மலைகள் இல்லாத மதுரை வரலாற்று சாபம்....15 ஆண்டுகளாக வசூலிக்கப்படாத ரூ. 13,500 கோடி அபராதம்!
மதுரை மேலூர் பகுதியில் விதிமீறியதாக குற்றச்சாட்டுக்குள்ளான கிரானைட் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.13,500 கோடி அபராதம் பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
2011 ம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் 84 கிரானைட் குவாரிகள் விதிகளை மீறி இயங்கியதாக 13,500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அந்த அபராத தொகை 15 ஆண்டுகளாக வசூலிக்காமல் அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகள்மீது புதிதாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் த.வெ.க. அரசின் முதல்வர் விஜய்யாவது சாட்டையை சுழற்றுவாரா என்று ஆவேசம் காட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்!
தூங்கும் அறிக்கை!
அப்போதைய ஆட்சி மேலிடத்தின் ஆசியோடு கிரானைட் மோசடியில் ஈடுபட்ட ஆசாமிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார் மதுரையின் அப்போதைய ஆட்சியர் சகாயம். அதன் விளைவாக தமிழக அரசுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் பகீர் ரிப்போர்ட்டையும் அனுப்பி வைத்தார். ஆனால், அதன் மீது அதற்கடுத்து ஆட்சியில் அமர்ந்த அரசும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
2012ல் அ.தி.மு.க ஆட்சியின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா சவால்விட்டு மதுரையில் இயங்கிய கிரானைட் குவாரிகளை இழுத்து மூடினார். உடனே பி.ஆர்.பி உள்ளிட்ட பல்வேறு கிரானைட் முதலைகள் எப்படியாவது மீண்டும் குவாரிகளை திறக்க வேண்டும் என பணப் பெட்டிகளோடு சசிகலா மற்றும் ஜெயலலிதாவை சந்திக்க காத்திருந்ததை சுவாரஸ்யம் குறையாமல் இன்றைக்கும் மதுரையில் பலர் பேசி வருகிறார்கள்.
சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் சிறப்பு குழு ஆய்வு செய்தபோது நரபலி கொடுக்கப்பட்ட சடலம் மூடி மறைக்கப்பட அதையும் குவாரி மண் குவியலில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது. மேலும் அப்போதைய கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, சகாயம் ஆகியோர் சட்டத்திற்கு புறம்பாக வெட்டியெடுக்கப்பட்ட கிரானைட் கற்களை அளவீடு செய்து அரசிற்கு அறிக்கை கொடுத்தனர்.
மதுரை, மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேக்கிபட்டி, அய்யாபட்டி, திருச்சுனை ஆகிய அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள பல கிரானைட் குவாரிகளை 20 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமம் வழங்க டெண்டருடன் இணைந்த பொது ஏலத்தை திமுக ஆட்சியில் அமைச்சர் மூர்த்தி கொண்டுவந்தார். அதை மக்கள் போராட்டத்தின் மூலம் முறியடித்தனர்.
கிரானைட் குவாரிகளின் விதிமீறல்கள் குறித்து முதன்முதலில் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞர் எட்டிமங்களம் ஸ்டாலினிடம் பேசினோம். “இந்த கிரானைட் குவாரிகளால் மேலூர் தாலூகாவுக்கு உட்பட்ட மக்கள் விவசாயம், வேலைவாய்ப்பு மற்றும் நிலங்களை இழந்து கண்ணீர் வடித்தனர். நில உச்சவரம்பு சட்டப்படி ஒரு நபர் 25 ஏக்கர் நிலம் வைத்திருக்கலாம். ஆனால் பி.ஆர்.பி 7 ஆயிரம் ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார்.
அனைத்தும் விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி அதில் கிரானைட் கற்களை வெட்டியும் அடுக்கியும் வைத்திருந்தார். விலையுர்ந்த வெள்ளைநிற கிரானைட் கற்கள் மேலூர் பகுதியில் தான் இருக்கின்றன. திருச்சி பைபாஸ் ரோட்டில் உள்ள வஞ்சிநகர கல்குவாரி வெளிப்படையாகவே விதியை மீறி இயங்கிக்கொண்டிருக்கிறது.
சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டத்தின் நுழைவு வாயிலாக புறாக்கூடு மலை இருந்தது. இது ஜெமினிப்பட்டி ஊராட்சியின் கட்டுப்பாட்டில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் கம்பீரமாக வரலாற்று சின்னமாக இருந்தது. அரசு புறம்போக்கு மலையாக இருந்ததால் பி.ஆர்.பிக்கு அந்த மலை அளிக்கப்பட்டது. 2011ல் புறாக்கூடு மலை இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள கீழவளவு கிராமத்தில் அமைந்துள்ள சர்க்கரைபீர் மலை வரலாறு மற்றும் ஆன்மிகச் சிறப்புமிக்கது. இந்த மலையில் பழங்கால குகைகள் மற்றும் தர்கா இருந்தன. இதையும் கிரானைட் கும்பல் விடவில்லை. ஒலிம்பஸ் குவாரி நிறுவனம் இந்த மலையை டெண்டர் எடுத்தது. அவர்கள் பி.ஆர்.பி.க்கு குத்தகைக்கு விட்டார்கள். பி.ஆர்.பி. அந்த மலையை இரண்டு துண்டாக பிளந்துவிட்டார். இப்படி சுமார் 80 கிரானைட் குவாரிகள் மீது வழக்கு, அபராதம் என 13,500 கோடி அளவிற்கு பாக்கி இருக்கிறது. நிலுவையில் இருக்கும் வழக்குகளை தவெக அரசு விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும்" என்றார்.
விதியை தளர்த்திய தி.மு.க. அரசு
சும்பூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வராஜ். “இந்த குவாரிகளை சுற்றி விளைநிலங்கள், பள்ளிக்கூடங்கள். கோயில்கள் அமைந்துள்ளன. சிறு கனிம சலுகை விதிகளின்படி 'அரசு கட்டிடங்கள் 500 மீட்டருக்குள் இருந்தால் குவாரி அமைக்கக் கூடாது' என்று இருந்த சட்டத்தை திமுக அரசு வந்த பிறகு 300 மீட்டராக அதை தளர்த்தியிருக்கிறார்கள்.
வாடிப்பட்டி அருகே கச்சகட்டி ராஜக்காபட்டியில் பல வருடங்களாக திறக்கப்படாமல் இருந்த கல் குவாரியை இந்த விதியை பயன்படுத்தி திறந்திருக்கிறார்கள். எனவே இப்பகுதிகளில் உள்ள மலைகள் ஏலம் விட தகுதியற்றவை. தற்போது கனிமவளத்துறை அமைச்சர் பிரபு ஆய்வுசெய்து மதுரை மாவட்டத்தில் 11 குவாரிகளை இயக்க தடை விதித்திருக்கிறார்.
அந்த தடையை நீக்க குவாரி அதிபர்கள் அமைச்சரையும், கனிமவளத்துறை அதிகாரிகளையும் வட்டமடித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றார் கொதிப்பாக இந்த நிலையில் மதுரை வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சிறு கனிம சுரங்க விதிகளுக்கு எதிராக அனுமதி இல்லாமல் பாறைகளை வெட்டியெடுக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்தப் புகாரை அளித்திருப்பது மதுரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தான். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், 'மதுரை, வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில், சுற்றுச்சூழல் மற்றும் சிறு கனிம சுரங்க விதிகளுக்குப் புறம்பாகவும், அனுமதியே இல்லாமலும் பாறைகளை வெட்டியெடுக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதோடு, அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடும் ஏற்படும். ஆனால் அதிகாரிகள் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை' என்று பதிவிட்டுள்ளார்.
என்னவாகும் கொண்டையம்பட்டி மலை?
கொண்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்ரீகாந்த் "கொண்டையம்பட்டி மலை வண்ணாத்திக்கரடு மலை மீது விதிகளை மீறி கல்குவாரிகள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மேய்ச்சல் புறம்போக்கு நிலம் சுமார் ஆறு ஏக்கர் காணாமல் போய்விட்டது. குவாரியில் இருந்து கற்களை எடுத்துவரும் கனரக வாகனங்கள் நீர்வழிப்பாதை பாதுகாப்பு சட்டத்தை மீறிதான் வருகின்றன.
குவாரிகள் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளி பட்டா நிலத்தில்தான் பாதை இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் பென்னிகுயிக் ஓடை வழியாக டிப்பர் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிக கற்களை ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள்.
இவர்களை போக்குவரத்து அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை. வகுத்து மலை, வண்ணாத்திகரடு மலைகளில் காட்டு மாடு, பன்றி, முயல், மான், நரி என 50 வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கிரானைட் குவாரிகளால் அவை அழிந்துபோகவும் வாய்ப்பிருக்கிறது. எனவே அமைச்சர் எங்களது பகுதிக்கு வந்து ட்ரோன் சர்வே நடத்த வேண்டும். தற்போது குவாரி உரிமையாளர்களால் எனது உயிருக்கே கூட ஆபத்து இருக்கிறது? என்கிறார் பதற்றமாக கச்சக்கட்டி கிராமத்தில் குவாரிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் ஞானசேகரன், 'என் வீட்டு வழியாக ஒரு நாளைக்கு 300 லாரிகள் கடக்கின்றன. எட்டு கிலோ மீட்டர் வரை இருந்த விவசாயம்.
தற்போது இந்த குவாரிகளால் முற்றிலும் அழிந்துவிட்டது. கல்குவாரிகளில் நான்கு அடி குழிபோட்டு வெடிமருந்து நிரப்பி வெடிக்க வைக்க வேண்டும். ஆனால், போர் வண்டியை கொண்டு வந்து நான்கரை இன்ச் போர் போட்டு அதில் வெடிமருந்து வைத்து வெடிக்க வைப்பதால் அதிர்வு ஏற்பட்டு வீடுகள், கிணறுகள் பாதிக்கப்படுகின்றன. தோட்டா வெடிக்கு பதிலாக அதிக சக்தி வாய்ந்த நாணல் வெடி வெடிக்கிறார்கள். இதன் தாக்கம் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு இருக்கிறது. குவாரியால் எங்க ஊர் கோழிகளுக்குக் கூட குஞ்சு பொரிப்பதில் பிரச்னை இருக்கிறது. கரு கலைந்துவிடுகிறது.
கேன்சரால் பாதிக்கப்பட்ட மக்களும் இங்கு அதிகம். குவாரியில் வேலை செய்யும் 45 வயதுள்ளவர்களுக்கு பற்கள் இல்லை. குவாரிகளுக்கு 28 மீட்டர் ஆழம் வரைதான் அனுமதி. இங்குள்ள குவாரிகளோ 200 அடி ஆழம் வரை இருக்கிறது. அதில் மனிதர்கள், விலங்குள் விழுந்து கிட்னி, சுவாச பிரச்னை, இறந்திருக்கிறார்கள். காவல்துறையும் குவாரி தரப்பினருக்கு உடந்தை பஞ்சாயத்து தலைவராக யார் வரவேண்டும் என்பதைகூட குவாரி உரிமையாளர்கள்தான் முடிவு செய்கிறார்கள். பாலமேடு, சேந்தமங்களம் பகுதிகளில் இருக்கும் குவாரிகளை வெளிப்படைத்தன்மையுடன் ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.
சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ கருப்பையா, "நான் தொகுதி மக்களுக்கு தேவையான குடிதண்ணீர், சாலை வசதி, மின்சாரம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறேன். இன்னும் குவாரிகள் பக்கம் திரும்பவில்லை" என்றார். கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபுவிடம் பேசினோம். "மதுரை வாடிப்பட்டி, மேலூர், திருமங்கலம் பகுதிகளில் விதிமீறிய குவாரிகளில் ஆய்வு நடத்தப்படும்.
சட்டவிரோதமாக இயங்கிக்கொண்டிருக்கும் குவாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட குவாரிகள் மூடப்படும்." என்றார்.
விதித்த அபராதத்தையே வசூல் செய்ய முடியவில்லை என்பதுதானே பிரச்னை!
What's Your Reaction?

