கனிமொழி மூலம் தூது... காங்கிரஸ் கையில் எடுத்த கூட்டணி கணக்கு... கடுகடுத்த ஸ்டாலின்!

சட்டசபைத் தேர்தல் முடிந்து ஆட்சி அமைந்துவிட்டாலும், அரசியல் கட்சிகளுக்கு அடுத்த இலக்கு 2029 நாடாளுமன்றத் தேர்தல்தான். அதற்கான கூட்டணி கணக்குகள் இப்போதே அரங்கேற ஆரம்பித்துவிட்டன.

Sep 11, 2026 - 11:00
கனிமொழி மூலம் தூது... காங்கிரஸ் கையில் எடுத்த கூட்டணி கணக்கு... கடுகடுத்த ஸ்டாலின்!

குறிப்பாக, தவெக - காங்கிரஸ் உறவில் எழுந்துள்ள சில கருத்து மோதல்கள் புதிய கணக்குகளுக்கு பிள்ளையார் சுழி போட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

விஜய் பிரதமரா?

தவெக தரப்பில் விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் குரல்கள் தொடர்ந்து ஒலித்து வருகின்றன. விஜய் தரப்பில் இருந்து அதற்கு வெளிப்படையான மறுப்பு வராததும் காங்கிரஸின் தேசிய தலைமையை யோசிக்க வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏனென்றால், காங்கிரஸின் கணக்கு வேறு. 2029 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் மாற்றம் வந்தால், தவெக அரசுக்கு அளித்து வரும் ஆதரவு குறித்தே மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் என்ற எச்சரிக்கைகளும் காங்கிரஸ் தரப்பில் இருந்து வந்துள்ளன. இதனால், ‘தவெக கூட்டணி... எவ்வளவு தூரம்?’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

திமுக கணக்கு!

இந்த நிலையில்தான் காங்கிரஸ் தரப்பில் சிலர் திமுகவை நோக்கி பார்வையைத் திருப்பியிருப்பதாக தகவல்கள் கசிகின்றன. தவெகவுடனான உறவு முறிந்தால் அடுத்த நகர்வு என்ன? திமுகவுடன் மீண்டும் கை கோர்க்க முடியுமா? இந்தக் கணக்குகள் குறித்து திமுக தலைமையுடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சி நடந்ததாக அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
அதில் முக்கியமான பெயர்...கனிமொழி!

கனிமொழி எம்.பி. மூலமாக காங்கிரஸ் தரப்பில் இருந்து சில தகவல்கள் திமுக தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், எதிர்கால கூட்டணி வாய்ப்புகள் குறித்து ஒரு விதமான ‘தூது’ சென்றதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஆனால், அதற்கெல்லாம் ஸ்டாலின் அசையவில்லையாம். 

காங்கிரஸை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவருவதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்வம் காட்டவில்லை என்றே திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

கடந்த கால கூட்டணி அரசியலில் நடந்த சம்பவங்கள், தற்போதைய தவெக - காங்கிரஸ் நகர்வுகள், 2029 தேர்தல் கணக்கு என எல்லாவற்றையும் மனதில் வைத்தே ஸ்டாலின் தனது அடுத்த நகர்வை தீர்மானிக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

செல்வப்பெருந்தகையின் ‘ஸ்டாலின்’ பாசம்!

இதற்கிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகையின் சமீபத்திய பேச்சுகள் இந்த விவகாரத்துக்கு மேலும் சுவாரஸ்யத்தை சேர்த்துள்ளன.

திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் செயல்பாடுகளை பாராட்டிப் பேசுவதுடன், காங்கிரஸ் கட்சி ஸ்டாலினுக்கு போதிய விசுவாசத்துடன் நடந்து கொள்ளவில்லை என்ற வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில், இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தவர்... இப்போது ஏன் ஸ்டாலினை தூக்கிப் பிடிக்கிறார்? இதுதான் காங்கிரஸ் வட்டாரத்திலும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும் எழுந்துள்ள கேள்வி. செல்வப்பெருந்தகை மீண்டும் திமுக பக்கம் நகர்கிறாரா? அல்லது காங்கிரஸ் - திமுக உறவை சரி செய்யும் முயற்சியில் அவர் ஒரு பாலமாக செயல்படுகிறாரா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

‘செல்வப்பெருந்தகை திமுகவுக்கு வருவாரா?’

இந்த பேச்சு ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க... காங்கிரஸ் வட்டாரத்தில் இதற்கு வேறு பதில். ‘அவர் சொல்வது அவரது தனிப்பட்ட கருத்து. தற்போது அவர் தமிழக காங்கிரஸ் தலைவராக இல்லை. கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை மாணிக்கம் தாகூர் தலைமையே வெளிப்படுத்தும்’ என்கிறார்கள்.

மேலும், ‘செல்வப்பெருந்தகை அடிப்படையில் காங்கிரஸ்காரர். அவர் திமுகவில் இணைவார் என்று நாங்கள் நினைக்கவில்லை’ என்றும் சில நிர்வாகிகள் கூறுகின்றனர்.

ஆனால் அரசியல் என்பது கணக்குகளின் விளையாட்டு. இன்று கூட்டணி... நாளை எதிரணி...மறுநாள் மீண்டும் கூட்டணி. எதுவும் சாத்தியம்தான்.

தவெக தரப்பில் விஜய் பிரதமர் வேட்பாளர் என்ற பேச்சு தொடர்கிறது. காங்கிரஸ் தரப்போ ராகுல் காந்தியை முன்னிறுத்துகிறது. இரு தரப்புக்கும் இடையிலான இந்த கருத்து வேறுபாடு எங்கு போய் நிற்கும் என்பது தெரியவில்லை.

அப்படி ஒரு சூழலில் காங்கிரஸ் தவெக கூட்டணியில் இருந்து வெளியே வந்தால், அடுத்த கதவு திமுகவுடையதா? காங்கிரஸ் அந்தக் கதவைத் தட்டினால் ஸ்டாலின் திறப்பாரா? இப்போதைய தகவல்படி,‘இல்லை!’ என்பதே பதில். ஆனால் 2029 தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி அரசியலில் எத்தனை கதவுகள் திறக்கப்படுகின்றன, எத்தனை கதவுகள் சாத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow