மக்களே குடைய மறக்காதீங்க ! வெளுத்துவாங்கப்போகும் கனமழை ! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மாற்றம் காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கான முக்கிய மழை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை
லட்சத்தீவின் தெற்குப் பகுதிகளில் தொடங்கி, மத்திய கிழக்கு அரபிக்கடல் வழியாகக் கர்நாடகக் கடலோரப் பகுதிகள் வரை வளிமண்டலத்தில் சுமார் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நவம்பர் 27ஆம் தேதி (இன்று) கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மழையின்போது மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
29 மாவட்டங்களில் மிதமான மழை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 29 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
6 மாவட்டங்களில் கனமழை முன்னறிவிப்பு
நவம்பர் 28ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்தப் பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மேலும், திருப்பூர், ஈரோடு, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
வெப்பநிலையில் மாற்றம் இருக்குமா?
நவம்பர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. இந்தக் காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை ஒட்டியே பதிவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?