வாக்காளர் பட்டியலில் 52 லட்சம் பேர் நீக்கம்.. அனல் பறக்கும் பீகார் அரசியல்
பீகாரில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போது அம்மாநிலத்தில் நடைப்பெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்(SIR) அடிப்படையில் தற்போது வரை வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

243 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் இந்தாண்டு நவம்பர் மாதம், சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைப்பெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ”Special Intensive Revision (SIR)” என்கிற பெயரில் வீடு வீடாக சென்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்கட்சிகள் சார்பில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நீதிமன்றம் வரை சென்றது இந்த விவகாரம். இந்நிலையில் பீகாரில் இதுவரை நடைப்பெற்றுள்ள வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய விவரங்கள் பின்வருமாறு-
52 லட்ச வாக்காளர்கள் யார்?
பீகாரில் ஆகஸ்ட் 1, 2025 அன்று வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 24,2025 நிலவரப்படி பீகாரில் மொத்தம் 7.89 கோடி வாக்காளர்கள் இருந்தனர். நடைப்பெற்று வரும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) வாயிலாக தற்போதுவரை 52 லட்ச வாக்காளர்களின் (52,30,126) பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதற்கான காரணங்களையும் இந்தியத் தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலிலுள்ள 18 லட்சம் வாக்காளர்கள் (18,66,869) இறந்து போயுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர். 26 லட்சம் வாக்காளர்கள் (26,01,031) வேறு தொகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 7 லட்சம் வாக்காளர்களின் (7,50,742) பெயர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 11,484 வாக்காளர்களை இதுவரை தொடர்புக் கொள்ளமுடியவில்லை எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்னும் 21 லட்சம் வாக்காளர்களின் (21,35,616) விவரங்கள் குறித்த சரிபார்ப்பு பணி நிலுவையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்:
வாக்காளர் பட்டியலை இறுதி செய்து, ஆகஸ்ட் 1, 2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பணியில் சுமார் 1 லட்சம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs), 4 லட்சம் தன்னார்வலர்கள் மற்றும் 1.5 லட்சம் BLAs ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 1, 2025 முதல் செப்டம்பர் 1, 2025 வரை, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் அல்லது திருத்தங்கள் மேற்கொள்ள பொதுமக்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






