எனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன் - மகாவிஷ்ணு

ஆன்மிகச் சொற்பொழிவு என மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாகக் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு, காவல்துறை பதிலளிக்க வேண்டும் என, சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sep 27, 2024 - 19:25
எனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன் - மகாவிஷ்ணு
mahavishnu

ஆன்மிக சொற்பொழிவாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மகாவிஷ்ணு என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசினார். மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் விதமாக அவரது பேச்சு இருந்ததை ஒட்டி பெரும் சர்ச்சை கிளம்பியது. பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் பேச்சின் போதே தனது எதிர்ப்பினைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளின் பிறப்பை அவமதிக்கும் விதமாக பேசியதாக பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணுவுக்கு எதிராக  சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 7ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், முழு பேச்சை கேட்காமல், தனக்கு எதிராக பொய் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருக்கிறார்.

எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கைதானதாகவும், காவலில் வைத்து போலீசார் விசாரித்த போது முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், தனது அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகள் என அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 3ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow