காவிரி உபரி நீரை மாதாந்திர நீருடன் சேர்க்கக் கூடாது - மணிவாசன் பேட்டி
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் முடிந்த பிறகு பேட்டியளித்த தமிழ்நாடு அரசு நீர்வளத் துறை செயலாளர் மணிவாசன் கூட்டத்தில் பேசப்பட்டது குறித்துப் பகிர்ந்து கொண்டார்.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 34வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹெல்தர் தலைமையில் இன்று தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநில அரசு அதிகாரிகள் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறை செயலர் மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்த மணிவாசன்...
“காவிரி மேலாண்மை ஆணையத்தின் இன்றைய கூட்டத்தில் அணைகளில் உள்ள நீர் இருப்பு, மழையின் அளவு மற்றும் பில்லிகுண்டுலுவில் வந்தடைந்த நீர் தொடர்பான விவகாரங்களை விவாதித்தோம். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நீர் ஆண்டில் 119.46 டி.எம்.சி நீர் உச்சநீதிமன்ற உத்தரவுப் படி தமிழ்நாட்டுக்கு வரவேண்டும், ஆனால் தற்போது வரை 200க்கும் மேலான டி.எம்.சி நீர் தமிழகத்துக்கு வந்துள்ளது.
இந்த 200க்கும் அதிகமான டி.எம்.சி நீரில் உபரி நீர் அதிகமாக வந்துள்ளது. ஆகவே இதனை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டிய மாதாந்திர நீருடன் சேர்க்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
ஏனெனில் ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரே சாகுபடிக்கும், குடிநீருக்கும் பயன்படும். ஆனால், அதிக மழை காரணமாக வரும் உபரி நீரை ஓரிரு வாரத்தில் திறந்து விட்டு அதனை தமிழகத்துக்கு தர வேண்டிய நீர் கணக்கில் வைக்க முடியாது என்பதே நமது வாதமாக இருக்கிறது. இக்கூட்டத்திலும் அதனையே வலியுறுத்தியுள்ளோம்.” என்று சொன்னவரிடம் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதா என்று கேட்டதற்கு...
“மேகதாது அணை விவகாரமென்பது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்ட நிகழ்ச்சி நிரலிலேயே வராது என்பதால் அது தொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை. அதேபோல மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறையிடம் இருந்து எந்த தகவலும் இல்லை” என்று கூறினார்.
What's Your Reaction?