KGF- புஷ்பா படங்களின் பாணியில் ’கேடி தி டெவில்’: டீசருக்கு அமோக வரவேற்பு
கன்னட நடிகர் துருவ் சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள "கேடி தி டெவில்" திரைப்படத்தின் தமிழ் டீசர் வெளியிட்டு நிகழ்வு சமீபத்தில் நடைப்பெற்றது. இதில் சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரிப்பில், இயக்குநர் பிரேம் இயக்கத்தில், துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "கேடி தி டெவில் (KD The Devil)".
பான் இந்தியா வெளியீடாகப் பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையிலும், தமிழ்ப் பதிப்பின் டீசரை பத்திரிகையாளர் சந்திப்பில் திரையிட்டுக் காட்டினர்.
இயக்குநர் பிரேம் பேசுகையில், "எனக்குத் தமிழ்ப் படங்கள் மிகவும் பிடிக்கும். 'கேடி' ஒரு வித்தியாசமான படம். 1970களில் நடந்த உண்மைச் சம்பவம் தான் இப்படம். டீசர் பார்த்திருப்பீர்கள், படத்தின் களம் புரிந்திருக்கும். டீசர் எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சஞ்சய் தத் சாருக்கு நன்றி. இந்தப் படம் கண்டிப்பாகத் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும். நான் தர்ஷனுடன் 'ஜோகையா' செய்யும் போதிலிருந்தே சென்னையில் தான் டப்பிங், சி.ஜி. எல்லாம் செய்து வருகிறோம். துருவ் சர்ஜா இப்படத்தில் கலக்கியிருக்கிறார். அனைவருக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன்” என்றார்.
நடிகர் சஞ்சய் தத் பேசுகையில், "சென்னையில் இருப்பது மகிழ்ச்சி. தமிழ்ப் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். லோகேஷ் இயக்கத்தில் நடித்துள்ளேன். ரஜினி சாருடன் நான் நிறைய இந்திப் படங்கள் நடித்துள்ளேன். கமல் சார் படங்களும் பிடிக்கும். 'கேடி' படத்தைப் பொறுத்தவரை மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. படக்குழுவினர் என்னை மிக அன்போடு பார்த்துக்கொண்டார்கள். இது அட்டகாசமான மாஸ் ஆக்ஷன் படம். துருவ் சர்ஜா நன்றாக நடித்துள்ளார். அனைவருக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன்" என்றார்.
நடிகர் துருவ் சர்ஜா பேசுகையில், "எல்லோருக்கும் வணக்கம். இது என் 6 வது படம். டீசர் எல்லோருக்கும் பிடித்திருக்குமென நம்புகிறேன். இந்தப் படத்தில் சான்ஸ் தந்த பிரேம் சார், தயாரிப்பாளர் சுப்ரீத், வெங்கட் சாருக்கு நன்றி. எங்கள் குடும்பத்துக்கே ஃபேவரைட்டான சஞ்சய் தத் சார் இந்தப் படத்தில் நடித்ததற்கு நன்றி. ரவிச்சந்திரன் சார், ரமேஷ் அரவிந்த் சார் நடித்துள்ளார்கள். ஷில்பா ஷெட்டி மேடம் இன்னும் அப்படியே இளமையாக உள்ளார். அட்டகாசமாக நடித்துள்ளார். இது நல்ல மாஸ் மசாலா படம். அனைவருக்கும் பிடிக்கும். பார்த்து ஆதரவு தாருங்கள்” என்றார்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசரானது இதுவரை 14 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






