IND vs ENG: இந்தியாவுக்கு ராசியில்லாத மைதானம்.. டெஸ்டில் அறிமுகமாகும் காம்போஜ்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரிலுள்ள ஓல்ட் டிராஃபோர்டில் இன்று தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகிறார் அன்ஷுல் காம்போஜ்.

IND vs ENG: இந்தியாவுக்கு ராசியில்லாத மைதானம்.. டெஸ்டில் அறிமுகமாகும் காம்போஜ்!
ipl star anshul kamboj makes test debut in crucial old trafford clash

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-டெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றிபெற்ற நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவுக்கு ராசியில்லாத மைதானம்:

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரிலுள்ள ஓல்ட் டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. இந்த மைதானத்தில் இதுவரை 9 போட்டிகள் இந்தியா விளையாடியுள்ளது. இதில் 5 போட்டிகள் டிராவிலும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியா அணி விளையாட உள்ள நிலையில், இந்த போட்டியினை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வெற்றி பெறவில்லை என்றாலும், குறைந்தப்பட்சம் டிரா செய்ய வேண்டிய நெருக்கடியில் இந்தியா உள்ளது.

ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இதுவரை இங்கிலாந்து அணி 20 போட்டிகள் விளையாடிய நிலையில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியுற்றுள்ளது. இந்த மைதானத்தில் 14 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், 4 போட்டியினை டிரா செய்துள்ளது.

இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். 77% விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள கைப்பற்றியுள்ள நிலையில் சுழற்பந்து வீச்சாளர்கள் 23% விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

டாஸ் மற்றும் அணி விவரம்:

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார். இந்த தொடரில் இதுவரை அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி டாஸ் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெரியளவில் ரன்கள் குவிக்காமல் தடுமாறி வரும் கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்ஷன் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆகாஷ் தீப், நித்திஷ் ரெட்டி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு பதிலாக அன்ஷூல் காம்போஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

நடைப்பெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்ட காம்போஜ் சர்வதேச கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகிறார். இவர் ஹரியானவே சேர்ந்தவர். முதல் தர போட்டிகளில் ஒரே இன்னிங்க்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். பும்ராவுடன் கைக்கோர்த்து இந்த போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இங்கிலாந்து அணியினை பொறுத்த வரை ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஷோயப் பஷீர் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக லியாம் டேவ்சன் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி (11 வீரர்கள்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், KL ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், அன்ஷுல் காம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

இங்கிலாந்து (விளையாடும் XI): ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (துணை கேப்டன்), லியாம் டேவ்சன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow