சரக்கடித்தால் கட்டி வைப்போம்.. காதலித்தால் மொட்டை அடிப்போம்: மீனவ கிராமத்தின் அடடே ரூல்ஸ்
வேதாரண்யம் அருகேயுள்ள சிறுதலைக்காடு என்ற மீனவ கிராமத்தில், மது அருந்தி வம்பு இழுத்தாலோ, 18 வயதுக்கு குறைவான பெண்களுக்கு காதல் தொல்லை கொடுத்தால் தண்டிக்கப்படுவீர்கள் என 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காப்புக் கட்டினால் ஊரை விட்டு போகக்கூடாது’, ’ஆடு, மாடு வைத்திருப்போர் தெருக்களில் அவிழ்த்து விடக்கூடாது’ இப்படியான ஊர் கட்டுப்பாடுகள்தான் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், வேதாரண்யம் அருகேயுள்ள சிறுதலைக்காடு என்ற மீனவர் கிராமத்தின் ஊர் கட்டுப்பாடுகள் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இக்கிராமத்தினருக்கு மீன்பிடித் தொழில்தான் பிரதானம். இந்நிலையில், இந்த கிராம மக்களுக்கு அப்படி என்ன கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள் என்று ஊர்மக்கள் சிலரிடம் விசாரித்தோம். “ஊர் தலைவரான நமகோடி மற்றும் பஞ்சாயத்தார் தலைமையில் மாரியம்மன் கோயிலில் நடைபெற்றக் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
முதலாவது தீர்மானம் ‘தொடர்ச்சியாக மது அருந்தி, மதுவுக்கு அடிமையாகி, பிறரிடம் வம்பு, தும்பு என்று சண்டைப் போட்டால் ஒருநாள் முழுவதும் மாரியம்மன் கோயில் தூணில் கட்டிவைக்கப்படுவார்’ என்றும், ‘அவர் ஓட்டிவரும் பைக் பறிமுதல் செய்யப்படும்’ என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது தீர்மானமாக ‘18 வயது நிறைவடையாத பெண்களை திருமணத்திற்கு வற்புறுத்தவோ, காதல் என்று கூறி பின் தொடர்வதோ, மன ரீதியாக நெருக்கடி கொடுப்பதோ கடுமையான குற்றமாக கருதப்படும். அதிலும் அக்கா, தங்கையுடன் பிறந்த ஒருவன் இவ்வாறு குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் கோயிலுக்கு முன்பாக குற்றம் செய்தவரே தனக்கு மொட்டை அடித்துக் கொள்ளவேண்டும்’ என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தீர்மானங்கள்தான் தவறு செய்வோரை எச்சரிக்கும் விதமாக ஊர் எல்லையில் பேனராக வைக்கப்பட்டிருக்கிறது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. ‘சுய ஒழுக்கத்தை போதிக்கும் இந்த கட்டுப்பாடுகள் வரவேற்கத்தக்கது’ என்று சமூக ஆர்வலர்கள் இதனைப் பாராட்டி வரும் வேளையில், சிலர் ‘சட்டத்தை இவர்கள் கையில் எடுத்து தண்டனை கொடுப்பது எந்தவிதத்தில் சரி. அப்புறம் போலீஸ், நீதிமன்றங்கள் எதற்கு?’ என விமர்சிக்கவும் செய்கின்றனர்.
இந்தக் கட்டுப்பாடுகள் எங்க கிராம மக்களுக்கு மட்டும்தான். இதனால், ஒருவித அச்சம் ஏற்பட்டு யாரும் தவறு செய்ய மாட்டார்கள். மதுவுக்கு அடிமையாகி பல குடும்பங்கள் நாசமாகி இருக்கின்றன. அதேபோல் சிறு வயதிலேயே காதல் கத்தரிக்காய் என்று சிலர் தங்கள் வாழ்க்கையை கெடுத்துக்கொள்கின்றனர். இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகாவது தவறு செய்பவர்கள் திருந்துவார்கள் என நம்புகிறோம்’’ என்றனர்.
கிராமத் தலைவர் நமகோடியிடம் பேசினோம். “எங்கள் கிராமத்தில் இளைஞர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் மது குடித்துவிட்டுப் பிரச்னை செய்கின்றனர். அரசாங்கமே 18 வயசுக்கு மேல்தான் திருமணம் செய்யவேண்டும் என்கிறது. ஆனால், 18 வயசுக்கு கீழே உள்ள பெண்களைக் கிண்டல் செய்வது, காதல் என்ற பெயரில் அவர்களை நாசமாக்கி குழந்தையைக் கொடுப்பது ஆகியவை எங்களுக்குத் தவறானதாகத் தெரிந்தது. அதற்காகத்தான் இந்தக் கட்டுப்பாடுகளை விதித்தோம்’’ என்றவரிடம், “கட்டிவைப்பது, மொட்டை அடிப்பது போன்ற தண்டனைகள் கொடுப்பது சட்டத்தை நாமே கையில் எடுத்துக்கொள்வது போல் இருப்பதாக சொல்கிறார்களே?’’ என்றோம்.
“சும்மா பயத்தை உண்டாக்கத்தான் இப்படி கட்டுப்பாடு விதிச்சிருக்கோம். ஆனா, அப்படி செய்யமாட்டோம்’’ என ஜகா வாங்கினார்.
(கட்டுரையாளர்: ஆர்.விவேக் ஆனந்தன் , குமுதம் ரிப்போர்ட்டர், 15.07.2025)
What's Your Reaction?






