200 கோடி சம்பளம்..அடம்பிடிக்கும் அஜித்: திணறும் தயாரிப்பாளர்கள்
உண்மைகள் உறங்கும்போது பொய்கள் ஊர் சுற்றக் கிளம்பிவிடும் என்ற சொல்லுக்கேற்ப, அஜித் குறித்து நாள்தோறும் ஏதாவதொரு வதந்தி வந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் சம்பளமாக 200 கோடி வேண்டும் என அஜித் கேட்கிறார் என்கிற செய்தி கோலிவுட்டை அதிரவைத்துள்ளது.

’குட் பேட் அக்லி'க்குப் பின்னர் 'கேஜிஎஃப்' பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார் என்று செய்திகள் வந்தன. அஜித் தரப்பிலோ,’அப்படி ஒரு பேச்சே இல்லை’ என்றார்கள். அதன்பின், 'புஷ்பா' பட இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்றார்கள். அது பொய்ச் செய்தி என்று அஜித் தரப்பு சொல்லிவிட்டது.
பிரசாந்த் நீல் இப்போது என்ன படம் இயக்குகிறார்? அதைத் தொடர்ந்து அவர் என்ன படம் இயக்கப் போகிறார் என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் இப்படிப்பட்ட செய்திகளைச் சிலர் பரப்பு கிறார்கள். இந்தப் பொய்ச் செய்திகள் வலம்வரக் காரணம், உண்மை அறிவிக்கப்படாததுதான் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பின் போதே, 'அடுத்த ஆண்டு ஐரோப்பியன் கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்க விருக்கிறார்' என்கிற அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்த வருஷம் ரேஸ், குடும்பம் மட்டுமே:
அதுமட்டுமல்லாமல், 'அஜித் குமார் ரேஸிங்' என்ற ரேஸிங் குழு ஒன்றையும் தொடங்கியிருக்கிறார், அஜித். ஏற்கெனவே 'ஃபார்முலா பி.எம்.டபுள்யூ ஆசியா', 'பிரிட்டீஷ் ஃபார்முலா 3’ போன்ற கார் பந்தயங்களில் அஜித் பங்கேற்றிருக்கிறார். ரேஸிங் மீதான ஆர்வத்தில் 'வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்' என்ற நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறார்.
அஜித்துக்கு அவரின் மனைவி ஷாலினி கடந்த அக்டோபரில், ஒரு வாழ்த்துப் பதிவை வெளியிட்டார். அதில் அவர், 'ரேஸிங் டிரைவராக உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. உங்களுக்குப் பிடித்ததை செய்கிறீர்கள். பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான ரேஸிங் பயணத்துக்கு வாழ்த்துகள் என பதிவிட்டிருந்தார். அதனால் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு, கார் பந்தயத்தில் கவனம் செலுத்தவிருக்கிறார் அஜித் என்பது உறுதியானது,
அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. கார் பந்தய வேலைகள் முடிவடைந்தவுடன், சுமார் ஆறு மாதங்கள் தனது குடும்பத்துடன் இருப்பது என்று முடிவெடுத்திருக்கிறாராம், அஜித்.
வரிசையாகப் படப்பிடிப்புகள் இடையிடையே பைக் பயணம், இப்போது கார் பந்தயம் என பரபரப்பாகவே இருந்தார். இதனால் குடும்பத்துடன் அவர் நேரம் செலவிடுவதே இல்லை என்றும், அதனால் குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்போது வெளியிடப்பட்டு உள்ள அஜித்தின் கார் ரேஸ் காலண்டர்படி 2025 அக்டோபர் வரை அவர் பல்வேறு கார் ரேஸ்களில் கலந்து கொள்ளவிருக்கிறார். அதன்பின் குடும்பத்துக்காகச் சில மாதங்கள் ஒதுக்குவார் என்றால், அடுத்த ஆண்டு தொடக்கம் வரை அவர் சினிமாவுக்கு வரவியலாது.
200 கோடி சம்பளம்:
எனவேதான், 'குட் பேட் அக்லி படத்துக்கு அடுத்து என்ன படம்? என்று முடிவு செய்வதில் அவசரம் காட்டாமல் இருக்கிறார் என்கிறது அஜித் தரப்பு. அதே நேரம் திரையுலகத்தில் வேறொரு கருத்தும் உலா வருகிறது.
அஜித்தின் 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியவை. 'விடாமுயற்சி' படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. அப்போது டிஜிட்டல் ரைட்ஸ் மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ் வியாபாரங்கள் நன்றாக இருந்தன. அதனால், இன்னொரு நிறுவனம் தயாரிக்க மறுத்துவிட்ட அப்படத்தைத் தயாரித்தது லைகா.
இன்னொரு நிறுவனம் மறுக்கக் காரணம், அஜித்தின் சம்பளம். அந்தப் படத்துக்காக 100 கோடி சம்பளம் கேட்டார், அஜித். அவ்வளவு சம்பளம் கொடுத்துப் படமெடுத்தால் பெரும் நஷ்டம் வருமென்று அந்நிறுவனம் மறுத்து விட்டது. டிஜிட்டல் ரைட்ஸில் அந்தப் பணத்தை எடுத்துவிடலாம் என்று நம்பி லைகா நிறுவனம் படத்தைத் தயாரித்தது. அவர்கள் நினைத்தபடி டிஜிட்டல் ரைட்ஸ், சேட்டிலைட் ரைட்ஸ் ஆகியன விற்பனையாகிவிட்டன. பட வெளியீடு தாமதமானதால் அதிலும் சின்னச் சின்னச் சிக்கல்கள் இருந்தன. அதோடு படத்தின் கதைக்காக கடைசி நேரத்தில் கொடுக்கப்பட்ட தொகை மற்றும் திரையரங்குகளில் அப்படம் சரியாக ஓடாதது ஆகிய வற்றால் லைகா நிறுவனம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது.
'குட் பேட் அக்லி படத்தைப் பொறுத்தவரை, இப்படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் திரையரங்கு வெளியீட்டு உரிமையைப் பெற்ற 'ரோமியோ பிக்சர்ஸ்' நிறுவனத்துக்கு சுமார் 10 கோடி வரை லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், படத்தைத் தயாரித்த 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் நஷ்டத்தையே சந்திக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் திரையரங்க வெளியீட்டு உரிமையை சுமார் 73 கோடி கொடுத்து அந்நிறுவனம் பெற்றிருக்கிறது. இப்படம் ஓடி முடியும்போது அந்நிறுவனத்துக்கு சுமார் 85-ல் இருந்து 90 கோடி வரை வருமானம் என்று சொல்லப்படுகிறது.
படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தருக்கு லாபம். ஆனால், தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்று சொல்லப்படுவது, ஏன்? இந்தப் படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் சுமார் 160 கோடி என்கிறார்கள். மொத்த பட்ஜெட் சுமார் 250 கோடி மற்றும் அதற்கான வட்டி கணக்கும் அடங்கியிருக்கிறது. இப்படம் தமிழ்நாடு திரையரங்குகளில் நன்றாக ஓடி பெரிய வசூலைப் பெற்றிருக்கிறது. அதேநேரம், ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை.
அதோடு இந்தப் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனையாகி விட்டது என்றாலும், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனை ஆகவில்லை. அது இவர்கள் எதிர்பார்க்கும் தொகைக்கு விற்பனையானால்தான் போட்டபணம் கிடைக்கும் என்றும், அப்போதுகூட வட்டிக்கணக்கு போட்டால் நஷ்டம்தான் என்று சொல்லப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து இரண்டு படங்கள் நஷ்டம் என்பதால், அவரை வைத்து அடுத்த படத்தை எடுக்க தயாரிப்பு நிறுவனங்கள் தயங்குகின்றன என்பதுதான் உண்மைநிலை என்று திரையுலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தயக்கத்துக்குக் காரணம், அஜித்தின் சம்பளம்தான் என்பது ஊரறிந்த விசயம் என்றாலும், அதைப் பற்றிப் பொதுவெளியில் பேச யாரும் முன்வரமாட்டார்கள். ஆனால், திரைமறைவில் அவர் பற்றி நிறைய பேசப்படுகின்றன. ஒவ்வொரு நடிகரும் அவருடைய முந்தைய பட வெற்றி மற்றும் வசூலை வைத்துத்தான் அடுத்த பட சம்பளத்தைத் தீர்மானிப் பார்கள். அவர்கள்கூட சொல்ல வேண்டியதில்லை. தயாரிப்பாளர்களே முந்தைய பட சம்பளத்தைவிட உயர்த்திக் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், அஜித்தோ அவருடைய பட வியாபாரம், வருமானம் ஆகியனவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் விஜய்யை மனதில் வைத்தே தன் சம்பளத்தைக் கேட்கிறார். விஜய் 100 சமப கோடி சம்பளம் வாங்கிவிட்டார் என்றால், உடனே என் சம்பளமும் 100 கோடி அதைக் கொடுக்கும் தயாரிப்பாளருக்குப் படம் என்று தகவல் பரப்பிவிடுகிறார்.
பலர் தயங்கினாலும், சிலர் துணிந்து முன்வந்து படம் தயாரிக்க வருகிறார்கள். வந்து மாட்டிக் கொள்கிறார்கள்.இப்போது 'குட் பேட் அக்லி படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிகட்ட இன்னொரு படம் நடித்துக் கொடுங்கள் என்று அந்தத் தயாரிப்பு நிறுவனம் கேட்டிருக்கிறதாம். இன்னொரு படம் நடிக்க வேண்டுமானால், என் சம்பளம் 200 கோடி என்று அஜித் சொல்லிவிட்டாராம். அவர் அப்படி கேட்கக் காரணம் 'ஜனநாயகன்' படத்துக்காக விஜய் 200 கோடி சம்பளம் வாங்கியதுதான் எனச் சொல்லப்படுகிறது.
சம்பளம் பற்றி அஜித்தின் கருத்தை அறிந்ததும் திடுக்கிட்டுப் போனதாம் அந்தத் தயாரிப்பு நிறுவனம். 160 கோடி கொடுத்தே நஷ்டம் என்கிறோம். இவர் 200 கோடி கேட்கிறாரே? என்பதுதான் அந்தத் திடுக்கிடலுக்குக் காரணம். விஜய்க்கு 200 கோடி கொடுத்துவிட்டு, அதை எடுக்க வேண்டுமானால், டிஜிட்டல் நிறுவனம் சொன்னதைக் கேட்டாக வேண்டும் என்கிற கட்டாயத்தால்தான், அந்தப் படத்தின் வெளியீடு இந்த ஆண்டு அக்டோபரில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரிக்குப் போனது. உண்மையில், வசூலில் முன்னணியில் இருக்கும் விஜய் படத்துக்கே இந்த நிலைமை எனும்போது, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சம்பளம் கேட்கும் அஜித்தை நினைத்து அதிர்ச்சியடைகிறது, திரையுலகம்.
அதனால்தான் அஜித்துடைய அடுத்த படம் என்ன என்பது இன்னும் முடிவாகாமல் இருக்கிறது என்பது திரையுலகத்தில் உலவும் கருத்து. ஒன்று, அஜித் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் அல்லது டிஜிட்டல் நிறுவனங்கள் பெரும் தொகை கொடுத்து அஜித் படத்தை வாங்க முன் வரவேண்டும். இவ்விரண்டில் ஏதாவது ஒன்று நடந்தால்தான் அஜித்தின் அடுத்த படம் முடிவாகும் என்றும் சொல்கிறார்கள்.
What's Your Reaction?






