எதிரிகள் ஜாக்கிரதை-மாலைமதி
தீபாவளி வேலைப்பளுவால் மங்களம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு சிங்கமுத்துவின் பிரச்னையான நடத்தை சங்கடத்தை ஏற்படுத்த, நர்ஸ் பூங்கொடியின் அன்பும் மனிதநேயமும் அனைவரையும் கவர்கிறது. குறிப்பாக மாணிக்கத்தின் வாழ்க்கையில் புதிய மாற்றத்துக்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்குகின்றன.
அது பண்டிகைக் காலம். அம்மா மங்களம் நன்றாகப் பலகாரங்கள் செய்வாள். தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பாகவே நிறைய பலகார ஆர்டர்களை எடுத்துக்கொண்டு ராப்பகலாகப் பாடுபடுவாள். அதில் கணிசமாகச் சம்பாதித்தாள். வள்ளி இங்கே இருந்த வரை அவளும் நன்றாக ஒத்துழைப்பாள். மாணிக்கமும் முறுக்குப் பிழிவது போன்ற வேலைகளைச் செய்து தருவான்.மெஷினுக்குப் போய் மாவு திரித்துக்கொண்டு வந்து, செய்த பலகாரங்களை பேக் செய்து, உரிய இடத்தில் சேர்ப்பது போன்ற வேலைகளை மாணிக்கம் செய்வான்.
சிங்கத்தால் ஒரு உதவியும் இல்லை. 'ஓமப்பொடில உப்பு பத்தலை, பாதுஷா பிசுபிசுன்னு ஒட்டுது, லட்டுல சக்கரை அதிகம்' என ஆயிரம் குறைகளைச் சொல்லிக்கொண்டு, போக வர அத்தனைப் பலகாரங்களையும் சிங்கம் தின்று தீர்க்கும். ஒரு தீபாவளிக்குச் சிங்கம் ஓவராக மிக்சரைச் சாப்பிட்டு, பேதி புடுங்கி, ஆஸ்பத்திரியில் ட்ரிப்ஸ் ஏற்றி, அம்மாவுக்குச் சம்பாதித்த பணத்தில் பாதி கரைந்தது.
இந்த முறை வள்ளியும் இல்லாமல், மாணிக்கத்துக்கும் ஆபீசில் லீவு இல்லாததால், அம்மாவே தனியாகப் பாடுபட்டதால், தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் பீபி ஏறி, அம்மா மயக்கம் போட்டு விழுந்தாள். அந்த நேரம் வீட்டில் யாரும் இல்லாமல் போக, மெஸ் ஆட்கள் பார்த்து மாணிக்கத்துக்குத் தகவல் தர, மாணிக்கம் பதறி வந்து அம்மாவை ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தான்.
டாக்டர் பரிசோதித்து, "எக்கச்சக்கமா பீபி ஏறியிருக்கு. இது நல்லதில்லை! மற்ற எல்லா பரிசோதனைகளும் செய்யணும். அட்மிட் பண்ணிடுங்க!" என்றார். அவசர சிகிச்சைப் பிரிவில் மங்களம் சேர்க்கப்பட, மாணிக்கம் முன்பணத்தைக் கட்டிவிட்டுக் கூடவே இருந்தான். மாலையில் சிங்கம் வந்தது.
"எப்படி இப்படி ஆச்சு?” என ஆயிரம் கேள்விகள் கேட்டு, அங்கும் தன் மேதாவிலாசத்தை காட்டியது.
"எவ்ளோ பணம் கட்டினே?”
"இருபத்தஞ்சாயிரம்!""இது பகல் கொள்ளை! எதுவும் தொடங்காம, என்னான்னு தெரியாம எதுக்கு இருபத்தஞ்சாயிரம்? ஆஸ்பத்திரியைக் கட்டி வச்சிட்டு, முகமூடி போடாத கொள்ளைக்காரங்க பணம்புடுங்கறாங்க!" இதை ஒரு டாக்டர் கேட்டுவிட்டார். அது ஒரு நியாயமான மருத்துவமனை.
"யாருங்க அவரு, ஓவரா பேசறாரு! அந்த பேஷன்ட்டை உடனே டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்புங்க. பணமே வாங்காத ஆஸ்பத்திரிக்கு அவங்க தாராளமா போகட்டும்!”
வெளியே போயிருந்த மாணிக்கம் விவரம் கேட்டு ஓடி வந்து, டாக்டரின் காலில் விழுந்து கெஞ்சி, "மன்னிச்சிடுங்க டாக்டர், அவன் ஒரு கிறுக்கு! நாங்க எப்பவும் இங்கேதான் வருவோம். இதப் பாருங்க, எங்கம்மாவோட ஃபைல்" எனக் கேட்டு மன்றாட, “சரி, அந்த ஆளை வெளில அனுப்புங்க! இல்லைன்னா நான் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்!"
வெளியே மாணிக்கம் வர, கூடவே ஆட்களும் வர, மாணிக்கம் பேச, சிங்கம் கடுப்பாகித் திட்ட, அந்த ஆட்கள் கழுத்தை பிடித்துத் தள்ள, நர்ஸ் பூங்கொடி உள்ளே வந்தாள். "வேண்டாம். அவர்தான் புரியாம பேசறார்னா, அவரை நீங்களும் வெளில தள்ளி முரட்டுத்தனமா நடக்காதீங்க!" "நம்ம பெரிய டாக்டர் கடும் கோபத்துல இருக்கார் சிஸ்டர்! அந்த ஆள் நம்ம ஆஸ்பத்திரியைக் கொள்ளைக்கூடம்னு பேசறார்!" "நான் டாக்டர்கிட்ட பேசிக்கறேன். நீங்க நல்லவிதமா அவரை அனுப்புங்க!”
மாணிக்கம், சிங்கத்திடம் கெஞ்சிக் கேட்டு, அவனை வெளியே அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அதன்பிறகு மாணிக்கம் வந்து சேர, நர்ஸ் பூங்கொடி உள்ளே அழைத்தாள். டாக்டர் மகேந்திரன் இருந்தார்.
" பூங்கொடி, நீ எதுக்கு அந்த ஆளுக்கு காம்ப்ரமைஸ் பண்ணிப் போறே? அவன் அவதூறு பேசறான் ஆஸ்பத்திரி பற்றி!” "தெரியும் டாக்டர், இது பப்ளிக் ப்ளேஸ். பல பேஷன்ட்டுகள் வந்து போற எடம். இன்னிக்கு சோஷியல் மீடியாவுல எல்லாத்தையும் எழுதற காலம். நாலு பேர் நல்லதைச் சொன்னா, நாப்பது பேர் தப்பாப் பேசறாங்க. பொது வாழ்க்கைல ஈடுபட்ட நமக்கு, இது நல்லதில்லை டாக்டர். உங்களுக்குத் தெரியாததில்லை!”
அவள் பேசப் பேச, பிரமிப்புடன் பார்த்தான் மாணிக்கம். "சரிம்மா, நீ பார்த்துக்கோ!" "இவங்கம்மா மங்களம் நம்ம பேஷன்ட். ரொம்ப நல்லவங்க. பிரமாதமா மெஸ் நடத்தறாங்க! அன்னமிட்டவங்க, அன்னைக்குச் சமம்னு சொல்லுவாங்க இல்லையா, டாக்டர்?”
"ஓகே! பூங்கொடி சொல்லுக்கு என்னிக்கு மறு பேச்சு பேசியிருக்கேன் நான்?” பூங்கொடி அழகாகச் சிரித்தாள். "சரி, மங்களம்மாவுக்கு எல்லா டெஸ்ட்டும் எடுத்தாச்சா?"
"ஆச்சு டாக்டர், ரிப்போர்ட் நாளைக்கு வந்துடும். அதுக்கப்புறம் சிகிச்சையைத் தொடங்கிடலாம். வாங்க மாணிக்கம், உங்க கிட்ட விவரங்களைச் சொல்றேன்!"
அவளை மாணிக்கம் கொஞ்சம் ஆச்சர்யம் கலந்து பின்பற்றினான். நர்ஸ் பூங்கொடிக்கு அங்கு தனி கேபின் இருந்தது. அதனுள் நுழைந்தான் மாணிக்கம்.
"உக்காருங்க மாணிக்கம்!" "ஸாரி சிஸ்டர், எங்கண்ணன் நடத்தைக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்!"
"எத்தனை தடவை மன்னிப்பு கேப்பீங்க? விடுங்க, அது முடிஞ்சு போன கதை. தோண்ட வேண்டாம்!" "அம்மா நிலைமை "ரிப்போர்ட் வரணும்! ரொம்ப பலவீனமாத்தான் இருக்காங்க. அவங்களுக்கு உழைப்பு அதிகம்! அதுக்கான தெம்பு உடம்புல இல்லை மாணிக்கம். இனியும் மெஸ்ல பாடுபட்டா, அது பிராக்டிகலா நடக்குமானு தெரியலை!”
"அவசியமில்லை சிஸ்டர், நான் நல்லா சம்பாதிக்கறேன். வள்ளியோட கல்யாணக் கடன் கொஞ்சம் இருக்கு. அது ஒரு பெரிய பிரச்னை இல்லை, அடைச்சிடலாம்! அம்மா மெஸ்ஸை மூடினா, ஓய்வு கிடைக்கும்!"
"அது கஷ்டம், மாணிக்கம்!"
"ஏன் இப்படிச் சொல்றீங்க?"
பல "எனக்கு அவங்க மன நிலை தெரியும். வயசான பேஷன்ட்டுகளை நான் இங்கே கையாள்றேன் மாணிக்கம். மனோதத்துவ ரீதியா சில சங்கதிகளைப் பார்க்கணும். இந்த மாதிரி உழைச்சு குடும்பத்தை நிலை நிறுத்தினவங்களை திடீர்னு முடக்கிப் போட்டா, அவங்க மன நிலை பாதிக்கும். அவங்க ஒடம்புல தெம்பில்லைனாலும் அந்த உழைப்புதான் அவங்க உசிரைப் புடிச்சு நிறுத்தியிருக்கு. அதைத் தடுக்கறது ஃப்யூஸ் புடுங்கற மாதிரி!"
"சரிங்க சிஸ்டர், உழைக்கத் தெம்பு வேணுமே?"
"குறைச்சுக்குங்க. மெஸ்ல நூறு பேருக்குச் போடற சாப்பாட்டை ஐம்பதுனு ஆக்குங்க. ராத்திரிக் கடையை க்ளோஸ் பண்ணுங்க. படிப்படியா குறைச்சா பாதிப்பு தெரியாது!” "இது நல்ல யோசனை! இதைவிடப் பெரிய விவகாரம், அண்ணன் கல்யாணம். அவனுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்க அம்மா துடிக்கறாங்க. இதுல நீ தலையிடாதேனு அவன் முகத்துல அடிக்கறான். எனக்கு நானே தேடிப்பேன்னு சொல்றான்!" "தேடிக்கட்டும். விட்ருங்க!” "அம்மா கேக்கலியே! அவன் குணத்துக்கு எவளும் சரிப்பட மாட்டா. ஆனா, யாராவது ஒருத்தி வந்து அவன் வாழ்க்கை வளமாகணும்னு அம்மா ஆசைப்படறாங்க!” "இது சிக்கல்தான்!” "இதை அம்மாவுக்குப் புரியவைக்க நான் முயற்சி செஞ்சு தோத்துக்கிட்டிருக்கேன்!" "அம்மா எண்ணம், அண்ணனுக்கு மனைவி வர்றதா, இல்லை, வீட்டுக்கு மருமகளா?" "ரெண்டும் ஒண்ணுதானே சிஸ்டர்?”
"இல்லை, பொறுப்பான ஒரு மருமகள்தான் வரணும்னா, உங்களுக்குக் கல்யாணம் நடந்தா போதுமே, மாணிக்கம்?"
"எனக்கு இப்ப அந்தச் சிந்தனை இல்லை. மூத்தவனுக்கு முடியாம எங்கம்மா இதைப் பத்தி யோசிக்கவே மாட்டாங்க!”
"நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க, அவரவருக்குக் கதவு திறந்தா, உள்ளே நுழைய வேண்டியதுதான். வழி விட்டு நிக்க, வாழ்க்கை என்ன பொதுப் போக்குவரத்தா?”
"அழகாப் பேசறீங்க!”
“சரி, ஒரு சர்ஜரி இருக்கு. டாக்டர் கூப்பிடுவார். உங்கம்மா அஞ்சு நாளாவது இங்கே எங்க பராமரிப்புல இருக்கவேண்டியிருக்கும்!”
"தாராளமா! நான் லீவு போட்டுர்றேன்!”
"தேவையில்லை மாணிக்கம், நீங்க ஏன் லீவை வீண் பண்றீங்க? நான் அவங்களைப் பாத்துக்கறேன். தைரியமா இருங்க!" "அதுதான் பூங்கொடி!" என்றபடி டாக்டர் மகேந்திரன் உள்ளே நுழைந்தார். "இந்த ஆஸ்பத்திரில பேருக்குத்தான் நான் தலைமை டாக்டர். ஆனா, அட்மிட் ஆகறவங்க அத்தனைப் பேரும் பூங்கொடியைக் கேட்டுத்தான் அட்மிட் அவாங்க. எங்கமருந்து குணப்படுத்தறது நாற்பது சதவீதம்தான். பூங்கொடியோட பரிவும் பாசமும்தான் அறுபது சதவீதம். நோயாளிகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணிச்சவ பூங்கொடி!" "டாக்டர், போதும்! ரொம்ப ஜில்லுனு இருக்கு. இதுக்கு மேல தாங்காது!" "இது ஐஸ் இல்லை, பூங்கொடி. உண்மை!" "டாக்டர், அநாதையான என்னை எடுத்து வளர்த்து ஆளாக்கிப் படிக்க வச்சு, நர்ஸ் பயிற்சி தந்து, இதே ஆஸ்பத்திரில பெரிய சம்பளத்துல வேலையும் தந்து, மகாராணி மாதிரி வச்சிருக்கீங்களே? இதுக்கு நான் செய்யற சேவைகளெல்லாம் போதாது டாக்டர்!”
"சரி, சர்ஜரிக்கு நேரமாச்சு. வேலையைப் பார்க்கலாம், வா!" அவர்கள் போவதை ஒரு லயிப்புடன் பார்த்தான் மாணிக்கம். பூங்கொடியின் இருப்பிடமே இந்த ஆஸ்பத்திரிதான். வாரம் ஒரு நாள் லீவு! அந்த நாளில், தான் வளர்ந்த ஆசிரமத்துக்குப் போய், அங்கே தங்கியிருந்து சேவை செய்வாள். ஒவ்வொரு சனியும் பூங்கொடிக்காக அந்த இல்லத்தில் குழந்தைகள் முதல் முதியோர் வரை காத்திருப்பார்கள். அந்த நாள் அவர்களுக்குத் திருநாள்! அவரவர் மனக்குறை போக்க மனுக்களோடு காத்திருப்பார்கள். பூங்கொடிக்கும் அவர்களைப் பார்க்காமல் இருக்க முடியாது. மக்கள் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துகொண்டவள் பூங்கொடி. அந்த ஆஸ்பத்திரி இன்று உயர்ந்து நிற்பதே அவளால்தான். அவள் வாழ்விலும் ஒரு காற்றழுத்த மண்டலம் உருவாகத் தொடங்கிவிட்டது. எப்படி?
What's Your Reaction?









