அண்ணாவும் பெரியாரும் தமிழை வளர்த்தார்கள் என்பது மாயை- தமிழிசை பேட்டி!
பிரதமர் நரேந்திர மோடி கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகை தருவதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேலூரில் பேட்டியளித்துள்ளார்.

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேலூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் குறித்து விமர்சனம்:
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து தமிழிசை பேசுகையில், “கடந்த நான்கு ஆண்டுகளாகச் செய்ய முடியாததை 45 நாட்களில் நிறைவேற்றுவோம் என்று கூறி, ஒவ்வொரு வீடாகச் சென்று "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அரசு செலவில் பல கோடி ரூபாய் திமுக பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. அரசாங்கத்தின் செலவில் நான்கு ஆண்டுகளில் செய்ய முடியாததை 45 நாட்களில் செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். 45 நாட்களில் செய்ய முடியும் என்றால், ஏன் நான்கு ஆண்டுகளில் செய்ய முடியவில்லை? இது வாக்குகளுக்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம்.
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளது. அந்தத் திட்டத்தில் சான்றிதழ்களை வழங்குவதில் கூட அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த முகாம்களில் சரியான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். அடிப்படை வசதிகள் கூட இல்லை. இவையெல்லாம் கவலை அளிக்கிறது. அரசு அதிகாரிகளை திமுகவுக்குப் பிரச்சாரத்திற்காக ஈடுபடுத்துகிறார்கள். தவறான சூழ்நிலை தமிழகத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது” என குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் வருகை:
பிரதமர் மோடியின் கங்கை கொண்ட சோழபுரம் வருகை குறித்து பேசுகையில், “பாரதப் பிரதமர் ஜூலை 27ஆம் தேதி கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருவதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். தமிழகத்தில் உள்ள பெருமையை தமிழக முதலமைச்சரை விட பாரதப் பிரதமர் உலகிற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். ஆன்மீகம் தான் அதிகமாக தமிழை வளர்த்தது. ஆண்டாள் காலத்தில்தான் தமிழ் வளர்ந்தது. ஆனால், அண்ணாவும் பெரியாரும் தமிழை வளர்த்தார்கள் என்று ஒரு தோற்றத்தை அவர்கள் ஏற்படுத்தி உள்ளார்கள். இனிமேல் நாங்கள் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை தொண்டர்களிடையே புத்துணர்ச்சி தரும். இன்றைக்கு தமிழ்நாட்டில் காமராஜர் போன்றவர்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள். எல்லாப் புகழும் கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்தச் செயல் கண்டனத்திற்குரியது” என்றும் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் உதான் திட்டத்தில் விமான நிலையம் திறந்ததைப் போல, வேலூரிலும் விரைவில் விமான நிலையம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பத்திரிக்கையாளர்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
What's Your Reaction?






