பட்டாசு ஆலை வெடி விபத்து - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு..!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே குகன்பாறை செவல்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கும் இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
அதில் மருந்துக்கலவை பணியில் ஈடுபட்டிருந்த கோவிந்தராஜ் (27) என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார். மேலும் குருமூர்த்தி என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வெடி விபத்தில் உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி, விபத்தில் உயிரிழந்த கோவிந்தராஜின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், 100 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குருமூர்த்தி(19) என்பவருக்கு ரூ. 2 லட்சமும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படுவதாக அறிவித்தார்.