விஜய்க்கு விருது வழங்குவதே வாழ்நாள் லட்சியம்.. தயாரிப்பாளர் ஓபன் டாக்

நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு போனாலும் நான் என்றுமே விஜய்யின் ரசிகன் தான் என்று இந்தியன் மீடியா ஒர்க்ஸ் உரிமையாளர் ஜான் அமலன் தெரிவித்துள்ளார்.

Nov 26, 2024 - 09:52
Nov 26, 2024 - 10:02
விஜய்க்கு விருது வழங்குவதே வாழ்நாள் லட்சியம்.. தயாரிப்பாளர் ஓபன் டாக்
நான் என்றுமே விஜய்யின் ரசிகன் தான் - ஜான் அமலன்

’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ (INDIAN MEDIA WORKS) என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் ‘இந்தியன் விருதுகள்' (INDIAN AWARDS) என்ற பெயரில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார் ஜான் அமலன்.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ‘இந்தியன் விருதுகள்’ (INDIAN AWARDS) நிகழ்ச்சியின் 3வது சீசன் வரும் 2024, டிசம்பர் 21,22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நிகழ்வாக நடைபெறுகிறது. இதில், சினிமாத்துறையில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட 60 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது.

மேலும், அரசியல், தொழில், விளையாட்டு, மருத்துவம், கல்வி, ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 30 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. மேலும், விஜயகாந்த் நினைவாக ‘கேப்டன் விஜயகாந்த்’ என்ற பெயரில் சினிமாத்துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. அதேபோல், டைமண்ட் பாபுவின் 40வது திரையுலக வாழ்க்கையும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், ஜான் அமலன் தற்போது திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் கால்பதிக்கிறார். ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்நிறுவனத்தின் அறிமுக விழா நேற்று (நவம்பர் 25) சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இது குறித்து கூறியுள்ள ஜான் அமலன், “நான் கல்லூரி படிக்கும் போதே, சினிமா பிரபலங்கள் மற்றும் பிறத்துறைகளில் சாதிப்பவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அவர்களை மிகப்பெரிய அளவில் கெளரவிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.

குறிப்பாக நடிகர் விஜய்க்கு என் கையால் விருது வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் தீவிர விஜய் ரசிகர் என்பதால் இதை என் லட்சியமாக கூட வைத்திருந்தேன். கல்லூரி முடித்த பிறகு என் ஆசை என்னை தொடர்ந்ததால், இத்துறையை என் எதிர்காலமாக எடுத்துக்கொண்டேன்.

விஜய் அவர்கள் அரசியலுக்கு சென்றாலும், நான் அவரது ரசிகன் தான், அதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் சினிமாவில் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவராக அவருக்கு நான் விருது வழங்குவேன், என்று நம்புகிறேன்.

’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் திரைப்படங்கள் தயாரிக்க இருக்கிறேன். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் குறைந்த முதலீட்டில், தரமான மற்றும் வித்தியாசமான படைப்பாகவும் இருக்கும்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow