

'ஹிட் 2' படத்தில் அர்ஜுன் சர்கார் என்கிற கேமியோ ரோல் செய்திருந்தீர்கள். 'ஹிட் 3' படம் முழுக்க அர்ஜுன் சர்கார் வருகிறாரா?
"நான் இதுவரை 'ஹிட் பிரான் சைஸில்' நடிக்க நினைத்தது இல்லை. 'ஹிட் 3'க்கான கதை எனக்கு கிடைத்தவுடன், அது ஒரு பெரிய அழைப்பு போல இருந்தது. கதையின் தன்மை, திருப்பங்கள், எனது கேரக்டர் இவையெல்லாம் எனக்கு மிகப் பிடித்திருந்தது. அதனால்தான் உடனே ஒப்புக்கொண்டேன்."
'ஹிட் 3' படம் திட்டமிட்ட வெற்றி-யின் எடுத்துக்காட்டாக இருக்குமா?
"இப்படம் என் உயர்ந்தபட்ச வெளியீடாக இருக்கும். சரியான திட்டமிடல், தயாரிப்பு, வெளியீடு எல்லாமே எந்த இடையூறும் இல்லாமல் நடந்தது. 10 நாட்கள் கூட இடைவெளி இல்லை, தொடர்ந்து வேலை நடந்தது. மேலும், இது முதல் முறையாக தமிழ் மாநிலத்தில் பெரிய ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. எனக்கு இது மிகப் பெரிய சந்தோஷம். தமிழ் ரசிகர்களிடையே நான் பெற்ற அன்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஜெர்சி படம் வெளியான நேரத்தில் அதை உணர்ந்தேன்.
ஒவ்வொரு படம் மூலமும் பல பரிமாணங்கள் எடுத்திருக்கிறீர்களே?
"என் ஃபிலிமோகிராபியைப் பார்த்தால், நான்தான் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான ஜானருக்குள் ஓடிக்கொண்டிருக் கிறேன் என்பது தெரியும். 'ஹிட் 3, 'பாரடைஸ்' இரண்டும் ஒரே மாதிரி படங்கள் போல தோன்றலாம். இரண்டும் மாறுபட்டவை.
உங்கள் படங்களில் வன்முறை உணர்வு அதிகளவில் பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறதே?
"வன்முறை என்றால் மற்றவர்களைத் தாக்கும் காட்சிகள் என்று அர்த்தமில்லை. சில சமயம் வன்முறை என்பது கதையின் சூழ்நிலையை எடுத்துக்காட்டும் ஒரு சக்தி. 'ஹிட் 3'ல் உள்ள வன்முறைகள் பார்வையாளரைப் பதற வைக்காமல், விசாரணையின் உச்சக்கட்டத்தை உணர வைக்கும்."
நீங்கள் எந்த மாதிரியான கதையைத் தேடுகிறீர்கள்?
"நான் கதைகளைத் தேடி ஓடவில்லை. உண்மையிலேயே, நல்ல கதைகள் தான் என்னைத் தேடி வருகின்றன. நானும் அந்தக் கதைகளை ஒரு பார்வையாளர் மாதிரியே கேட்கிறேன். என்னை அது நெகிழச்செய்தால், அக்கதை அதன் உலகத்துக்குள் என்னை இழுத்தால் ஒப்புக்கொள்கிறேன். ஜெர்சி படம் வெளியானதுக்குப் பிறகு, நான் எந்த மொழிக்குப் போனாலும் 'நீங்கள் நல்ல படத்தில் நடித்தீர்கள் நன்றி என்று கூறுகிறார்கள். அதுதான் ஒரு நடிகனுக்கு கிடைக்கக்கூடிய பெரிய பாராட்டு
புகழேணியில் ஏறிக்கொண்டிருக்கும் உங்களுடைய தற்போதைய மனநிலை என்ன?
"நான் ஒரு நடிகனாக நடிக்கிற படங்களுக்கும், ஒரு தயாரிப்பாளராக செய்கிற படங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. தயாரிப்பாளராக ஒரு கதை எனக்கு நம்பிக்கை கொடுத்தால் வெறித்தனமான ஐடியாவையும் எடுத்துக் கொள்வேன். ஆனால், ஒரு நடிகராக, எனக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. நான் தேர்வு செய்வது என் மனதுக்கே பிடித்த கதைகள்தான். சந்தேகம் இருந்தால், அதைச் செய்யவே மாட்டேன். பத்து வருடங்களுக்குப் பிறகு என் படப் பட்டியலில் ஏழெட்டுப் படங்கள் இருந்தாலும், அதுவே போதுமானது.
வருஷத்துக்கு மூணு படம், நாலு படம் பண்ணணும் என்ற எண்ணமில்லை. பின்னாளில் நான் என் படப் பட்டியலைப் பார்த்து 'இந்தப் படத்தில் நடிக்காமல் இருந்திருக்கலாம்' என்று நினைக்கக்கூடாது. அதனால்தான், என் மனம் நிறைவு அடையும் படங்களையே தேர்வு செய்கிறேன். மேலும் வெற்றி, புகழ், சம்பளம் இவையெல்லாமே எனக்கு இரண்டாவதுதான். எனக்கும் சினிமாவுக்கும் உள்ள காதல்தான் முதன்மையானது."
எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?
"என்னுடைய கலை வாழ்க்கை சரியான திரைக்கதைகள் மட்டுமல்ல, புதிய முயற்சிகளாகவும் இருக்க வேண்டும். எனவே, புதிய கதைகள், புதிய கதாபாத்திரங்களுடன் நடிக்கத் தயாராகிறேன். எப்போதும் ஒரே மாதிரி கதைகளில் நடிப்பதில் விருப்பமில்லை. என் நடிப்பில் வித்தியாசம் வேண்டும். அந்த கேரக்டரின் உயிரோடு கூடிய கதையை உங்களுக்குத் தர நினைக்கிறேன்."
சினிமாவில் தொழில்நுட்பம் மற்றும் புதிய சவால்கள் பற்றி?
'இன்று, சினிமாவின் தொழில் நுட்பம் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. நானும் அந்தப் புதிய தொழில்நுட்பங்களுடன் ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ளேன். அதில் முக்கியமான ஒன்று கண்ணோட்டத்தை மாற்றுவதும், சரியான காட்சிகளை சரியான முறையில் பதிவு செய்வதும் ஆகும்"
ஒரு நடிகனாக உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றி?
"ஒரு நடிகனாக, என் கதாபாத்திரம் எங்கு செல்ல வேண்டும் என்பதை நான் உணர்ந்தால், அதை நான் தடுப்பதில்லை. அதிலிருந்து நான் அதிகமாக உணர்கிறேன். மேலும் அது என் நடிப்பிலும் பிரதி பலிக்கிறது. இனி வரும் பல படங்கள் பல மொழிகளில் வெளியிடப்படும். இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்வது சினிமா வளர்ச்சிக்கு முக்கியமானது. சினிமா உலகின் எல்லா வாய்ப்புகளையும் பயன் படுத்தி, என் படங்களில் புதிய கதைகள் சொல்ல விரும்புகிறேன்."
(நேர்காணல்/கட்டுரை: நிதிஷ் அதியமான்/குமுதம்/ 14.05.2025 )
What's Your Reaction?






