ஆண்டவரிடமே ஆட்டையப்போட முயன்ற கும்பல்..? பாஸ் ஸ்கேம் மோசடி..!
ராஜ்யசபா எம்.பியும், நடிகருமான கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தில் பாஸ் ஸ்கேம் மோசடி முயற்சி நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சைபர் கிரைம் மோசடியில் நூதன முறையில் தொடர்ந்து பெரிய நிறுவனங்களை குறிவைத்து பண மோசடி என்பது நடைபெற்று வருகிறது.
அதில் குறிப்பாக நிறுவனத்தின் நிர்வாகியின் செல்போன் எண் வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றை முடக்கி அவர் போல் நடித்து ஆள் மாறாட்டம் செய்து செல்போன் மூலமாக நிறுவனத்தில் உள்ள நிர்வாகிகள் மூலம் பணத்தை மோசடி செய்யும் பாஸ் ஸ்கேம் அதிகமாக நடைபெற்று வருகிறது.
அந்த அடிப்படையில் பிரபல நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தில் பாஸ் ஸ்கேம் மோசடி முயற்சி நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரில், வாட்ஸ்அப் மூலம் 38.5 லட்சம் ரூபாய் மோசடி செய்ய முயன்ற நபர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன். இவர் ‘ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பிரபலமான இந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் திரைப்படத்தையும் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று இந்த நிறுவனத்தின் நிர்வாகி முரளி கிருஷ்ணன் மொபைல் எண் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தெரியாத மொபைல் எண்ணில் இருந்து முரளி கிருஷ்ணனுக்கு வாட்ஸ்அப் செய்திகள் வந்துள்ளன. அதில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஒருவரின் அசல் மொபைல் எண்ணை முடக்கிவிட்டு, அவரது வாட்ஸ்அப் முகப்புப் படத்தை (DP) இந்த புதிய எண்ணில் மர்ம நபர் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் தயாரிப்பாளர் பேசுவது போன்றே போலியாக நடித்து அவசர தேவைக்காக 38 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை உடனடியாக ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு முரளி கிருஷ்ணனை வற்புறுத்தியுள்ளார்.
நிசர்கா ஆல்டர்நேட்டிவ் நேச்சுரோபதி அண்ட் பாராமெடிக்கல் கவுன்சில் என்ற நிறுவனத்தின் யெஸ் பேங்க் தகவல்களை அனுப்பி பணம் அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப் குறுஞ்செய்தி பற்றி சந்தேகமடைந்த முரளி கிருஷ்ணன், இது திட்டமிட்ட சைபர் மோசடி மற்றும் போலி ஆள்மாறாட்டம் என்பதை உணர்ந்து பணத்தை அனுப்பாமல் தவிர்த்தார்.
இதுகுறித்து முரளி கிருஷ்ணன் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். புகாருடன் தனக்கு வந்த மோசடி வாட்ஸ்அப் செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்களையும் ஆதாரமாக இணைத்திருந்தார்.
மேலும், மோசடி கும்பலின் மொபைல் எண்ணைக் கண்டறியவும், சம்பந்தப்பட்ட வங்கி கணக்கை முடக்கவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநில கும்பல் இந்த மோசடியை அரங்கேற்றி வரும் நிலையில் இந்த மோசடிக்கு இதுவரை முடிவில்லை என்றும் போலீசார் மோசடி நபர்களை விரைந்து கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
What's Your Reaction?