மாம்பலம் காசி விஸ்வநாதர்: திருமண வரம் அருளும் ஜோதிர்லிங்கத் தலம்!
காசி விஸ்வநாதர் கோயில், சுயம்பு ஜோதிர்லிங்கமாகத் திகழும் அருள்தலமாகும். விசாலாட்சி அம்மனுடன் அருள்பாலிக்கும் இத்தலத்தில் வழிபட்டால் திருமணத் தடை நீங்கி, குழந்தைப் பேறு, ஆரோக்கியம் மற்றும் மனநிம்மதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
ஆபத்தில் காத்திடும் மகா விஷ்ணு ஆளரியாய் அருளாட்சி செய்யும் தலம், அஹோபிலம் . அதுபோலவே மனதால் நினைத்தாலே மகிழ்வான வாழ்வு அருளும் மகேசன் எழுந்தருளியுள்ள தலம், மஹாபிலம்.
மஹாபிலமா? அது எங்கே இருக்கிறது? என்று கேட்டீர்கள் என்றால், அந்தத் தலத்தின் இன்றைய பெயரைச் சொன்னால் போதும். 'ஓ' தெரியுமே என்பீர்கள்.
ஆம். அந்தத் தலத்தின் தற்போதைய பெயர், மாம்பலம்! மாம்பலம் தான், ஆதியில் மஹாபிலம்.
நானூறு வருடம் ரீவர்ஸில் சென்று பரமன் அங்கே ஃப்ளாஷ் ஆன ஃப்ளாஷ் பேக்கைப் பார்த்துவிட்டு வருவோம்.
ஆதிகாலத்தில் வில்வாரண்யமாக அதாவது வில்வமரக் காடாக இருந்த பகுதி இது. அருகே ஒரு சிறு கிராமமும் அந்த கிராமத்துக்கு நீர் ஆதாரமான ஏரியும் இருந்தது. (அந்த ஏரி இப்போது எங்கே இருக்கு? என்றெல்லாம் கேட்கக் கூடாது)
அடர்ந்த அந்தக் காட்டுக்குள், ஆடு மாடு மேய்க்கவும், அடுப்பெரிக்க விறகு கொண்டு வரவும் போவார்கள் கிராம மக்கள். அப்படி ஒரு சமயம் அங்கே போனவர்களில் சிலர் ஓர் இடத்தில் பளீரென்ற ஒளி தெரிவதைப் பார்த்தார்கள். மின்னல் போல் ஒளி பளிச்சிட்ட அந்த இடத்தை கொஞ்சம் பயத்தோடும் கொஞ்சம் ஆர்வத்தோடும் நெருங்கிச் சென்று பார்த்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
சுயம்பு வடிவாக சிவலிங்கம் ஒன்று அங்கே புதைந்திருப்பதையும், அதன் வெளித் தெரியும் பகுதியே பளிச்சிடுவதையும் கண்டார்கள். சிலிர்த்தார்கள். அங்கேயே வைத்து வணங்கினார்கள். பிறகு ஊருக்குள் எடுத்துச் சென்று கோயில் அமைத்து இருத்திடத் தீர்மானித்தார்கள். உருவாய் அருவாய் தானே உருவான அந்தத் திருமேனியை பூமிக்குள் இருந்து எடுப்பதற்காக தோண்டினார்கள்... தொடர்ந்தார்கள்.
காலையில் தொடங்கியவர்கள் மாலை வரை தோண்டியும் மகேசனின் லிங்கத் திருமேனி அணு அளவும் அசையவில்லை. அதனால், துவண்டார்கள்.
மகேசனின் திருவை எடுத்திட, மறுநாள் வந்து முயற்சிக்கத் தீர்மானித்துச் சென்றார்கள். விடிந்ததுமே வந்து விடைவாகனரை வணங்கிவிட்டு, விறுவிறு என்று தோண்டத் தொடங்கினார்கள். சிறு துளையில் இருந்து அவர் தோன்றியதுபோல் இருந்த நிலை மாறி, துளை, 'மா' துளை ஆனது. ஆனாலும் மகேசனின் லிங்கத் திருமேனிதர் எங்கே இருந்து முளைத்து எழுந்திருக்கிறது என்பதைக் கண்டறியவே முடியவில்லை. களைத்து அமர்ந்தபோது முக்கண்ணனின் எண்ணம், அவர்களின் மனக்கண்ணில் தெரிந்தது.
ஆமாம், 'ஊருக்குள் நான் வரப் போவதில்லை. என்னை தரிசிக்க ஊரார் வரட்டும்!" என மகாதேவன் நினைப்பதை அறிந்தவர்கள்,
உமைகாந்தன் திருமேனியை ஊருக்குள் கொண்டு செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, சுயம்புவாக அங்கே சொக்கேசன் தோன்றியிருக்கும் தகவலை மட்டும் ஊருக்குள் கொண்டுசென்றார்கள்.
எல்லோரும் திரண்டு வந்தார்கள். அரன் திருமேனி அசையாமல் நிற்பது கண்டு அதிசயித்தார்கள். அப்போது நீறு பூசிய வேதியனே வேடம் பூண்டு வந்ததுபோல் வயோதிகர் ஒருவர் அங்கே வந்தார். “இந்தப் பரமனின் திருமேனியைப் பார்த்தால், பாதாளத்தில் முளைத்து வருவதுபோல் இருக்கிறது. எனவே இங்கே இருந்து இவரை அகற்றுவது இயலாது. ஆகவே அரனுக்கு இங்கேயே ஆலயம் அமைப்போம்!" சொன்னார்.
காசிவாசியே இங்கே வந்து முளைத்து வந்துள்ளார். அதை குருவடிவில் காளிதாசனும் மகரிஷியும் இணைந்தது போன்ற திருவினராக முதியவர் வடிவில் வந்து அவரே உணர்த்தியிருக்கிறார் என்பதை புரிந்துகொண்டார்கள் மக்கள். எல்லோரும் இணைந்து அதே இடத்தில் கோயில் ஒன்றைக் கட்டினார்கள். காசியில் இருந்தே இங்கே முளைத்து வந்திருக்கிறார் இறைவன் எனத் தோன்றியதால், இறைவனுக்கு காசிவிஸ்வநாதர் என்றே திருப்பெயர் சூட்டினார்கள்.
அம்பிகையையும் இருத்தி, விசாலாட்சி என அழைத்தார்கள். ஈசனையும், ஈஸ்வரியையும் ஆராதித்தார்கள். மனக்கவலைகள் எல்லாம் நீங்கி மகிழ்ந் தார்கள்.
அதுவரை வில்வவனம் என்றே அழைக்கப்பட்ட அந்தப் பகுதிக்கு, அன்று முதல் மகாபிலம் என்ற பெயர் வந்தது. பாதாளத்தை பிலம் என்றும் சொல்வது உண்டு. ஈசன் தோன்றிய இடம் தோண்டத் தோண்ட பெரும் பாதாளமாக இருந்ததால் மகாபிலம் என்றார்கள்.
அதுவே ஊருக்குப் பேர் ஆனது. மக்கள் நெரிசல் கூடி ஊர் சீர் மாறிப் போனது போல், அதன் பேரும் மாறி, மாம்பலமாகிவிட்டது. வில்வத்துக்கு வடமொழியில் பில்வம் என்று பெயர். மகத்தான வில்வம் நிறைந் திருந்ததால், மகாபில்வம் என்றழைக்கப்பட்டு அதுவே மகாபிலம் ஆகி இப்போது மாம்பலம் ஆகிவிட்டதாகவும் ஒரு கருத்து உண்டு. சிறியதாகத் தோன்றிய கோயில், காலப் போக்கில் பல மாற்றங்கள் கண்டது. விசாலாட்சி சமேதராக அன்று எழுந்தருளிய காசிவிஸ்வநாதர், இன்றும் கருணை குறையாமல், கனிவு குன்றாமல் பக்தர்களுக்குப் பரிவுடன் அருள்கிறார்.
வழக்கமாக காசியில் இருந்து கொண்டு வரப்படும் பாண லிங்கத் திருமேயினை பிரதிஷ்டை செய்தே காசிவிஸ்வநாதர் என்று பூஜிப்பார்கள். ஆனால், இங்கே இருப்பவரோ தருவின் கீழ் தானே தோன்றிய லிங்கத் திருவினர். அப்புறம் இவருக்கு எப்படி காசிவிஸ்வநாதர் என்று பெயர்சூட்டினார்கள் பக்தர்கள்?
அவர்களுக்கு எவ்வாறு அந்த எண்ணம் தோன்றியது?
அதற்கான விடை, விடைவாகனர் அங்கே தோன்றியபோது தம்மை வெளிப்படுத்த பெரும் ஜோதியாகக் காட்சி தந்ததுதான். ஈசனின் பன்னிரு ஜோதிர்லிங்கங்களைப் போலவே இந்தத் திருமேனியும் ஜோதியில் தோன்றியதால், இவர் ஜோதிர் லிங்கமாக, காசிவிஸ்வநாதராகப் பெருமை பெற்றிலங்குகிறார். அம்பாளும் விசாலாட்சி என்ற திருப்பெயரோடு திகழ்கிறார். குறுகலான சிறிய தெருவுக்குள் இருக்கும் கோபுரம், சட்டென்று விஸ்வரூபம் எடுக்கிறது. பக்தர்தம் சிறிய மனதுக்குள் பெரிய திருவினரான பரமன் குடியேறி இருப்பதுபோல. கோயிலுக்குள் நுழைந்ததுமே உடல் சிலிர்க்க, உள்ளம் நெகிழ பக்தி அதிர்வுகளால் மனம் பரவசத்தில் திளைப்பதைப் பூரணமாக உணர முடிகிறது.
கிழக்கு தெற்கு என இரண்டு வாயில்கள் இருக்கின்றன. இரண்டு பக்கமும் அழகான கோபுரங்கள். ஒன்று சுவாமிக்கு. மற்றது அம்பாளுக்கு!
கிழக்குப் பார்த்த சன்னதியில் விஸ்வநாதர் சிறிய லிங்க வடிவில் தரிசனம் தருகிறார். மூர்த்தி சிறிதாக இருந்தாலும் வரம் தருவதில் இவரது கீர்த்தி மிகப் பெரியது என்கிறார்கள் பக்தர்கள். திருவடி திருமுடி காண அயனும் மாலும் போட்டியிட்டதுபோல் இவரது திருவடியும் பிலத்தின் கீழ் எங்கே இருக்கிறது என்பது அறியமுடியா அற்புதம்.
தெற்கு பார்த்து திருக்காட்சி தரும் விசாலாட்சியை தரிசிக்கும்போது, அன்னையைக் காணும் அகமகிழ்வு ஏற்படுகிறது. இந்தத் தாயிடம் வேண்டினால், திருமணத் தடை நீங்கி மணமாலை கழுத்தில விழும் சந்தான தோஷம் நீங்கி சத்தான மழலை மடிதவழும், தீராநோய் தீரும் என்று தாங்கள் அனுபவித்த நிஜங்களை அடுத்தவருக்கும் சொல்கிறார்கள் பலன்பெற்றவர்கள்.
கனகச்சிதமாக அமைந் திருக்கிறார்கள். கணபதி, கந்தன், துர்க்கை, சண்டேஸ்வரர், நாயன்மார்கள், சமயக் குரவர்கள், பைரவர், நவகிரக நாயகர்கள் எல்லோருக்கும் சன்னதிகள் உண்டு. மண்டபத் தூண்களில் சங்கரநாராயணர், யோக நரசிம்மர், அர்த்தநாரீஸ்வரர், காமாட்சி, நந்தீஸ்வரர், சஞ்சீவிராயர், கருடாழ்வார் ஆகியோரின் திருமேனிகள் அழகோடு அமைந்துள்ளன. சரபேஸ்வரர், பிரத்யங்கரா உள்ளிட்ட எல்லா தெய்வ வடிவங்களையும் ஆராதிக் கிறார்கள் பக்தர்கள்.
சிவாலயங்களுக்கே உரிய ஆகம முறைப்படியான அத்தனை வழிபாடுகள், உற்சவங்கள், வாகனத் திருவுலாக்கள், தேர்த் திருவிழா என எல்லாமே குறைவின்றி நடத்தப்படுகின்றன. தான் இருக்கும் இடத்தை பிரகாசமான ஒளியால் வெளிப்படுத்திய இத்தல இறைவன், தன் பக்தர்களின் வாழ்வையும் பிரகாசிக்கச் செய்கிறார் என்பது, நிதர்சனமான உண்மை.
ஜெயாப்ரியன்
What's Your Reaction?

