எதிரிகள் ஜாக்கிரதை-மாலைமதி
மங்களம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர, பூங்கொடி அவரை கவனித்துக்கொள்வதாக உறுதியளிக்கிறார். அலுவலக வேலையால் வெளியூர் செல்லும் மாணிக்கம், சிங்கத்தின் பொறுப்பற்ற நடத்தையால் வேதனை அடைகிறார். குடும்பத்திற்கு ஒரு நல்ல மருமகள் தேவை என்று வள்ளி கூறியபோது, மாணிக்கத்தின் மனதில் பூங்கொடி மீதான ஈர்ப்பு உருவாகிறது.
வீட்டுக்கு வந்துவிட்டான் மாணிக்கம். மெஸ் ஜரூராக நடந்தது. ஆட்கள் சந்தோஷமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மாணிக்கத்தைப் பார்த்ததும் ஓடி வந்து அம்மாவின் உடல் நிலையை விசாரித்தார்கள்.
"தம்பி! இந்த நேரத்துலகூட, அம்மா படுத்திருக்கற கஷ்டமான சூழ்நிலைல மெஸ் நடக்கட்டும்னு நீங்க சொன்னது எங்களை நெகிழ வச்சிருக்கு தம்பி. பண உதவி என்ன வேணும்னாலும் கேளுங்க, நாங்க செய்யறோம். அந்தம்மா கையால வாய்க்கு ருசியா வருஷக்கணக்கா சாப்பிடறோம். அவங்க எங்களுக்கும் அம்மாதான். அந்த மகராசி பிழைச்சு வந்து, எங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போடணும்!"
"நீங்கள்ளாம் தர்ற ஆதரவாலதான் எங்க குடும்பமே வாழுது! உங்களைப் பட்டினி போட நான் விரும்பலை! அதனாலதான் தங்கச்சியை வரவழைச்சேன்!"
அவர்கள் அத்தனை பேரும் சாப்பிட்டுப் போக, கூட்டம் கலைந்தது. சிங்கம் வந்து உட்கார்ந்து, நாலு சப்பாத்தியும் மூன்று மசால் தோசையும் சாப்பிட்டது.
"என்னாங்கடா ஆள் ஆளுக்கு இப்படி நெஞ்சை நக்கறீங்க? பாசம் கரை புரண்டு ஓடுது! ஏண்டா ஓவர் ஆக்ட் குடுக்கறீங்க?”
"மாணிக்கண்ணே! உனக்கு தோசை ஊத்தட்டுமா?"
"எனக்கு பசிக்கலை வள்ளி, நீ சாப்பிடு!"
“அம்மா இப்படி இருக்கும்போது எனக்கும் சாப்பிடப் பிடிக்கலை!"
"எனக்கும் அதேதான்! சில பேர் மாதிரி வயிறுதான்
வாழ்க்கைனு இருக்க முடியலை!"
"நேரா பேசேண்டா! ஒருவேளை அம்மா செத்துட்டா, அப்புறம் காலம் பூரா சாப்பிடாம பட்டினி கிடப்பீங்களாடா?”
மாணிக்கம் ஆவேசமாக எழுந்துவிட்டான். வள்ளி பிடித்து நிறுத்தினாள்.
“விடு அண்ணே, இவனுக்கெல்லாம் நன்றி, பாசம் இதுக்கெல்லாம் அர்த்தம் தெரியாது. ஆரம்ப முதலே இதயம் இல்லாமலே வளர்ந்தாச்சு. நீ ஆத்திரப்பட்டு லாபமில்லை. நமக்கு அம்மா வேணும். நீ உள்ளே வா!"
இருவர் முகத்திலும் வெறுப்பு இருந்தது.
"இவன் இருக்கிற லட்சணத்துக்கு அம்மா இவனுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்க ஆசைப்படறாங்க. யாரோ ஒரு பெண்ணுக்கு செய்யற துரோகம் இது!"
"நீ கவலையே படாதே! இவனைக் கட்டிக்க ஒரு பைத்தியக்காரிகூடச் சம்மதிக்க மாட்டா. அம்மா இந்த முயற்சியில தோக்கப்போறாங்க!"
சகலமும் கதவுக்கு வெளியே நின்ற சிங்கம் காதில் விழுந்தது. அவனது கோபம் அதிகரித்தது. உள்ளே ஒரு சவாலும் ஓடியது.
அடுத்த நாள் காலையில், மருத்துவ அறிக்கை வந்து விட்டது. பீபி ஓரளவு குறைந்திருந்தது. சர்க்கரை சுத்தமாக இல்லை. மற்ற சில பிரச்னைகள் இருந்தன. டாக்டர் மகேந்திரன் வந்து விட்டார். ரிப்போர்ட் பார்த்தார்.
"ரொம்ப பலவீனமா இருக்காங்க. நாலஞ்சு நாள் இங்கே பெட் ரெஸ்ட்ல இருக்கிறது நல்லது. மாணிக்கம் வந்தா சொல்லிடு. நீ கவனமா பார்த்துப் பராமரிச்சாலே தெளிஞ்சிடுவாங்க!" மங்களத்தை அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றினார்கள் மாணிக்கம் வந்ததும் விவரம் சொன்னாள் பூங்கொடி. "அம்மாவை நான் பார்த்துக்கறேன். நீங்க வேலைக்குப் போகலாம்."
"சரிங்க, ரொம்ப நன்றி! பணம் ஏதாவது கட்டணுமா?”
கடைசில கட்டிக்கலாம். இப்ப அவசரமில்லை!"
மாணிக்கத்துக்கு ஆபீசிலிருந்து அவசர ஃபோன் வந்தது. பேசினான். "இந்த நேரத்துல வெளியூர் போகச் சொன்னா எப்படி? அட்லீஸ்ட், சாயங்காலமாவது அம்மாவை வந்து பார்க்கலாம் இல்லையா, அதிலும் மண்ணைப் போடுவீங்களா? ஆக்ஷன் எடுங்க. நான் போக முடியாது!" கோபமாக மாணிக்கம் ஃபோனை வைக்க, "என்ன பிரச்னை மாணிக்கம்?"
"ஒரு வாரம் வெளியூர் போகணுமாம். கலெக்ஷனாம்! எப்படிங்க முடியும், அம்மா இப்படி இருக்கும்போது? தங்கச்சி மெஸ் பாக்கணும். அண்ணன்தான் பொறுப்பில்லாதவன். நானும் இல்லைன்னா எப்படி?" "ஏன், நானில்லையா? நானும் உங்க வீட்ல ஒருத்தினு நீங்க நெனச்சா, நம்பினா, தைரியமா புறப்படுங்க. நான் பார்த்துக்கறேன்!"
மாணிக்கம் நெகிழ்ந்தான். “நிச்சயமா நீங்களும் எங்கள்ள ஒருத்தர்தான்! எங்களை விட மேலே. ஆனா சுமக்க வேண்டிய நாங்க, விட்டுட்டுப் போறது சரியா?"
"மாணிக்கம், உங்களுக்கு உத்தியோகம் முக்கியம். அவருக்குப் பொறுப்பு இல்லை. நீங்கதான் பொறுப்போடு அம்மாவுக்குப் பக்க பலமா இருக்கீங்க. பார்த்துக்க ஆளில்லைன்னா, வேற வழியில்லை. அதான், நான் இருக்கேனே. நீங்க புறப்படுங்க. வாங்க, அம்மாகிட்ட பேசிடலாம்!"அம்மா அறைக்குள் நுழைய, விழித்திருந்தார். பூங்கொடியைப் பார்த்ததும், அந்தச் சுருங்கிய கண்களில் ஒரு வாஞ்சை பொங்கியது. பூங்கொடி வந்து அந்தக் கூந்தலைத் தடவித் தந்தாள்.
"எந்தப் பிரச்னையும் இல்லை. நாலஞ்சு நாட்கள் என்கூட இருந்தா, புதுத் தெம்போட வீட்டுக்குப் போகலாம்!"
"எனக்கந்த நம்பிக்கை நிறைய இருக்கும்மா, பூங்கொடி!" பூங்கொடி, விஷயத்தை அம்மாவிடம் முழுமையாகச் சொன்னாள். "மாணிக்கத்துக்கு ஆபீஸ்ல பிரச்னை இருக்கு. உங்களைவிட்டுப் போக மனமில்லை. உங்களுக்கு மகன்தான் பக்கத்துல இருக்கணும்னு எண்ணம் இருக்கா?" "இல்லைம்மா. அவன் ஓடினாத்தான் குடும்பம் நடக்கும். நீ இருக்கும்போது எனக்கு என்னம்மா கவலை? நான் தெம்பா இருப்பேன்!"
"மாணிக்கம், கேட்டீங்களா? இனிமே தைரியமா போவீங்களா?" மாணிக்கம் சந்தோஷமாகச் சிரித்தான்.
"உங்களால எப்படிங்க மத்தவங்க மனசுக்குள்ள புகுந்து, அவங்க காயங்களை சுலபமா ஆற்ற முடியுது?”
"காரணம், நான் அநாதை! தாய் தகப்பனை அறியாத அநாதை இல்ல வாசல்ல வீசப்பட்ட குழந்தை. அநாதைங்கிற காயத்தைவிட பெரிய காயம், இந்த உலகத்துல எதுவுமே இல்லை, மாணிக்கம். அதனாலதான் மற்றவங்க உடல் மற்றும் மனக்காயங்களை ஆற்றணும்னு நான் விரும்பறேன்!"
மாணிக்கத்துக்குக் கண்கள் கலங்கிவிட்டன. மங்களம் அழுதேவிட்டாள்.
"இதென்னது, நீங்க அழக்கூடாது. பீபி ஏறும். எல்லாம் தெரிஞ்சுக்கணும். ஆனா, எதுக்கும் கலங்கக் கூடாது. மாணிக்கம், நீங்க புறப்படுங்க. உங்க ஃபோன் நம்பரைக் கொடுங்க, நான் அப்டேட் பண்றேன், அம்மா பற்றி!" மாணிக்கம் நன்றி சொல்லி, வீட்டுக்கு வந்தான். மெஸ் நடந்துகொண்டிருந்தது. வள்ளி பரபரப்பாக இருந்தாள். இவன் வந்ததும் புகார் படித்தாள். "காலைல மெஸ்ஸுக்கு வர்றவங்க கிட்ட வம்பு வளர்க்கறார். இவர்பாட்டுக்கு டிபனைச் சாப்பிட்டுட்டு வேலைக்குப் போகாம இந்த மாதிரி ரகளை பண்ணிட்டுத் திரிஞ்சா எப்படிண்ணே?" என்ன, சின்னவன் வந்ததும் என்னைப் பத்திப் போட்டுக்குடுக்கறியாக்கும்?"
"உண்மையைச் சொல்லாம இருக்க முடியுமா? அண்ணே, அம்மாவுக்கு எப்படி இருக்கு இப்ப?” "ரூமுக்கு மாத்தியாச்சு. நாலஞ்சு நாள் இருக்கணுமாம். நான் ஆபீஸ்
வேலையா வெளியூர் புறப்படணும், வள்ளி!" "ஐயோ, நீயும் இல்லைன்னா எப்படிண்ணே?" "பாசக்கார மகனுக்கும் தன் காரியம்னு வந்தா, கம்பி நீட்டற புத்திதான் வருது. இதுல என்னைப் பேச யோக்கியதை இருக்கா?" "வாயை மூடு! பூங்கொடி நர்ஸ் பார்த்துக்கறேன்னு உறுதி தந்ததாலதான் நான் போறேன்!”
"ஓ, பூங்கொடி பேச்சைக் கேட்டுத்தான் இனி இந்தக் குடும்பம் நடக்கப்போகுதா?" "வேற வழி? உன்னை மாதிரி பொறுப்பில்லாத பிள்ளைகளைப் பெத்த அம்மாக்களுக்கு பூங்கொடி மாதிரி நல்லவங்க உதவினாத்தான் உண்டு. பக்கத்துல இருந்து பார்த்துக்க யோக்கியதை இல்லை, இதுல அடுத்தவங்களைப் பத்தி வாய் கிழிய விமர்சனம்!"
"என்னடா ஓவரா பேசற?" அவன் கையை ஓங்கிக்கொண்டுபாய, வள்ளி மிரண்டாள். "இதப்பாரு, நீ என்னை அடிச்சா தப்பில்லை. ஆனா, நான் உன்னைத் திருப்பி ஒரு அடி அடிச்சாக்கூட அசிங்கமா போயிடும். அதுவும் மெஸ் ஆட்கள் முன்னால வச்சு! உன்னால பத்து காசுக்குப் பிரயோஜனமில்லை. இதுல உனக்குக் கோவம் வேற வருதா? அம்மாவுக்கு ஏன் இந்த நோய்? காரணம் நீதான். உன்னாலதான் அம்மா மனசு எப்பவும் கலங்குது. இதெல்லாம் எப்ப உனக்குப் புரியும்?"
வள்ளி அருகில் வந்தாள். "விடு அண்ணே! நீ உன் நிதானத்தை இழக்காதே. உன் வேலையை கவனி! நம்ம அம்மா செஞ்ச பாவம்! வேறென்ன?"
மாணிக்கம் பேக் செய்துகொண்டு புறப்பட்டான். "நீ ஜாக்கிரதையா இரு, வள்ளி. இவனை ஒரு துணையா நம்ப முடியாது. மாப்பிள்ளையை முடிஞ்சா ராத்திரி வரச்சொல்லு!" "சொல்லிட்டேன் அண்ணே, வருவார்!" "இவன் ஏடாகூடமா ஏதாவது பேசுவான். மாப்பிள்ளை டென்ஷனாகாம பார்த்துக்கோ!" "அவருக்குத் தெரியும், அண்ணே!"
"வெளில கிளம்பணும்னா என்னெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு! அம்மா எத்தனை நாள் இந்த பாரங்களைத் தாங்க முடியும்! எனக்குக் கவலையா இருக்கு, வள்ளி. நம்ம குடும்பம் எந்தத் திசைல போகணும்னு எனக்கே புரியலை." "நான் சொல்றேன். இந்த வீட்டுக்கு ஒரு மருமக வரணும். அவ குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கணும். அது உனக்கு வரப்போற மனைவியால மட்டுமே முடியும்!" வள்ளி அதைச் சொன்ன நொடியில், குபீரென மாணிக்கத்துக்குப் பூங்கொடியின் முகம் வந்து போனது. உடம்பில், ஒரு சன்னமான சிலிர்ப்பு ஓடியது. இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு சிங்கமும் நின்றது.
What's Your Reaction?